
வீட்டினுள் நுழைந்ததும் அதிர்ந்து நின்றான் பரணி. பாத்திரங்கள் தாறுமாறாக சிதறி கிடக்க, குழந்தைகளை அணைத்தவாறு அழுது கொண்டிருந்த அண்ணியை பார்த்து, ''என்னாச்சு அண்ணி... ஏன் அழுதுட்டு இருக்கீங்க... வீடு வேற அலங்கோலமாக கிடக்கு... என்ன நடந்தது?'' என்று பதற்றத்துடன் கேட்டான் பரணி.
''தம்பி... அந்த வேலுத்துரை, 'ஆறு மாசமா வாடகை பணம் தர முடியாத உங்களுக்கு எல்லாம் எதுக்கு வீடு, வாசல்... புருஷனை இழந்துட்டு, இப்படியெல்லாம் வாழணுமா'ன்னு கண்டபடி பேசி, சாமானெல்லாம் தூக்கியெறிஞ்சுட்டு போயிட்டான்,'' என்று கூறி, கதறி அழுதாள்.
''ப்ளீஸ் அண்ணி... அழாதீங்க...''
''உங்க அண்ணன் இறந்த அன்னிக்கே இந்த புள்ளைங்கள கூட்டிட்டு, எங்காவது போய் செத்து தொலையறேன்னு சொன்னேன் கேட்டியா... இப்பப் பாரு, எங்களுக்காக நீ கஷ்டப்படுற,'' என்றாள்.
''அப்படியெல்லாம் பேசாதீங்க அண்ணி... கடவுள், எல்லாரையும் இந்த உலகத்தில் வாழத்தான் படைச்சிருக்கான். நாளைக்கு உங்க பிள்ளைங்க தலையெடுத்து, அவங்க நல்லா வாழறத, நீங்க பாக்க வேணாமா... நான், எங்க அண்ணன் பிள்ளைகளயும், உங்களயும் நிச்சயமா காப்பாத்துவேன்; கவலைப்படாதீங்க... சைக்கிள் ரிப்பேர் கடை ஆரம்பிச்சதுனாலயும், பாங்க் லோன் கட்டினதாலயும், வீட்டு வாடகை கொடுக்கிறது தள்ளி போச்சு. இந்தாங்க... இதில காய்கறி இருக்கு; எழுந்து முகம் கழுவிட்டு, இதை எல்லாம் ஒழுங்குபடுத்திட்டு, சமையல் செய்யுங்க. நான் அந்த வேலுத்துரைய பாத்துட்டு வந்துடறேன்,'' என்றான்.
''தம்பி... அந்த பாவி, தனியா இருந்த என்கிட்ட, தாறுமாறாகப் பேசி, வீரத்தை காட்டிட்டு போயிருக்கான். உன்னை என்ன சொல்வான்னு தெரியல. எதுக்கும் கோபப்படாம பாத்து பேசுப்பா. நாமெல்லாம் ஏழைங்க; பயந்து தான் ஆகணும். நீயும் கோபம் வந்து, உன் வீரத்தை காட்டி, பிரச்னை ஆகிடப் போகுது,'' என்றாள்.
''எனக்கு தெரியும் அண்ணி... நீங்க பயப்படாதீங்க.''
''ஆறு மாசமா வாடகை கொடுக்க தெரியல. வீடு தேடி வந்து சத்தம் போட்டதும், புறப்பட்டு வர்றியா... சம்பாதிக்க துப்பு இல்லாதவனுக்கு எல்லாம் எதுக்கு வீடு. பேசாம பிளாட்பாரத்தில் இருக்க வேண்டியதுதானே...''
''தப்புத் தான் சார்... பாங்கில் கொஞ்சம் லோன் வாங்கிட்டேன்; அதை கட்டினதால, என்னால வாடகை கொடுக்க முடியல. இன்னும், பத்து நாளைக்குள் எப்படியாவது பாதி பணத்தையாவது தந்திடுறேன்.''
''இங்கே பாரு... பொம்பளையாச்சேன்னு வெளியே இழுத்துப்போட்டு கதவை பூட்டாம வந்தேன். பேசாம வீட்டைக் காலி செய்துட்டு கிளம்பற வழியப் பாரு. எனக்கும் குடும்பம் இருக்கு; பிழைக்க வேணாமா... தராதரம் தெரியாதவங்கள குடிவச்சா இப்படித்தான்...''
அவன் கோபமாக சத்தம் போட, கைகளை கட்டியபடி தலைகுனிந்து நின்றான் பரணி.
வீட்டினுள் இருந்து வெளியே வந்த வேலுத்துரையின் மகள், பரணியை பார்த்ததும், ''சார் நீங்களா...'' என்றவள், தன் அப்பாவிடம் திரும்பி, ''இவர் எதுக்குப்பா இங்கே வந்திருக்காரு...'' என்று கேட்டாள்.
''உனக்கு, இவனை தெரியுமா?'' என்று கேட்டான் வேலுத்துரை.
''தெரியும்ப்பா... ரெண்டு மாசத்துக்கு முன் ஒரு நாள், பிரெண்டோட பைக்ல வரும்போது, என் புடவை தலைப்பு வீலில் மாட்டி, நடு ரோட்டில் கீழே விழுந்தேன்னு சொன்னேன் இல்லயா... இவர் கடைக்கு முன்னால தான் அந்த சம்பவம் நடந்துச்சு. இவர்தான் உடனே, ஓடி வந்து, கட்டியிருந்த வேட்டியை எடுத்து என்மேல் போர்த்தி, வீலில் மாட்டியிருந்த புடவைய எடுத்து கொடுத்து, என் மானத்தை காப்பாத்தினாரு. இவரை எப்படி என்னால மறக்க முடியும்...'' என்றவள், ''உங்களுக்கு என்னை தெரியலயா?'' என்று பரணியை பார்த்து கேட்டாள்.
''அந்த சம்பவம் ஞாபகம் வருது; ஆனா, அந்த பொண்ணு நீங்கதான்னு எனக்கு தெரியல. நான், உங்க முகத்தை சரியா பாக்கல...'' என்றான்.
அடக்கமாக பதிலளிக்கும் பரணியை பார்த்தான் வேலுத்துரை.
''சரிப்பா, இவர் என்ன விஷயமா உங்கள பாக்க வந்திருந்தாலும் அவருக்கு வேண்டிய உதவியை செய்து கொடுங்க. எனக்கு நேரமாச்சு; நான் வரேன்...'' என்று கூறி வெளியே சென்றாள்.
''சார்... எங்க கஷ்டத்துக்காக, உங்களுக்குத் தர வேண்டிய பணத்தை கொடுக்காதது எங்க தப்புதான்; மன்னிச்சிடுங்க. நான் சொன்ன மாதிரி, பத்து நாள்ல மூணு மாச வாடகைய நானே வீடு தேடி வந்து கொடுத்துடறேன்...''
ஆஜானுபாகுவான அந்த இளைஞன், உடலை குறுக்கி, பவ்யமாக பேசுவதை பார்த்த வேலுத்துரைக்கு, தன் மனதிலிருந்த கோபத்தை, அவனுடைய நல்ல செயல் வலுவிழக்க செய்வதை உணர முடிந்தது.
''சரிப்பா... நீ கிளம்பு...''
'தனியாக இருந்த பெண்ணிடம் தாறுமாறாக பேசி, வீட்டில் இருந்த பாத்திரத்தையெல்லாம் தூக்கியெறிந்த தன் ஆணவம் தந்த வீரத்தின் முன், அன்பான நடவடிக்கையாலும், அடக்கத்தாலும், தன்னை அடிபணிய செய்த அவனது வீரமே, எதிரியை வீழ்த்துகிற, வீரத்தை கடந்த வீரம்...' என, நினைத்த வேலுத்துரை, அவன் போவதையே பார்த்தபடி நின்றான்.
பரிமளா ராஜேந்திரன்

