
கடந்த வாரத்தில் ஒருநாள், 'இ - மெயிலில்' என்னென்ன வந்திருக்கிறது என, பார்த்துக் கொண்டிருந்தேன்.
தாய்லாந்து நாட்டிலிருந்து ஒரு வாசகியின் கடிதம் வந்திருந்தது. அவர், தென் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண். மிக செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்; கம்ப்யூட்டர் துறையில் மெத்த படித்தவர். சென்னையில் பணியாற்றிய காலத்திலேயே, பல ஆயிரங்களில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்; குடும்பத்தின் ஒரே வாரிசு.
இதே துறையில் தாய்லாந்து நாட்டில் பணியாற்றிய வரன் வந்ததும், சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். இப்போது இருவருமே தாய்லாந்தில் பணியாற்றுகின்றனர். அடிக்கடி, 'இ - மெயில்' மூலம் இருவரும் கடிதம் அனுப்புவர்.
தாய்லாந்திலிருந்து, அமெரிக்காவிற்கு வேலை வாங்கிக் கொண்டு, அங்கே செல்வது தான் இருவரின் திட்டமாக இருந்தது. இவர்களைப் போன்ற திறமையும், அனுபவமும் உள்ளவர்களுக்கு, அமெரிக்காவில், தலைக்கு, 15 லட்சம் ரூபாய் சம்பளமாம். அதற்கு மேலும் மாதச் சம்பளம் கிடைக்கிறது. இதில் ஒரு சோகம், இதற்கு வரியாக பெருந்தொகையை பிடித்துக் கொள்வர் என்பது தான்.
அந்த வரியையும் கட்டாமல் இருக்க, ஒரு உபாயம் கண்டுபிடித்து விட்டனராம் நம்மாட்கள். மிகப் பெரிய வீடு ஒன்றை கடனில் வாங்குவது, வரியாக கட்ட வேண்டிய தொகையை, கடனுக்கு கட்டி விடுவது... சொத்துக்கு சொத்து சேர்ந்து விடுவதுடன், வரியும் கட்ட வேண்டியது இல்லை.
இந்திய மூளை அபாரமானது; இந்தியாவிலேயே வரி கட்டாமல், 'டேக்கா' கொடுக்கத் தெரிந்தவனுக்கு, அமெரிக்கா எம்மாத்திரம்!
இப்படி, இந்தியர்கள் அங்கே மாளிகை வீடுகளை வாங்கிக் குவிப்பதால், அங்கேயே பிறந்து வாழும், மிடில் லெவல் அமெரிக்கர்களுக்கு, வந்தேறிகளான இந்தியர்கள் மீது, பொறாமை உணர்ச்சி தோன்ற ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்... இப்போது, கணவருக்கு மும்பையில் வேலை கிடைத்துள்ளது. தாய்லாந்தைவிட அதிக சம்பளம், கார், வீடு, கம்பெனியே கொடுத்து விடுகிறது. மனைவிக்கும் மும்பையில் வேலை கிடைக்கும்.
இந்தியா சென்று விடலாமென்று, கணவன் மனது சபலப்படுகிறது; ஆனால், மனைவிக்கு விருப்பமில்லை. அவருக்கு அமெரிக்கா சென்று சில ஆண்டுகளாவது வேலை செய்ய விருப்பம்.
அதற்கு அவர் கூறும் காரணங்கள்:
* இதே உழைப்புக்கு, அமெரிக்காவில் இரண்டு பங்கு அதிக ஊதியம் கிட்டும்.
* தொடர்பே இல்லாத கலாசாரத்தையும், மக்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்.
* அமெரிக்காவில் வசிக்கும்போது, அங்கேயே குழந்தை பெற்றுக் கொண்டால், அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். அதனால், பின்னாளில் பலன் அதிகம்.
- இப்படி அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்க, அப்பெண்மணி இது தொடர்பாக எனக்கு, இ - மெயில்' அனுப்பி இருந்தார். இதோ, கடிதத்தின் சுருக்கம்:
பாசம் மிக்க அண்ணனுக்கு —
நானும், என் கணவரும் இங்கு நலம். நீங்கள் நலமா? லென்ஸ் மாமா நலமாகவே, 'உற்சாகமாக'வே இருப்பார் என நம்புகிறோம்.
அண்ணா... ஒரு பெண்ணுக்கு, 'தான்' என்ற, 'சுயம்' - பெற்றோரோடு இருக்கும் போதோ, - தனியாக வாழும் போதோ தான் இருக்கிறது.
பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக திகழ்ந்தேன். கல்லூரியில் முதல் மாணவியானேன். பட்ட மேற்படிப்பில், 'கோல்டு மெடல்' பெற்றேன்.
சென்னையில் இருந்தபோது, பெரிய பெரிய, 'சாப்ட்வேர்' நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு, சம்பளம் கொடுத்து, என்னை வேலையில் அமர்த்தின.
சின்ன வயதில் இருந்தே நான் ஒரு, 'அன் லக்கி கேர்ள்!' டாக்டருக்கு படிக்க நினைத்தேன்... சீட் கிடைக்காமல் போனது. (கிடைக்காமல் போனது பற்றி இன்னும் சில எழுதி இருந்தார்.) இப்போது பாருங்கள்... என் அமெரிக்க கனவும் நிறைவேறாமல் போய் விடும் போலுள்ளது.
'லைசன்சுடு செக்ஸ்'காக ஒரு பெண், தன், 'சுயத்தை' இழப்பது தான் நம் நாட்டு பெண்களின் தலையெழுத்து போலும்...
— இப்படிக்கு,
அன்பு தங்கை.
- என எழுதியிருந்தார்.
'கணவனே கண்கண்ட தெய்வம்; கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்...' என்று இருந்த நம் பெண்களுக்கு, இன்று, தான், தன் சுயம் என்ற புதிய எண்ணம் உருவாகி வருகிறது. இது போன்ற எண்ணங்கள் பெண்களிடம் உருவாகி வருவதற்குக் காரணம், எதுவாக இருக்கும்? இந்த எண்ணம், பெண்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்குமா, -தீமை செய்யுமா?
மண்டையப் போட்டு குழப்பிக் கொண்டுள்ளேன்.
ஜெர்மனியைச் சேர்ந்த சமூக வாழ்வியல் பேராசிரியர் ஒருவர், உலகம் முழுவதும் சுற்றி, 5,000 தம்பதியரை பேட்டி கண்டு, தாம்பத்யம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். அவை:
* பெரும்பாலான காதலர்கள், முதலில் காதல் வயப்பட்டு இணைகின்றனர். நடு நடுவே சில தகராறுகள் எழுந்து, வளர்ந்து மறைகின்றன. இறுதியில், காதல் தீவிரமாகி, திருமணத்தில் நிறைவு பெறுகிறது.
* திருமணமானதும் சில நாட்கள் சுற்றுலா, உறவினர் வீட்டு விசேஷங்கள் என, காலம் கழிக்கின்றனர்.
* திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனதும், கணவன் - மனைவியின் பொழுதுபோக்கு கலந்துரையாடலிலேயே திருப்தி அடைகிறது. சாப்பிடும் போதும், இரவு படுக்கையறையிலும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் அதிகம்.
* போகப் போக பேச்சு குறைந்து, ஆறாவது ஆண்டு முதல், தேவைப்படும்போது பேசுவது என்றாகிறது. எட்டாவது ஆண்டிலிருந்து கணவன் - மனைவி பேசிக் கொள்வது மேலும் குறைந்து விடுகிறது. பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் பேச்சு தொடரும்.
* ஆரம்பத்திலிருந்த மோகம் கணவனுக்குக் குறைந்து விடுவதால், மனைவிக்கு அளிக்கும் அன்பளிப்பை படிப்படியாகக் குறைத்து விடுகிறான். பிறகு, தனியாகப் பணம் சேர்த்து, குஷியாகப் பொழுது போக்கத் துவங்குகிறான்.
* திருமணமான பின், மூன்றிலிருந்து எட்டு ஆண்டுக்குள்ளே தான், பெரும்பாலான விவாகரத்துக் கோரிக்கைகள் வருகின்றன.
- உங்கள் தாம்பத்யம் எப்படி? ஜெர்மன் பேராசிரியரின் கணிப்பு சரி தானா; ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!

