PUBLISHED ON : ஆக 28, 2016

'சோழ நாடு சோறுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து என்று அவ்வை பாடினாளே... தொண்டை நாடு என்பது எது? சோழம் (தஞ்சை), சேரம் (கேரளா), பாண்டியம் (மதுரை), பல்லவம் (சென்னை) என்பது தெரிகிறது; கொங்கு (கோவை), நாஞ்சில் (கன்னியாகுமரி) கூட புரிகிறது. இந்த தொண்டை தான் எங்கோ சிக்கிக் கொண்டிருக்கிறது...' என்றேன், குப்பண்ணாவிடம்!
'வட ஆற்காடு மாவட்டம் தான் அந்தக் காலத்தில், தொண்டை நாடு என்று சொல்லப்பட்டது. சரி... பாண்டிய நாடு என்ன உடைத்து?' எனக் கேட்டார் குப்பண்ணா.
'கண்ணகி சோழ நாட்டிலிருந்து (பூம்புகார்) பாண்டி நாட்டுக்கு (மதுரை) போய் தானே சிலம்பை உடைத்தாள்; அதனால், பாண்டிநாடு சிலம்புடைத்து...' என்றேன்.
'சரியா போச்சு போ... பாண்டி நாடு முத்துடைத்து... இதை, ரத்னாகரே ராமாயணத்தில் கூறியுள்ளார்...'
'ரத்னாகர்ன்னு ஒருத்தர் ராமாயணம் எழுதியதா தெரியலியே... ஒரு வேளை, அந்த பெயரில் யாராவது ஒரு, 'பப்ளிஷர்' ராமாயணத்தை, 'ஆப்செட் பிரின்டிங் மல்ட்டி கலர்லே' மலிவு பதிப்பாகப் போட்டாரோ...' என்றேன்.
'ரத்னாகர் எவ்வளவு பிரபலமானவர்... நம்ம திருவான்மியூரிலே கூட அவர் வந்து தங்கியதாக கூறுவதுண்டு; அங்கே அவருக்கு ஒரு கோவில் கூட இருக்கு...' என்றார்.
பக்கத்திலிருந்த லென்ஸ் மாமா, 'அட... இந்த ஆளு வால்மீகி முனிவரைத் தான் சொல்றார்யா... சும்மா தலையை சுத்தி மூக்கைத் தொடாதேங்காணும்... முனிவராகிறதுக்கு முன் வால்மீகிக்கு, ரத்னாகர்ன்னு தான் பெயர்...' என்றார்.
ஆமோதிப்புடன் சிரித்தார் குப்பண்ணா.
'ஆமாம்; அவர் தான், 'முக்தா மணி, விபூஷிதம், யுக்தம் கவாடம் பாண்ட்யானாம்' என்று, அதாவது, 'பாண்டியர்களுக்கு உரிய முத்தும், மணிகளால் ஆன அலங்காரமான கபாடபுரம்' என்று, தன் ராமாயணத்தில் கூறியுள்ளார்...' என்றார் குப்ஸ்.
'இப்போது, கபாடபுரம் தமிழகத்தில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?' என்று கேட்டேன்.
'அது, கடலில் மூழ்கி எத்தனையோ காலமாகிவிட்டது...' என்று கூறி, சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.
அன்று, மதிய சாப்பாட்டிற்குப் பின், வேலையை ஆரம்பிக்கு முன், ஆபிசில் ஆஜரானார் குப்பண்ணா. அவரது வாயைக் கிளறினால், சுவையான விஷயம் ஏதாவது கிடைக்கும் என நினைத்து, 'என்ன, போஜனம் ஆச்சா?' என, அவரது பாஷையிலேயே கேட்டு வைத்தேன்.
'உபசரணையைப் பாத்தா, எதுக்கோ அடி போடற மாதிரி தெரியறதே...' என்றார்.
'புரிஞ்சிட்டீங்கல்ல... சுவையான விஷயம் ஏதேனும் எடுத்து விடுங்களேன்...' என்றேன்.
'அது, 57ம் வருஷம்ப்பா... தேர்தலில் போட்டியிட்டார், அண்ணாதுரை. ஜாதி, மதங்களுக்கு எதிராக பிரசாரம் நடத்தியது, அவரது கட்சி. ஆனால், வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் அண்ணாதுரை முதலியார் என்றிருந்தது; ஓட்டு சீட்டிலும் அப்படியே பதிவாகி விட்டது.
'இதை ஈ.வெரா.,வின் திராவிட கழகத்தினர் கேலி செய்து பிரசாரம் செய்தனர். அண்ணா
துரையோ, 'இது வாக்காளர் பட்டியல் தயாரிக்க வந்த அரசு ஊழியர் செய்த தவறு; நான் எப்போதும் என் பெயருடன் ஜாதிப்பெயர் போட்டுக் கொள்வதில்லை...' என்றார்.
'ஒரு ஊர் பொதுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா., பேசும்போது, 'கண்ணீர் துளி கட்சிக்காரன்களுக்கு இப்போது வால் முளைத்து விட்டது; பெயருக்கு பின்னால், 'முதலியார்' என்று போட்டுக் கொள்கிற வால் தான் அது...' என்றார்.
'உடனே தி.மு.க.,வினர், 'இவரது யோக்கியதை தெரியாதா... மணியம்மையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டபோது தன் பெயரோடு, தன் ஜாதிப் பெயரையும் சேர்த்துப் போட்டு, பதிவாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார். அது, அந்த அலுவலக நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டு, சந்தி சிரித்தது...' என்று, நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டனர்...' என்று முடித்தார்.
எல்லாமே வெளிவேஷம் தான் என, நினைத்துக் கொண்டேன்!
'அயல்நாடுகளில் குறிப்பாக, அரபு நாடுகளில், சமஸ்கிருதத்தின் பெருமையைப் புரிந்து, அதற்கு முஸ்லிம்கள் செய்த சேவை, பாராட்டத்தக்கது. ஆனால், இந்தத் தொடர்பு இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நின்றதோடு அற்று விட்டது...' என்றார் குப்பண்ணா.
'முஸ்லிமும், சமஸ்கிருதமுமா... அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் சம்பந்தப்படுத்துகிறீரே...' என்றேன்.
'இல்ல இல்ல... நான் சொல்றது உண்மை தான். அந்த சரித்திரம், ரொம்பப் பேருக்குத் தெரியாது. சமஸ்கிருத இலக்கியத்தில், 'இதோபதேசம்' (பஞ்ச தந்திர கதைகள்) என்னும் பெயர் பெற்ற நூலை, 'குலைலா திம்னா' என்ற பெயரில் அரபு மொழியில், அப்துல்லா மாக்பா என்பவர் மொழி பெயர்த்தார். இவர் பாக்தாத் காலிபின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர். இதே நூலை, கி.பி.1400ல், அபுல் மவுல்வி என்பவர் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
'கஜினி முகமதுவைப் பற்றி சமஸ்கிருதத்தில் காலிங்க அரசன் புகழ்ந்து எழுதிய, செய்யுள் நூலை, முதலில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். ஆனால், கஜினி முகமது, அடுத்த முறை போரிட வந்த போது, இந்த அரசனின் கோட்டையை முற்றுகையிட்டான். ஓடி ஒளிந்து கொண்டான் அரசன். ஆனால், அவன் எழுதிய காவியத்தை படித்து ரசித்தான், கஜினி முகமது. அதனால், அந்த அரசனுக்கே கோட்டையை விட்டுக் கொடுத்து சென்றான்.
'புகழ்பெற்ற சரித்திர ஆசிரியரும், ஜோதிடருமான அல்பர்னியா, சமஸ்கிருதம் பயில்வதற்காக, முல்தானில், 16 ஆண்டுகள் தங்கினார். அந்தக் காலத்தில் முல்தான், சமஸ்கிருத வித்யாகேந்திரமாக இருந்தது.
'அலாவுதீன் கில்ஜி காலத்தில், அஸ்ஸாமை சேர்ந்த முஸ்லிம் ஸுபிகளில் ஒருவர், கவுமாரர் எழுதிய, 'அமரகுண்டம்' என்ற, சமஸ்கிருத நூலை, பாரசீக பாஷையில் மொழி பெயர்த்தார். அதன் கையெழுத்து பிரதியான, 'பஹ்ருல் ஹயாத்' அமதாபாத்தில் உள்ள ஹஸ்ரத்பீர் முகமது ஷாவின் புத்தக சாலையில் இருக்கிறது.
'முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தில், 'கோகசேதி' என்னும் வடமொழி நூலை, 'டூட்டி நாமா' என்னும் பெயரில், மொழி பெயர்த்தனர்.
'அக்பரின் காலத்தில், 'சதாலங்கார சிம்ஹாசனபதிசீ' என்னும் பிரபல வடமொழி நூலின் மொழி பெயர்ப்பு வேலை நடந்தது. அக்பருடைய தர்பாரில் இருந்த, க்வாஜா ஸுசேன் என்பவர், இவற்றைக் காவிய வடிவில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால், வேலை முடிவதற்குள் அவர் இறந்து விட்டார். முல்லா அப்துல் காதர் பதினி, மீதிப் பகுதியை வசன ரூபத்தில் இயற்றி முடித்தார்.
'அதர்வண வேதத்தை, பாரசீகத்தில் மொழி பெயர்த்தார் ஷேக் பதன் என்பவர். இவர் பிறப்பால் பிராமணராக இருந்து, பிறகு இஸ்லாத்துக்கு மதம் மாறியவர். பிரசித்தி பெற்ற, 'லீலாவதி' என்ற கணித நூலை, பாரசீக மொழிக்கு மாற்றினார், அப்துல் பைஜீ.
'நசாப்கான், மவுலானா அப்துல் காதர் பதினி, ஷேக் சுல்தான், தானேசரி ஆகிய நான்கு புலவர்கள் மேற்பார்வையில், ராமாயணத்தை, பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்.
'இன்னும் சமஸ்கிருதம் கற்ற முகமதிய பண்டிதர்கள் பலர், இரு மொழிகளிலும் உழைத்து, சேவை செய்திருக்கின்றனர். உபநிஷத்தையும், பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்...' என்று கூறி முடித்தார் குப்பண்ணா.
