PUBLISHED ON : ஏப் 03, 2016

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து வருகிறார், 90 வயது ஏழை பாட்டி!
ஈரோட்டில் இருந்து, 46 கி.மீ., பயணித்தால், காங்கேயம் வரும். அங்கிருந்து பழனி போகும் பாதையில், 8 கி.மீ., தொலைவில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில்.
இங்கு தரிசிக்க வேண்டியவர்கள் இருவர். ஒன்று, முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன்; இரண்டாவது, பாக்கியலட்சுமி என்ற, 90 வயது பாட்டி!
ஏழு வயதில், திக்கு தெரியாமல் எப்படியோ இங்கு வந்து சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு, உலகமே இந்த வட்டமலை தான். கோவிலை கூட்டி சுத்தம் செய்து, பக்தர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் தரும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார். யாரிடமும் எதையும் கேட்க மாட்டார்; அவர்களாக கொடுத்தால் மறுக்க மாட்டார்.
இந்நிலையில், 50 - 60 ஆண்டுகளுக்கு முன், கோவில் அருகே உள்ள ஓடையில் தண்ணீர் எடுத்து வரும் போது, கூடவே, ஒரு செடியும் குடத்துடன் வர, அதை, அங்கேயே நட்டார்.
சில நாட்களுக்கு பின், ஓடைப்பக்கம் சென்ற போது, அந்த செடி செழித்து வளர்ந்திருந்தது. அதுவரை, சொந்த பந்தம் என்று எதுவும் இல்லாதிருந்த பாக்கியலட்சுமிக்கு, அந்த செடி ஏதோ தான் பெற்ற பிள்ளை போல தெரிய, அதன் அருகில் அமர்ந்து தடவிக் கொடுத்தார். சிறிது நேரம் கண்ணீர் விட்டவர், தொடர்ந்து தண்ணீர் விட்டார்.
அச்செடியின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும், பாக்கியலட்சுமிக்கு மகிழ்ச்சியை தர, பல செடிகள் மற்றும் விதைகளை கொண்டு வந்து அந்த பகுதியெங்கும் வளர்த்தார்.
எப்படி வளர்க்கணும், எந்த மரத்திற்கு எவ்வளவு குழி வெட்டணும், எந்த அளவு உரம் போடணும் என்று எதுவுமே அவருக்கு தெரியாது. அவ்வளவு ஏன், நட்டு வைத்த செடிகூட என்ன செடி என்பது தெரியாது. கிடைத்த இடத்தில் செடியை நட்டு, தண்ணீர் ஊற்ற மட்டுமே பாக்கியலட்சுமிக்கு தெரிந்திருந்து. அவரின் இந்த அன்பு, செடிகளுக்கு புரிந்திருந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு செடியும் வேம்பு, இலுப்பை, புளியமரமாக நன்கு வளர்ந்தது.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கும் அதிகமான மரங்கள் தற்போது, வனப்புடன் வளர்ந்துள்ளன. வட்டமலை பகுதியை பசுஞ்சோலையாக்கியுள்ள இந்த மரங்களின் நிழலில் தான், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாறி, களைப்பு நீங்குகின்றனர்.
புளியமரத்தில் இருந்து விழும் புளியம் பழங்களை பொறுக்கியெடுப்பதன் மூலம், இவருக்கு சொற்ப வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், அரசாங்கம் அந்த மரங்களுக்கு எண் போட்டு, அரசுக்கு சொந்தமாக்கி விட்டதால், இப்போது புளியமரத்து பலன் மட்டுமல்ல, எந்த மரத்தின் பலனும் பாக்கியலட்சுமிக்கு கிடைப்பதில்லை.
ஆனால், அதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல், 'இதுவரை, எம் பிள்ளை (மரம்) எனக்கு வருமானம் தந்திட்டு இருந்தான்; இப்ப அரசாங்கத்திற்கே வருமானம் தர்றான். சந்தோஷம் தான்...' என்கிறார் சிரிப்பு குறையாமல்!
அவர் பிள்ளை என்றதுமே, 'உங்க குடும்பம், சொந்த பந்தம்...' என்று இழுத்த போது, 'எல்லாமே இதுங்கதான்...' என்று கை காட்டுகிறார்; அவர் கைகாட்டிய திசையில் அவர் வளர்த்த மரங்கள், இவர் சொல்வதை ஆமோதிப்பது போல கிளைகளை அசைக்கின்றன.
தற்போது, கோவில் சாமான்கள் போட்டு வைக்கும் அறையில், சாமான்களோடு, சாமான்களாக வாழ்ந்துவரும் இவர், மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டுமே என்ற நேசம் காரணமாக, வட்டமலையைத் தாண்டி எங்கும் போவதில்லை.
பொதுப்பார்வையில் அப்பாவியாக தென்படுகிறார் பாக்கியலட்சுமி பாட்டி. இவருக்கு மரங்கள் வளர்ப்புக்கான நாட்டின் உயர்ந்த விருதை மட்டும் கொடுக்காமல், இனியும் கையேந்தவிடாமல், கவுரவமாக வாழ வழி செய்ய வேண்டும் அரசு. அது அவருக்கு கவுரவத்தை சேர்க்கும் என்பதற்காக அல்ல, நமக்கு புண்ணியத்தை தரும் என்பதால்!
'போயிட்டு வர்ரேன் தாயி...' என்று மரங்களை பெற்ற அந்த மகராசியின் கால்களில் விழுந்து, ஆசிபெற்று திரும்பிய போது, வட்டமலையை விட, மலையின் மீதுள்ள முத்துக்குமாரசாமி கோபுரத்தை விட உயரமாக, விசுவரூபமெடுத்து நின்றார் பாக்கியலட்சுமி பாட்டி!
எல்.முருகராஜ்

