sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 21, 2016

Google News

PUBLISHED ON : ஆக 21, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு பெரியவருக்கு, 80ம் கல்யாணம்... 'கண்டிப்பாக வரணும்...' என, அமெரிக்காவில் வாழும் அவரது மகனும், மருமகளும் சென்னை வந்து என்னை அழைத்தனர்.

அந்தப் பெரியவர் சிறந்த அறிவாளி, மனித நேயம் மிக்கவர் என்பது மட்டுமல்லாமல், என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர்.

குப்பண்ணாவுடன் அவ்விழாவுக்குச் சென்றேன். வேத விற்பன்னர்களின் சடங்குகள் முடிந்து, பெரியவரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய பின், சாப்பிடச் செல்ல பரபரத்தேன். காரணம், காலை, 11:00 மணிக்கே உணவு பரிமாறி விடுவர் என்ற நினைப்பில், நாஸ்தாவை, 'ஸ்கிப்' செய்து இருந்தேன்.

ஆனால், நேரமோ மதியம், 1:00 மணியை நெருங்கி இருந்தது. குப்பண்ணாவை இழுத்துக் கொண்டு டைனிங் ஹால் நோக்கிப் பறந்தேன்.

குப்பண்ணா சொன்னார்... 'மணி... சாப்பாட்டுக்கு இப்படி பறக்கக் கூடாது... தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா... பகல் மற்றும் இரவில் என, தினமும் இரு வேளை தான் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறது.

'நீ காலையில் டிபன் சாப்பிடுகிறாய்... 11:00 மணிக்கு காபி குடிக்கிறாய்... சில நாள், மூடுக்கு தகுந்தாற் போல டீக்கு தாவி விடுகிறாய். மதியம் 1:00 மணிக்கு புல் மீல்ஸ் கட்டுகிறாய். 4:00 மணிக்கு திரும்பவும் காபி குடிக்கிறாய்... 6:00 மணிக்கு மங்களூரு மசால் தோசை சாப்பிடுகிறாய்... மீண்டும் இரவில் ஒரு பிடி பிடிக்கிறாய்.

'இது தவறு; சந்தியா காலம்... அதாவது, நீ மங்களூரு மசால் தோசை சாப்பிடும் நேரம்... விடியற்பொழுது மற்றும் நடுநிசியில் உண்ணக் கூடாது.

'தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறம் உண்ணக் கூடாது; பேசிக் கொண்டே சாப்பிட்டால், ஆயுள் குறையும். ஈரத்துணி அணிந்தோ, ஒரே துணி அணிந்தோ சாப்பிடக் கூடாது.

'மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்க்கக் கூடாது; பந்தியில் அமர்ந்து சாப்பிடும் போது, நாம் முதலில் எழுந்து விட்டால், மற்றவர்களின் பாவம் நம்மிடம் வந்து சேரும்...' என, பெரிய லெக்சர் கொடுத்தார்.

நான் ரசத்தை முடித்து, இலையில் பாயசம் போட்டு, அதில் பூந்தியை போட்டு, வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து, அப்பளத்தை உடைத்து அதில் போட்டு, 'சர்சர்' என உறிஞ்சிக் கொண்டிருந்தேன், குப்பண்ணாவின் லெக்சரை கவனித்தபடி!

திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்டு, ஆழ்வார்பேட்டை வழியே மெதுவாக வண்டியை உருட்டிக் கொண்டிருந்த போது, 'உங்களுக்கு யாருடைய நூல்கள் ரொம்ப பிடிக்கும்...' என்று, குப்பண்ணாவிடம் பேச்சு வாக்கில் கேட்டேன்.

'டுவைன் நூல்...' என்றார்.

'நான் நூல் என்று குறிப்பிட்டது புத்தகத்தை...' என்றேன்.

'நானும் டுவைன் என்று சொன்னது எழுத்தாளர் மார்க் டுவைனை...' என்று இடித்தார்.

'மார்க் டுவைன் என்பது புனைப் பெயர் இல்லையா?'

'புனைப் பெயர்தான்; அதற்கு, 'குறி இரண்டு' என்று அர்த்தம். மார்க் டுவைன், சிறு கப்பலின் கேப்டனாக இருந்தார். மிஸிஸிபி நதியில் தரை தட்டாமல் கப்பலைச் செலுத்துவது, பெரிய சாமர்த்தியம்.

'ஈயக்குண்டு கட்டிய கயிற்றைக் கொண்டு ஆழம் பார்க்கும் மாலுமி, கயிற்றிலுள்ள அடையாளங்களை வைத்து அப்போதைக்கப்போது கப்பலோட்டிக்கு, 'மார்க் ஒன், மார்க் டுவைன்' என்று ஏற்றப்பாட்டு இசைப்பது போலத் தகவல் கொடுத்தவாறு இருப்பான்...'

'அதிலிருந்து மார்க் டுவைன் என்று வைத்துக் கொண்டாராக்கும்... இந்தக் காலத்தில் பெரிய பெரிய கப்பலெல்லாம் ரேடாரின் உதவியால், நீரின் ஆழம், எதிர்வரும் கப்பல்கள், விமானங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் அணு பிசகாமல் தெரிந்து கொள்கின்றன. ரேடியோ அலைகளின் எதிரொலியை அடிப்படையாகக் கொண்டது தானே ரேடார்...' என்றேன்.

'அத்தனை தூரம் போவானேன்... வவ்வால் என்ன செய்கிறது தெரியுமா... இதே மாதிரி எதிரொலியை நம்பித்தான் பறக்கிறது. அது பறக்கும்போது, 'கீச் கீச்' என்று கத்திக் கொண்டே பறக்கிறது. ஆனால், அது கத்துகிற சத்தம் நம் காதுகளுக்கு கேட்காது. அந்த சத்தமானது எதிரில் இருக்கும் சுவரோ, மரமோ, எதன் மீதாவது மோதித் திரும்பும் இல்லையா... அந்த எதிரொலியிலிருந்து ஏதோ தடங்கல் இருக்கிறது என்று புரிந்து, திரும்பி விடுகிறது!'

'அதற்கு கண் இருக்கிறதே... நான் பார்த்திருக்கிறேனே...' என்றேன்.

'ஆனால், இருட்டில் அதற்கு பார்வை கிடையாது; காதை கொண்டு தான் குறி தப்பாமல் போய் வருகிறது...' என்றார் குப்பண்ணா.

'குறி தப்பாமல் அடிக்கிற கவ்பாய் கதை ஒன்றை சமீபத்தில் படித்தேன்...

'ஒருநாள் கவ்பாய் கிராமத்துப் பக்கமாக போயிருந்தான், போகிற வழியில் பாறைகளின் மீதும், மரங்களிலும் சிறு சிறு வட்டமாகப் போட்டிருந்தது. உற்றுப் பார்த்தால், அதற்கு மத்தியிலே துப்பாக்கிக் குண்டுபட்ட அடையாளம்; அசந்து போனான் கவ்பாய்.

'இந்த சின்ன வட்டத்துக்குள்ளே குறிபார்த்து சுடுகிற ஆசாமி எப்பேர்ப்பட்டவனாக இருப்பான்... அவன் தன்னை விடப் பெரிய ஆளாகத்தான் இருக்க வேண்டும். அவனைப் பார்த்து தன் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆளைத் தேடிப் போனான்.

'சுட்டவன் யார் என்கிறீர்கள்... ஒரு சின்னப் பையன்; அவனுக்கு பெரிதாக சலாம் போட்டு, 'தம்பி... உன்னால் எப்படி இவ்வளவு குறிப்பாக சுட முடிகிறது?' என்று கேட்டான், கவ்பாய். 'ரொம்ப சுலபமாயிற்றே...' என்றவன், 'சும்மா குருட்டுத்தனமாகச் சுட வேண்டியது; அப்புறம் குண்டுபட்ட இடத்தைச் சுற்றி சின்னதாக ஒரு வட்டம் போட்டு விட வேண்டியது; அவ்வளவு தான்...' என்றான்.

'இந்தக் கதையை எதற்கு என்னிடம் சொன்னாய்?' என்று கேட்டார், குப்பண்ணா.

'இந்தக் கவ்பாய் தப்புக் கணக்கு போட்டது போல, சில பெரிசுகள், ஒரு சிலரை நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கத்தில் தான்...' என்று முடித்தேன்.

சென்னையிலுள்ள பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஒருவரை சந்திக்க லென்ஸ் மாமா சென்றிருந்த போது, நானும் உடன் சென்றேன்.

அங்கே போனது தான் தாமதம்... 'ஹச்சு... ஹச்சு...' என, தும்ம ஆரம்பித்தார், லென்ஸ் மாமா.

அப்போது டாக்டர் சொன்னார்... 'மூக்கினுள் ஒவ்வாத பொருள் ஒன்று நுழையும் போது, அதை வெளியே துரத்த, நம் உடம்பு செய்கிற வித்தை தான் தும்மல். நுரையீரலில் இருந்து காற்று வேகமாகவும், திடீரென்றும் மூக்கு, வாய் வழியாக வெளியேறுவதால், பலூன் வெடிப்பது போல் அப்படியொரு சத்தம்.

'தும்மல் ஒரு அனிச்சைச் செயல்; மூக்கினுள் ஆகாத பொருள் நுழையும் போது, உடனே அதை வெளியேற்ற, மூளை எடுக்கும் நேரடி நடவடிக்கை தான் தும்மல்.

'தும்மும் போது மனிதர்களின் முகம் ஏன் அஷ்ட கோணலாக மாறுகிறது தெரியுமா... நுரையீரலிலிருந்து தும்மலுக்கான காற்று வெளியே வேகமாக அனுப்பப்படுகிறது. நுரையீரலில் காற்றழுத்தம் குறைகிறது. புதுக்காற்றை உள் வாங்கி தும்மல் உருவாகிறது.

'மூச்சை உள்ளுக்குள் இழுக்கிற போது, மூக்கினுள் உட்கார்ந்திருக்கிற எதிரியும் காற்றோடு காற்றாக உள்ளே போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த, 'அஷ்ட' கோணல்.

'தும்மலுக்கான காற்றை உள்ளே இழுக்கிறோம். காற்று சேர்வதற்கு தாமதமானால், மூளை, தும்மலை, 'கேன்சல்' செய்து விடும். அப்போது, தும்மல் வந்த மாதிரி வந்து, வராத மாதிரி போய் விடுகிறது.

'தூசு, வைரஸ் கிருமிகள் மட்டுமல்லாமல், அலர்ஜி, ஜலதோஷம் காரணமாகவும் தும்மல் வருகிறது. பனியால் தும்மல், வானத்தை அண்ணாந்து பார்த்தால் தும்மல், அதிக வெளிச்சத்தைப் பார்த்தால் தும்மல்; இப்படி தும்மலில் பல வகை உண்டு.

'சிலருக்கு தும்மல் ஒரு, 'ரிலீப்'பைக் கொடுக்கும்; அதற்காக துணியைத் திரித்து, மூக்கினுள் விட்டு தும்மலை ஏற்படுத்திக் கொள்வர்...' என்றார்.

லென்ஸ் மாமாவைத் திரும்பிப் பார்த்தேன்... தன் கர்சீப்பை திரித்துக் கொண்டிருந்தார்.






      Dinamalar
      Follow us