PUBLISHED ON : ஏப் 03, 2016

வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, எண்ணெய்ப் பசையான உடம்பு என்றால், பருக்கள் எளிதாக தோன்றும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது; அப்படிச் செய்தால், பருக்கள் அதிகமாகும்.
* நாம் பயன்படுத்தும் படுக்கை, தூய்மையான காட்டன் தயாரிப்பாக இருக்க வேண்டும். உடலுக்கு சூடு ஏற்படுத்தக்கூடிய பொருட்களாலான படுக்கையில் தூங்குவதை தவிருங்கள்.
* கோடையில், கண்சோர்வு மற்றும் கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை அலசுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.
* வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழந்து, சருமம் வறட்சி அடையும். இதனால், வியர்க்குரு, சிறு சிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னையை தவிர்க்க, சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்லலாம்.
* வெயிலில் வெளியே செல்லும் போது, கையில் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக் கொள்வது அவசியம். இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேனை, தண்ணீரில் கலந்து வைத்தும் குடிக்கலாம்.
* கோடை காலத்தில், தலைசுற்றல், வாந்தி மற்றும் உடல் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே உஷாராகி விடுங்கள். இவையெல்லாம், அதீத வெயில் காரணமாக, உங்கள் உடல், அபாய எல்லையை நோக்கி நகர்கிறது என்பதற்கான அறிகுறி. இதைக் தடுக்க, நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
* பிறந்த குழந்தைகளுக்கு உடம்பு அதிகம் சூடாகி விடும். உடல் உஷ்ணத்தை குறைக்க, துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, உடம்பை துடைத்து, காற்றோட்டத்தில் படுக்க வைக்கலாம். சூடு மிகவும் அதிகமானால், 'பிட்ஸ்' வரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நேர்ந்தால், உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள், வெளியில் சென்றால், கையில் குடை, தொப்பி, தண்ணீர் பாட்டில் மற்றும் உப்பு கலந்த மோர் எடுத்துச் செல்ல வேண்டும். இளநீர் மற்றும் பிரஷ் ஜூஸ் குடிக்கலாம்.
* தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், சிறுநீர் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
* தலைக்கு குளித்தவுடன் நன்றாக துவட்ட வேண்டும்.
* உள் பாவாடை, ஜட்டி மற்றும் எலாஸ்டிக் வைத்த பிரா இவற்றை இறுக்கமாக அணிவதால், அந்த இடத்தில் வியர்வை உறிஞ்சப்படாமல், 'பங்கஸ் மற்றும் இன்பெக் ஷன்' ஏற்படும். அதனால், தரமான பருத்தியாலான உள்ளாடைகளை அணியுங்கள். சாதாரண சோப்பு போட்டே குளிக்கலாம். தினமும், இரு வேளை குளித்தாலே, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.
* கோடைக் காலத்தில், வயதான சிலருக்கு பசி, ருசி, தாக உணர்ச்சி குறைந்து விடுவதால், தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவர். இது, சிறுநீர் பிரச்னை, நீர் இழப்பு என, அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லாமல், காலை முதல் இரவு வரை, இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
* வயதானவர்கள் சிலர், பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மனக்குழப்பத்திற்கு ஆளாகி, பேச்சு எங்கோ திசை திரும்பிவிடும். தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், உப்பு கலந்த மோர் இரண்டு டம்ளர் கொடுத்தாலே, சரியாகி விடுவர்.
* கையில் எப்போதும் ஒரு எலுமிச்சை பழம் வைத்திருங்கள். தர்பூசணி, ஆரஞ்சு ஜூஸ், கிர்ணி மற்றும் இளநீர் தினமும் எடுத்துக் கொள்வது அவசியம்.
* காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வெளியில் போவதை தவிர்ப்பது நல்லது.
இவற்றை பின்பற்றினால் வெயில் காலமும் சுகமே!

