
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
வருமான வரித்துறையினருக்கு, சாவித்திரியால் வரி நிலுவை கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. நகைகளை ஏமாற்றி, வாணி எடுத்துக் கொண்டதால், பணம் கட்டுவதற்கு, பிறர் கையை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கெல்லாமோ பணம் கேட்டுப் பார்த்தார்; தனக்கு பணம் தர வேண்டியவர்களையும் தேடிப் போனார்; ஆனால், எல்லாரும் சொல்லி வைத்தார் போல, 'இல்லை...' என, கை விரித்தனர்.
சென்னை அபிபுல்லா சாலையில், சாவித்திரி ஆசையாசையாய் கட்டிய தாஜ்மகால் போன்ற அவரின் வீடு, வருமான வரித்துறை அதிகாரிகளால், பறிமுதல் நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. பறிமுதல் நடவடிக்கை என்பது இன்று போல் அல்ல; தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்ட பின்னரே, பறிமுதல் நடவடிக்கை எடுப்பர்.
'தான் ஆசையாக கட்டிய வீடு பறிமுதலுக்கு வந்து, ஒன்றும் இல்லாமல் போகப் போகிறதே...' என்ற துக்கம், சாவித்திரியின் நெஞ்சை அடைத்தது. தண்டோரா ஓசை, இடியோசையாகக் கேட்டது.
'வருமான வரித்துறையினருக்கு கட்ட வேண்டிய வரி நிலுவைத் தொகையையும், வாங்கிய வட்டி கடனையும், வீட்டை விற்று, சரிசெய்து விடலாம்...' என நினைத்து, மார்வாடி ஒருவருக்கு விலை பேசினார்.
வீட்டை வாங்க வந்த மார்வாடி, 'நீங்கள் வாழ்ந்த இந்த வீட்டை, கோவிலாகத் தான் பார்க்கிறேன்; எச்சூழலிலும், வீட்டின் வடிவத்தை மாற்ற மாட்டேன். இப்போது இருப்பது போலவே, எப்போதும் இருக்கும்...' என, உறுதியளித்தார்.
அந்த வாக்குறுதிக்காகவே, தான் வாழ்ந்த வீட்டை மார்வாடிக்கே கொடுக்க முடிவெடுத்தார். இன்றும், அந்த மார்வாடி குடும்பத்தினர், சாவித்திரியின் வீட்டை, அப்படியே பயன்படுத்துகின்றனர்.
வீட்டை காலி செய்யும் போது, வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம், ஜெமினியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார், சாவித்திரி.
கவலையை மறக்க, முன்பைவிட, அதிகமாக மது அருந்தத் துவங்கினார், சாவித்திரி.
அலமாரியில் இருந்த சில நகைகளும், மயக்கத்தில் இருந்த சாவித்திரியின் கண்முன்னே, உரிமையோடு எடுத்துச் சென்றனர், சிலர்.
ஒருவன் வீழ்ந்து விட்டால், அவனை சுற்றி நின்று கை தட்டி ரசிக்கும் மனோநிலை கொண்ட மனிதர்களிடம் அன்பையும், பரிவையும் பற்றி பேசுவது முட்டாள்தனம் என்பதை புரிந்திருந்த சாவித்திரி, யாருக்கும், எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
சில எழுத்தாளர்கள், சாவித்திரியை அனுதாபப் பொருளாகக் காட்டினர். ஆனால், பண சிக்கலில் சாவித்திரி மாட்டிக் கொண்டது உண்மை என்றாலும், அதிலிருந்து மீண்டு வரும் வழிகளும், துணிச்சலும் அவருக்கு இருந்தது. சிலர் சொல்வதை போல சாவித்திரி சோற்றுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம், இட்டு கட்டிய பொய்!
அடுத்தடுத்து வந்த பண நெருக்கடிகள், அதன் விளைவாக மனதில் ஏற்பட்ட அமைதியின்மை, கோபம் மற்றும் உடல் பிரச்னை என, பல காரணங்களால் அவரின் தூக்கம் தொலைந்தது. 'மனநிலையில் பாதிப்பு வந்து விடுமோ...' என, அஞ்சும் அளவு குழம்பியிருந்தார்.
மகள், மருமகனோடு இணைந்து வாழ்ந்தார், சாவித்திரி. அவரின் சில பழக்க வழக்கங்களுக்கு தடை போட்டார், மகள் சாமுண்டீஸ்வரி.
அதனால், 'மகள் இட்ட அன்பு தடையை, லட்சுமணக் கோடாக நினைத்து, வாழ முயற்சிப்போம்...' என, எண்ணினார், சாவித்திரி. ஆனால், லட்சுமணக் கோட்டை தாண்டுவதற்கான தூண்டுகோலாக, மாயானாக வந்து நின்றார், ஜக்கையாவின் மனைவி.
'நீ இங்கே அடிமை போல் வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை. அண்ணாநகரில் உனக்கு வாடகைக்கு தனி வீடு பிடித்து தருகிறேன்; என்னோடு வா...' என்று ஜக்கையாவின் மனைவி கூற, தனியாகச் செல்ல முடிவெடுத்தார், சாவித்திரி.
எவ்வளவோ தடுத்தும், கெஞ்சியும் பார்த்தார், மருமகன் கோவிந்தராவ்; ஆனால், தன் முடிவிலிருந்து அவர் மாறவேயில்லை.
மகன் சதீஷ்குமார், தன் தூரத்து உறவுகளான வெங்கடரத்தின பாபு மற்றும் அவர் மனைவி வாணி ஆகியோருடன், அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடியேற, கிளம்பிப் போனார் சாவித்திரி.
ஊர் என்ன பேசும் என்பது சாவித்திரிக்கு இப்போது புரிந்திருந்தது. ஆனாலும், 'யார் என்ன சொன்னாலும், தன் மகனுக்காக வாழ வேண்டும்...' என்ற எண்ணம் மட்டுமே அவரிடமிருந்தது.
இதனால், 1972லிருந்து, 1979 வரை, ஆண்டுக்கு தலா, 10 படத்திற்கு மேல் நடிக்கும்படியான நடிகையாக மாறிப் போயிருந்தார். எல்லாம் குணச்சித்திர வேடங்களே!
'எப்பாடு பட்டாவது சாவித்திரியின் உறவை, ஜெமினியோடு தொடர வைக்க வேண்டும்...' என, பல நல்ல உள்ளங்கள், முயற்சி செய்தன; ஆனால், அவர்களால் முடியவில்லை.
படப்பிடிப்புகளுக்கு, தன் மகனையே அழைத்துச் சென்றார், சாவித்திரி. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவனோடு களித்தார். 'இன்னும் எத்தனை நாட்கள் தான், உன் செல்ல மொழிகளை என் காதுகள் கேட்கும்...' என, அவர் உள் மனம் அபாயக் குரலை எழுப்பிக் கொண்டே இருந்தது.
ஐதராபாத்தில் சாவித்திரிக்கு இரண்டு வீடுகள் இருந்தன. அவ் வீடுகளை, தன் மகன் பெயருக்கு எழுதி வைத்தார்.
ஐதராபாத் வீடுகளை, தன் மகன் பெயருக்கு சாவித்திரி எழுதி விட்டார் என்று தெரிந்ததும், சாவித்திரியின் அக்கா கணவர், அந்த வீடுகளை, தன்வசம் வைத்துக் கொண்டார். கடைசிவரை, அந்த வீடுகளை, சாவித்திரியோ, அவர் வாரிசுகளோ அனுபவிக்க முடியவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.
இச்சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கம், சாவித்திரிக்கு, 'கலைச் செல்வம்' விருது கொடுத்து, சிறப்பிக்க நினைத்தது. அவ்விழாவிற்கு சாவித்திரி வரமாட்டார் என்று தான், அனைவரும் நினைத்தனர்; ஆனால், வந்திருந்தார்.
மேடையில் பேசும் போது, 'இந்த விழாவிற்கு வர வேண்டாம் என்று தான் இருந்தேன். உடனுள்ள கலைஞர்கள் என் வாழ்க்கையை பார்த்து, தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்விழாவிற்கு வந்தேன். யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. இன்று இருக்கும் நிலைமைக்கு நானே தான் காரணம். என்னைப் போல யாரும் வாழ்ந்து விடாதீர்கள்; யாரையும் நம்புவதற்கு முன், பலமுறை யோசியுங்கள். வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை...' என, வேதனையோடு பேசினார் சாவித்திரி.
— தொடரும்.
- ஞா. செ. இன்பா