PUBLISHED ON : ஆக 28, 2016

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
'வாழ்க்கையில் மேடு பள்ளம் ஏற்படுவது, எனக்கு மட்டுமில்ல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வரும். அதை சமாளிக்கும் மனோதிடத்தை, ஆண்டவன் எனக்கு கொடுத்திருந்ததால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இப்போது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், 12 படங்களில் நடித்து வருகிறேன். நான் நடிப்பேனா என்று சந்தேகப்பட்டவர்கள், இப்போது சந்தேகம் நீங்கி, அன்புடன் என்னை அணுகுகின்றனர்.
'இனி, எனக்கு உள்ள ஒரேயொரு பிரச்னை, என் மகனுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதே! அவன், தன் காலத்தில், யாரையும் எதிர்பார்க்காமல் வாழக் கற்றுத் தந்துவிட வேண்டும். ஓய்வின்றி நடித்த காலம் போய், இடையில், சில காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி நேர்ந்தது. தற்போது, திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது. மீண்டும் வாழ்வேன் என்ற எண்ணமே, எனக்கு பக்கபலமாக இருக்கிறது.
'நான் துன்பமுற்று இருந்த நேரத்தில், என்னை விட வயதில் முதியவர்களும், நான் ஓஹோ என்று இருந்த காலத்தில், என் வாழ்க்கையை பார்த்தவர்களும், அடிக்கடி வந்து அன்புடன் ஆறுதல் கூறினர். அந்த ஆதரவான வார்த்தைகள், மிகுந்த மனத்துணிவைத் தந்தன. வாழ்க்கையில் மீண்டும் காலூன்றி எழ, ஆதாரமாக இருந்தது...' என்று, கடைசியாக ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார், சாவித்திரி.
தன் வாழ்வு, தன் மகனின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இருக்க வேண்டுமென நினைத்து, ஓடி ஓடி படங்களில் நடித்தார், சாவித்திரி.
சாவித்திரியின் தாய் வழி உறவுகளுக்கு இருந்த உயர் நிலை சர்க்கரை நோய், மரபு ரீதியாக சாவித்திரிக்கும் வந்தது.
உயர் நிலை சர்க்கரை நோயாளிகள், காலையில் வெறும் வயிற்றில் இன்சுலின் ஊசியை போட்டுக் கொண்டதும், சிறிது நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும். இல்லையெனில், உடலில் சர்க்கரை அளவு குறைந்து, உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
சாவித்திரிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரின் கல்லீரலில் சுரக்கும் ஹார்மோன் அளவு குறைந்து, வேதியல் மூலக்கூறுகள் மிக குறைவாக இருந்தன. சர்க்கரை நோயுடன், இதுவும் சேர்ந்துக் கொண்டதால், சோர்வான முகத்தோடு காணப்பட்டார். முன்பு போல அவரால் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை.
தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் என, மூன்று மொழி படங்களிலும், பிரதான வேடங்களை தேர்ந்து எடுத்து நடித்துக் கொண்டிருந்தார், சாவித்திரி.
மைசூரில், ஆறாத காயா என்ற கன்னடப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இப்படத்தில், சாவித்திரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
படப்பிடிப்பிற்கு, தன் மகனுடன் செல்லத் திட்டமிட்ட சாவித்திரி, வழியில், தன் திருமணம் நடந்த சாமுண்டீஸ்வரி கோவிலுக்கும் போய் வர வேண்டும் என, எண்ணினார்.
'நாளை மாலை, 5:00 மணிக்கு வந்து விடுங்கள்; மைசூரில் ஆறு நாள் ஷூட்டிங் இருக்கிறது. அதை முடித்து விட்டு திரும்பும் வழியில், பெங்களூரில் தங்கி வர வேண்டும்...' என, ஓட்டுனரிடம் பயணத் திட்டத்தை கூறினார் சாவித்திரி.
மே, 3, 1981, மாலை, 4:00 மணிக்கு, மைசூர் செல்ல, சாவித்திரியின் வீட்டு முன் வந்து நின்றது, கார். சாவித்திரி உச்சத்தில் இருந்த போது, தன், 'எம்.எஸ்.இசட், 444' என்ற எண் கொண்ட படகுக் காரை, அவரே தன் இடது கையால் ஓட்டிச் செல்வது, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒருமுறை, கார் ரேசில் கூட கலந்து, முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
முதலில் காரில் ஏறினான், சதீஷ். காரில் ஏறுவதற்கு முன், வீட்டை ஒரு நிமிடம் நின்று பார்த்தார், சாவித்திரி. அவர் மனதிற்கு தெரிந்து இருக்குமோ, இது தான் கடைசிப் பார்வை என்று!
கார், மைசூர் நோக்கிப் பறந்தது; அங்கு, ஆறு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சாவித்திரி, கடைசி நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தன் மகனுடன் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, கார் பெங்களூரை அடையும் போது, நடு இரவை தாண்டி விட்டது.
சாளுக்கியா ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்த சாவித்திரி, வந்த களைப்பில், ஓட்டல் அறையில் அயர்ந்து தூங்கி விட்டார். சதீஷும், அம்மாவுடன் தூங்கிப் போனான்.
மே, 11, 1981ல் காலை, வழக்கம் போல தூக்கத்திலிருந்து எழுந்த சாவித்திரி, காலைக் கடன்களை முடித்து விட்டு, வெறும் வயிற்றில் போடும் உயர் நிலை சர்க்கரை நோய்க்கான இன்சுலின் ஊசியை போட்டுக் கொண்டார்.
இன்சுலின் போட்ட சில நிமிடங்களிலேயே அவர் மனதில், ஜெமினியோடு கழித்த அந்த நாட்கள் நினைவில் வந்து நின்றது.
— தொடரும்.
ஞா. செ. இன்பா
