தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது, அவர்கள் வெளியிடும் நாணயங்களில் இங்கிலாந்து நாட்டு அரசர்களின் உருவத்தைப் பொறிப்பது வழக்கம். ஆனால், சில நாணயங்களில் மட்டும் இங்கிலாந்து நாட்டு அரசனின் தலையில் கிரீடம் இருப்பதில்லை. காரணம் தெரியுமா?' எனக் கேட்டார், 'பீச் மீட்டிங்' பெரியவர் ஒருவர். பின், அவரே விளக்கம் கொடுத்தார்...

'ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் ஒரு அரசர். வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால், அரசனுக்கு சாதகமாகவே தீர்ப்பு கூறுவர்; ஆகவே, வெளிநாட்டில் தான் வழக்கை நடத்த வேண்டும் என்று வாதாடினர்.

'இந்தியாவில் வழக்கை நடத்தலாம் என்று முடிவு செய்தனர். அப்போது, இந்தியாவில் சென்னை, மும்பை, கோல்கட்டா ஆகிய மூன்று இடங்களில் தான் நீதிமன்றங்கள் இருந்தன.

'மும்பை, கோல்கட்டா ஆகிய இரண்டு இடங்களில் வெள்ளைக்காரர்களே நீதிபதியாக இருந்ததால், சென்னை நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தது.

'விசாரணை முடிவில், 'அரசனின் ஆட்சிக்காலம் முழுவதும் தலையில் கிரீடம் அணிந்து கொள்ளக் கூடாது...' என்று தீர்ப்பு வழங்கினார், சென்னை நீதிபதி.

'அரசனும் - நீதிபதியின் தீர்ப்பை மதித்து, ஆட்சிக்காலம் முழுவதும் தலையில் கிரீடம் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே தான், அந்த அரசன் உருவம் பதித்த நாணயங்களில் கிரீடம் இல்லை...' என்றார் அந்தப் பெரியவர்.

'அப்படி ஒன்றும் சரித்திர ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. நேருவின் உருவம் பொறித்த நாணயமும், நம் நாட்டில் வெளியிடப்பட்டது; அதில், 'குல்லா' இல்லாமல் வழுக்கைத் தலையுடன் தான் நேரு உருவம் பொறிக்கப்பட்டது.

'இது போல் கிரீடம் இல்லாததும் ஒரு யதார்த்தத்துக்காக இருந்திருக்கலாம். சும்மா, 'ரீல்' விடாதீங்க...' என்றேன்.

- உண்மை தெரிந்தவர்கள் எழுதலாமே!

'முதன் முதலில் ஜனத் தொகை கணக்கெடுப்பு நடந்தது வரி வசூலிப்பதற்காகத்தான்; எவ்வளவு பேர் மொத்தம் இருக்கின்றனர்... யார், யார் வரி கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர் என்பதை கண்டுபிடிப்பதற்காக இங்கிலாந்தில் இந்த ஏற்பாடு வந்தது...' என்றார் குப்பண்ணா.

'அப்படியா...'

'ஆமாம்... 'சென்சரி' என்றால், ஆங்கிலத்தில் வரி என்று அர்த்தம்; சென்சரிக்காக எடுக்கப்படும் கணக்கு, 'சென்சஸ்' என்றாகியது!'

'உலகத்திலேயே அதிக ஜனத்தொகை உள்ள நாடு சைனா தானே?'

'சைனா என்பது வெள்ளைக்காரன் சொல்வது; ஆனால், சைனாக்காரனே சொல்வது, 'சீனா' என்று தான். பல வார்த்தைகள் இப்படி தமிழில், நாம் உச்சரிப்பது தான் அசல் உச்சரிப்பு. துருக்கியை வெள்ளைக்காரன், 'டர்க்கி' என்கிறான். ஆனால், துருக்கி மொழியிலேயே அதன் உச்சரிப்பைச் சொன்னால், 'துருக்கி' என்று தான் வரும்...'

'ரஷ்யாவைக் கூட சில பேர் ருஷ்யா என்று எழுதுகின்றனரே...' என்றேன்.

'ருஷ்யா என்பது தான் சரி; ரஷ்ய மொழிப்படி அதுதான் சரியான உச்சரிப்பு!'

'டீ இருக்கிறதே, அதன் உச்சரிப்பு கூட, 'டெ' என்பது தான் சரியாம்...' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

'அடெ...' என்றேன்.

'இந்தியாவில் எத்தனையோ வகை, 'இங்க்' தயாரிக்கின்றனர். ஆனால், டிராயிங் போடுகிற கறுப்பு இங்க்கை மட்டும் ஏன், 'இண்டியன் இங்க்' என்கின்றனர்?' என, என்னிடம் விசாரித்தார், அலுவலகத்தில் பயிற்சியாளராய் சேர்ந்துள்ள ஓவியர் ஒருவர்.

'இந்தியன் இங்குக்கும், இந்தியாவுக்கும் உள்ள சம்பந்தம், மைசூர் போண்டாவுக்கும், மைசூருக்கும் உள்ள சம்பந்தம் மாதிரி தான். ஆரம்பத்தில் சீனா மற்றும் ஜப்பான்காரர்கள் தயாரித்த இங்குக்குத் தான், 'இந்தியன் இங்க்' என்று பெயர் வைத்தனர்.

'அது மட்டுமல்ல, டயர், பென்சில் அழிக்கும் ரப்பர் இதற்கெல்லாம் கூட இந்திய ரப்பர் என்று தான் பெயர்...' என்றேன்.

'இந்திய முத்திரை போட்டால் நன்றாக வியாபாரமாகும், ராசியான பெயர் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்...' என்று, அருகே இருந்த லென்ஸ் மாமா பெருமைப்பட்டுக் கொண்டார்.

'இவை மட்டுமல்ல, 'என்சைக்ளோபீடியா ஆப் பிரிட்டானிகா' போன்ற உயர்ந்த புத்தகங்களுக்குப் போட்டிருக்கிற பேப்பர் மெல்லியதாக, ஆனால், மிகவும் வலுவானதாக இருக்கும். அதற்கு, 'ஆக்ஸ்போர்டு இந்தியா பேப்பர்' என்று தான் பெயர். மை அடைசல் இல்லாமல், சுத்தமாக அச்சை ஒற்றி எடுப்பதற்காக ஒருவிதமான பேப்பர் உபயோகிப்பர்; அதற்கும் இந்திய பேப்பர் என்று பேர்...'

'சரி தான்... நீ சொல்வதைப் பார்த்தால், இந்தியாவிலேயே தயார் செய்யும் காகிதத்துக்குக் கூட இந்திய பேப்பர் என்று பெயர் வைக்க முடியாது போலிருக்கிறதே...' என்றார், அப்போது அங்கே இருந்த குப்பண்ணா.

'எத்தனையோ குட்டிக் கதைகள் சொல்லி இருக்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அதன் மூலம் ஆன்மிகக் கருத்துகளை பரப்பியுள்ளார். மறைந்த காஞ்சிப் பெரியவர் அப்படிக் கதைகள் சொன்னதில்லையே... அருளுரை, ஆசியுரை இப்படித் தானே சொல்லியிருக்கிறார்...' என்று குப்பண்ணாவிடம் கேட்டேன்.

'இல்லையே... 1957ல் அவர் சென்னைக்கு வந்து, உபன்யாசங்கள் செய்தார். அப்புறம், 30 ஆண்டுகளுக்கு மேல் அவர் சென்னைக்கே வரவில்லை. அப்போது நான் சிறுவன்; என் தாயாருடன் தினமும் சென்று, அவரது உபன்யாசங்களைக் கேட்பேன்.

'அவர் சொன்ன நிறைய கதைகள் இப்போதும் என் நினைவில் இருக்கிறது; எல்லாம் வரலாற்று உண்மைக் கதைகள்...' என்றார் குப்பண்ணா.

'உதாரணத்திற்கு ஒன்றிரண்டு கதைகளைச் சொல்ல முடியுமா?'

'தாராளமாக... வித்தியாரண்யர் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் பரம ஏழையாக இருந்தார். இதனால், மகா லட்சுமியை குறித்து கடும் தவம் இருந்தார். அவருக்கு பிரசன்னமாகி, 'உனக்கு என்ன வேண்டும்...' என்று மகாலட்சுமி கேட்டபோது, 'உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத ஐஸ்வர்யம் கொடு...' என்று கேட்டார், வித்தியாரண்யர்.

'மகாலட்சுமியோ, 'அப்பா... உனக்கு இந்த ஜென்மத்தில் ஐஸ்வர்யம் கிடைப்பதற்கு வழி இல்லையே... வேண்டுமானால், அடுத்த ஜென்மாவில் கொடுக்கிறேன்...' என்று சொன்னாள்.

'வித்தியாரண்யர், உடனே சன்னியாசம் வாங்கி, 'சன்னியாசம் வாங்கிக் கொண்டால், சாஸ்திரப்படி மறு ஜென்மமாகப் போய் விடுகிறது; அதனால், இப்போது ஐஸ்வர்யத்தைக் கொடு...' என்றார். லட்சுமியும், சொர்ணத்தை அள்ளி வழங்கினாள்.

'நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமும், நவநிதியுமாக தெரிந்தது. இவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரண்யர், 'சன்னியாசம் வாங்கிக் கொண்ட பின் நமக்குத் தங்கம் எதற்காக... சன்னியாசியானவர், இதைத் தொடவும் கூடாதே...' என்று அழுதாராம்.

'அப்போது தான் தென்னாட்டுக்கு படையெடுத்து வந்த மாலிக்காபூர் ராஜ்யங்கள் மற்றும் எல்லாக் கோவில்களையும் சிதறுண்டு போகும்படியாக செய்து விட்டுப் போயிருந்தான். அதனால், 'இந்த ஐஸ்வர்யத்தைக் கொண்டு இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்யலாம்...' என்று தீர்மானித்தார் வித்தியாரண்யர்.

'அப்போது அங்கே ஹரிஹரன் - புக்கன் என்ற அண்ணன், தம்பி இருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து, துங்கபத்திரை பிரதேசத்திலேயே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து, அதற்கு ராஜாக்களாக அவர்களை நியமித்தார். அந்த ராஜ்யம் தான் விஜயநகர் சாம்ராஜ்யம்...'

'பலே... அடுத்த கதை?'

'பிறகு பார்க்கலாம்...' என, நடையைக் கட்டினார் குப்பண்ணா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us