sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 21, 2016

Google News

PUBLISHED ON : ஆக 21, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

ஐந்தாம் வகுப்பில் பாதியோடு படிப்பை நிறுத்தி விட்ட என் உறவுக்கார பெண்ணை, பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில், அவளது வீட்டில் சந்தித்தேன். அவளுக்கு இரு மகன்கள்; கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த அவள், ஆங்கில வழியில், ஆறாம் வகுப்பு படிக்கும் தன் இரண்டாவது மகனுக்கு, பாடத்திலுள்ள சந்தேகங்களை, விளக்கிக் கொண்டிருந்தாள்.

ஆச்சரியத்துடன், 'இதெல்லாம் எப்படி தெரியும்...' என்று கேட்டதற்கு, 'மூத்தவன் எல்.கே.ஜி., படிக்கும் போதிலிருந்தே நானும், அவனுடன் சேர்ந்து, ஏ.பி.சி.டியிலிருந்து படிக்க ஆரம்பிச்சேன்; எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தா கூச்சப்படாமல் மறுநாள் அவனது ஆசிரியர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்குவேன். என் ஆர்வத்தால், அவனும் நன்றாக படித்து, வகுப்பில் முதல் மாணவனாக வர ஆரம்பித்ததோடு, வகுப்பில் அன்றன்று நடக்கும் பாடங்களை, எனக்கு சொல்லி தந்து, எழுதச் சொல்வான்.

'இப்போது, என் மகன் பிளஸ் 1 படிக்கிறான்; அவனுடன் என் படிப்பும் தொடர்கிறது...' என்றாள். அவளது முயற்சியை பாராட்டினேன். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை, அவள் மூலம் தெரிந்து கொண்டேன்.

— பி. கவிதா, கே. வடமதுரை.

பெற்றோரை மதிக்கும் மாணவன்!

எங்கள் பகுதியில், வண்டியில் வைத்து, துணிகளுக்கு இஸ்திரி போடுபவரின் மகன், பத்தாம் வகுப்பு தேர்வில், 488 மதிப்பெண்கள் எடுத்திருந்ததை கேள்விப்பட்டேன். சமீபத்தில், தன் அப்பாவிற்கு உதவி செய்து கொண்டிருந்த அவனை பாராட்டி, மேற்படிப்பு பற்றி கேட்டதற்கு, பாலிடெக்னிக்கில், மோட்டார் மெக்கானிக்கல் பிரிவில் விண்ணப்பித்திருப்பதாக கூறினான்.

'உன்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட, பிளஸ் 2 முடித்த பின், டாக்டர், இன்ஜினியர் என, கனவில் மிதக்க, நீயும் அதுபோல பெரிய படிப்பு படித்து, நிறைய சம்பாதிப்பதோடு, சமுதாயத்தில் அந்தஸ்தோடு வலம் வரலாமே...' என்றேன்.

'அண்ணே... நான்கைந்து வருஷம் படிக்கும் அளவிற்கு, எங்க குடும்ப சூழ்நிலை இல்லை; நிறைய படித்து, வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. கூடிய விரைவில், ஏதாவது வேலைக்கு சென்று, என் பெற்றோருக்கு ஓய்வு அளிக்கவே விரும்புறேன். அதன்பின், திட்டமிட்டு, மேற்படிப்பை பற்றி சிந்திப்பேன். அதுமட்டுமல்ல, என் அப்பாவின் தொழிலுக்கு உதவியாக இருப்பது, எனக்கு மகிழ்ச்சியை தருகிறது...' என்றான்.

மதிப்பெண்களே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று எல்லாரும் கருதும் இந்நாளில், அந்த மாணவனின் இயல்பான எண்ணமும், பெற்றோர் மீது கொண்ட அக்கறையும் என்னை பெரிதும் ஈர்த்தது.

எல்லாமே படிப்பு தான்; எதைப் படித்தாலும் முன்னேறலாம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். அதோடு, எந்த சூழ்நிலையிலும், உங்கள் ஏணியான பெற்றோரை மறந்து விடாதீர்கள்!

வி.மணிகண்டராஜன், மதுரை.

மற்றவர்களுக்கு பாடமானான்!

எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின், 16ம் நாள் அஞ்சலியை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர், சுவரொட்டிகளில், 'நேற்று வரை, எங்களோடு இருந்து, உண்டு, உறங்கி, பேசி மகிழ்ந்த எங்கள் அன்பு மகன், இன்று இல்லை; நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல், வீணாய் போன மதுவில் வீழ்ந்து, அற்ப ஆயுளில் மறைந்து விட்டான். எங்கள் மகனின் பரிதாபத்திற்குரிய வாழ்க்கையை, பாடமாக எடுத்துக் கொண்டு, மது அருந்தும் பழக்கத்திலிருந்து மீளுங்கள்; உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்...' என, வித்தியாசமான முறையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

மது குடிப்போருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகவும், மற்றவர்கள் உயிர் மீது, அவர்கள் காட்டியிருந்த அக்கறையும், சுவரொட்டியை படித்த அனைவரையும் நெகிழ வைத்தது!

வி.ஜெ.ராபர்ட், சென்னை.






      Dinamalar
      Follow us