PUBLISHED ON : ஆக 07, 2016

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
ஜெமினி, சாவித்திரியின் வீட்டை விட்டு வெளியேறியதும், சாவித்திரிக்கு அடக்க முடியாத அழுகை வந்தது. 'என் ஜீவனை நானே காயப்படுத்தி விட்டேனே...' என்று அவரது மனது அழுது துடித்தது; ஆனால், ஜெமினியிடம் தூது செல்ல யாருமில்லை.
'சாவித்திரி வீட்டிலிருந்து ஜெமினி விரட்டப்பட்டார்...' என்ற செய்தி, பத்திரிகைகளுக்கு சென்று சேரும்படி, கச்சிதமாக செய்து முடித்தனர், சிலர்.
சில வார இதழ்கள், புலனாய்வு செய்தது போன்று, பிரச்னையை திருப்பி, 'பிராப்தம் பட விவகாரத்தினால் ஜெமினியை விட்டு பிரிந்தார் சாவித்திரி...' என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டன. சில நாளிதழ்கள், 'தெய்வீகக் காதலர்கள் பிரிந்தனர்...' என, கண்ணியத்தோடு வெளியிட்டன.
எவ்வளவு இக்கட்டுகள் வந்தாலும், தன் முயற்சியை எப்போதும் கைவிட்டதில்லை சாவித்திரி; அதை, பிராப்தம் பட விவகாரத்திலும் கடைப்பிடித்தார்.
பிராப்தம் திரைப்படம் பல இக்கட்டுகளைத் தாண்டி, ஏப்., 14, 1971ல் வெளியானது.
இதேநாளில், தெலுங்கில், சாவித்திரி இயக்கி தயாரித்த, விந்த சம்சாரம் படம், ஆந்திரா எங்கும் வெளியானது.
சென்னையில் மிட்லண்ட், சரஸ்வதி மற்றும் பிரபாத் ஆகிய திரையரங்குகளில் வெளியாகி, ஏழு வாரங்களைத் தாண்டி ஓடிய, பிராப்தம் படம், தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும், 25 நாட்களை தாண்டி, ஓடியது.
மதுரை சிந்தாமணி திரையரங்கில், அதிகபட்சமாக, 67 நாட்களை தாண்டியது. இப்படம் தயாரிக்க, செலவழிக்கப்பட்ட தொகை, 6 லட்சத்து,
40 ஆயிரம் ரூபாய்; படம் வெளியாகி, வசூலித்த தொகை, 15 லட்சம் ரூபாயை தாண்டியது.
சாவித்திரி, தன் நிர்வாக கணக்கு வழக்குகளை, நம்பிக்கையானவர்கள் கைகளில் கொடுத்து இருந்தால், பிராப்தம் படம் மேலும் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருக்கும்.
சாவித்திரியை திட்டமிட்டு ஏமாற்றி, வசூல் கணக்கை பொய்யாகக் காட்டிய கறுப்பு ஆடு ஒருவரால், பிராப்தம் படம், நஷ்ட கணக்கை காட்டியது.
பிராப்தம் படம், சாவித்திரியின் குடும்ப வாழ்க்கையில், பிரிவினையை ஏற்படுத்தியது. 'இப்படம் தயாரிப்பில் இருந்த போது தான், ஜெமினியை பிரிந்தார்...' என்று, இன்று வரை பத்திரிகைகள் சொல்லி வருகின்றன. ஆனால், குழந்தை உள்ளம் படத் தயாரிப்பு காலகட்டத்திலேயே, ஜெமினியோடு அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.
குழந்தை உள்ளம் படத்தில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஒல்லியான ஒருவர், பிரபல 'மேக் - அப்' மேனின் தம்பி; கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தான், குழந்தை உள்ளம் படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்தில், சாவித்திரியின் மன ஓட்டங்களை, தவறான பாதைக்கு திருப்பி விட்டவர்.
குழந்தை உள்ளம் பட விளம்பரத்தில் கூட, சாவித்திரியின் பெயருக்கு அடுத்தபடியாக, இந்த ஒளிப்பதிவாளருக்குத் தான் கொடுக்கப்பட்டது. ஜெமினிக்கு இது பிடிக்கவில்லை; இங்கு தான், முதல் பிணக்கு உருவானது. அதன்பின், அந்த ஒளிப்பதிவாளரின் கை, சாவித்திரியின் வீட்டு விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. பிராப்தம் படம் தயாரிப்பில் இருந்த போது, படக் குழுவில் உள்ளவர்களுக்கு பணம் வழங்குவது என, எல்லாமே அவர் தான்.
சாவித்திரியின் வங்கிக் கணக்குகளை எல்லாம் பராமரிக்கும் அளவிற்கு உயர்ந்த அந்நபர், சாவித்திரியின் குடும்ப உறவுகளை, அவரிடமிருந்து பிரிக்கத் துவங்கினார்.
வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் சாவித்திரியை, நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலையை செவ்வனே செய்தார், அந்த ஒளிப்பதிவாளர். பிராப்தம் படம் வெளியான காலகட்டத்தில், சாவித்திரி நடித்த மலையாளப் படம் ஒன்று வெளியானது.
சாவித்திரியை ஏமாற்றி, அந்த ஒளிப்பதிவாளர் நடிக்க வைத்த படம் அது! இப்படத்தில், தம்புராட்டியாக நடித்திருந்த சாவித்திரியை, சில காட்சிகளில், அவருக்கே தெரியாமல், அவரை வேறு கோணத்தில் படம் எடுத்திருந்தனர்.
இப்படம் வெளியான போது எழுந்த விமர்சனத்தை கேள்விப்பட்டு, சாவித்திரியின் மருமகன் கோவிந்தராவ், ஒளிப்பதிவாளரிடம் கடுமையாகச் சண்டை போட்டதாக செய்திகள் உண்டு.
சாவித்திரியின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களின் சாவியை தன் வசம் வைத்திருந்த அந்த ஒளிப்பதிவாளர், சாவித்திரியின் நகைகளோடு கேரளாவிற்கு பறந்து விட்டார்.
நகைகள் எல்லாம் வங்கிப் பெட்டகத்தில் இருக்கிறது என்று நம்பிய சாவித்திரிக்கு, நம்பிக்கை மட்டும் தான் பதிலாக இருந்தது; பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருந்தன!
முற்பிறவியில், காதல் நிறைவேறாமல் போகும் இளைஞன், மறுபிறவியில், கோதாவரி ஆற்றில், படகோட்டி பிழைக்கும் ஏழையாகவும், அவன் காதலியாக இருந்தவள், ஜமீன்தார் வீட்டுப் பெண்ணாகவும் பிறக்கிறாள். அந்த இளைஞனின் படகில் அவள் பயணம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில், படகோட்டியை, 'வாடா... போடா...' என்று அழைத்தாலும், நாட்கள் செல்லச் செல்ல, அவனிடம், தன் மனதை பறி கொடுக்கிறாள், கதாநாயகி. இந்த முற்பிறவி காதல் கதை தான், பிராப்தம் படமாக வெளியானது.
சாவித்திரி, போராடி, பெறவிருந்த வெற்றி, உறவாடி வந்த ஒரு சிலரால் கிடைக்காமல் போனது.
'என்ன நேர்ந்தாலும் சரி, மனதில் எடுத்த முடிவை நிறைவேற்றியே தீருவேன்...' என, பிடிவாதமாக வாழ்பவர்கள், பல சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த விதிக்கு, சாவித்திரி மட்டும் எப்படி விலக்காக முடியும்!
பிராப்தம் பட விஷயங்களில் ஏற்பட்ட பண இழப்பிற்கு, ஏமாற்றியவர்கள் முழு காரணம் என்றாலும், படம் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதமும், சாவித்திரி நடிப்பில் இயல்புத் தன்மை இல்லாதததும் மற்றும் படத்திற்காக வாங்கிய வட்டிக் கடனும் உப காரணங்களாக இருந்தன.
'எல்லா நெருக்கடிகளும், தனக்கு எதிராக இருக்கிறது என்பதை அறிந்தும், ஜெமினி, தன்னை கண்டு கொள்ளவில்லையே...' என்ற வருத்தம் தான், சாவித்திரிக்கு அதிகமாக இருந்தது.
ஆரூர்தாசிடம் ஒருமுறை பேசும் போது, இதைக் குறிப்பிட்டு அழுதார், சாவித்திரி.
தோல்விகள், தன் வருங்காலத்தை பாதித்து விடுமோ என்று பயந்த சாவித்திரி, தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கு, 16 வயதிலேயே திருமணத்தை நடத்தி வைத்தார்.
— தொடரும்.
ஞா. செ. இன்பா
