தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்டர் முன் அமர்ந்திருந்தார், லென்ஸ் மாமா; உடன் நான்!

'உங்க ரொட்டீன் ஒர்க் என்ன?' -இது டாக்டர்.

'காலையில் ஆபீஸ்; மாலையில் வீடு...'

டாக்டரிடமும், வக்கீலிடமும் உண்மையைச் சொல்லி விட வேண்டுமல்லவா... மறைத்தார் மாமா.

அதனால், நாமாவது சொல்லி விடலாமே என நினைத்து, 'டாக்டர்... காலையில் ஏ.சி., காரில் ஆபீஸ் போவார்; ஆபீஸ் ரூம் ஏ.சி., வீட்டில் ஏ.சி., ஆபீஸ் ரூமை அவர் அடைய, மாடிப்படி ஏறுவது ஒன்று தான் அவரின் உடற்பயிற்சி. போட்டோ எடுக்கும் அசைன்மென்டுகளும், எங்க ஆசிரியர் இப்போ அதிகமாக இவருக்கு கொடுக்கிறதில்ல. அதனால, ஓடியாடி வேலை செய்வதில்ல. இது தவிர, வெண்குழல் வத்தியும், உ.பா., பழக்கமும் உண்டு...' என்றேன்.

ரத்த பரிசோதனை செய்த டாக்டர், 'உங்களுக்கு கொழுப்பு அதிகமா போச்சு; தினமும் முக்கால் மணி நேரம் வேகமா நடந்து, உடற்பயிற்சி செய்யணும். வெண்குழல் வத்தியை சுத்தமா விட்டுடணும்; தினமும் ரெண்டு, 'பெக்' உ.பா., ஒண்ணும் குத்தம் இல்லே...' என்று கூறி விட்டார்.

லென்ஸ் மாமாவிற்கு உயிர் மீது பயம் வந்து விட்டது. அதனால், தினமும் மாலை, கடற்கரை கலங்கரை விளக்கம் துவங்கி, பாரதியார் சிலை வரை, இரண்டு முறை சுற்றி, நடைபயிற்சி செய்கிறார்.

மாமாவுக்குத் தான் கொழுப்பு ஏறிவிட்டது; எனக்கென்ன... நானும் வரவேண்டுமென, 'நச்சு' பண்ணி, என்னையும் உடன் அழைத்து செல்கிறார். முதல் இரண்டு நாட்கள், அலுப்பாக இருந்தாலும், கடற்கரையில், உள் சாலையில் நடக்கும் காட்சிகள், ஆர்வம் கொள்ள செய்தன.

சாலையில், கடற்கரை மணலையும், சாலையையும் பிரிக்க வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் கற்களில், குறிப்பிட்ட இடங்களை, பட்டா போட்டு கொள்கின்றனர் சில ஜோடிகள்.

கல்லூரி மாணவிகள் துவங்கி, பணிக்கு செல்லும் பெண்கள், பத்தாவது, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் சிறுமியர் வரை, தத்தமது காதலர்களுடன், 'டாண்' என, குறிப்பிட்ட நேரத்தில் பைக்கில் வந்து விடுகின்றனர். பைக்கையே மறைவிடமாக கருதி, விதவிதமான போஸ்களில் அமர்ந்து, ஒருவரையொருவர் தழுவியபடி, மெய் மறக்கின்றனர்.

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்கள் என்றால், சரியாக ஏழரை மணிக்கு, ஜூட் விடுகின்றனர். எட்டு மணிக்கு ஹாஸ்டல் சென்று அடைய வேண்டுமல்லவா! திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற இடங்களிலிருந்து வரும் பெண்கள், தத்தமது வீட்டை, எட்டு மணிக்குள் அடைய, ஏழே முக்கால் மணிக்கு கிளம்பி விடுகின்றனர்.

இதில், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் சிறுமியர் தனியே வருவதில்லை; தம்முடைய தோழி ஒருவரையும் உடன் அழைத்து, தம் துணைக்கு வைத்து, தம் காதலருடன் அடித்து பிடித்து விளையாடுகின்றனர்.

தொடர்ந்து அதே நேரத்திற்கு வாக்கிங் செல்வதால், எங்களை அடையாளம் கண்டு, புன்முறுவல் பூத்து, தோழமையாக சிரிக்கின்றன, சில ஜோடிகள்.

அங்கு, போலீஸ் அவுட் போஸ்ட் ஒன்றும் உள்ளது. இங்கு, போலீஸ்காரர் ஒருவரும், லத்தியை சுழற்றும் இரண்டு காவலர்களும் உண்டு. இவர்களின் கண்கள், கழுகுப் பார்வை கொண்டவை. இவர்களையும் தொடர்ந்து கவனித்து வந்தேன். இளம் ஜோடிகள் பக்கம் இவர்கள் செல்வதே கிடையாது; மத்திய தர வயதுடைய ஜோடிகளையே, குறி வைக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஜோடிகளை அணுகி, இருவரையும் தனித்தனியே பிரித்து, பெண்ணிடம், 'அவர் உன் கணவரா, பெயர் என்ன, முகவரி என்ன?' என்பது போன்ற கேள்விகளை கேட்கின்றனர். இதே போன்ற கேள்விகள், ஆணிடமும் கேட்கப்படுகின்றன.

அவர்கள் இருவரும் நிஜமான ஜோடி கிடையாது. அவரது மனைவி வீட்டிலிருப்பார்; இவரது கணவர் வேலைக்குப் போயிருப்பார். இவர்கள் இருவருக்கும், 'இல்லீகல்' தொடர்பு. இப்படி மாட்டிக் கொள்வோம் என்பது தெரியாததால், போலீஸ்காரர் கேட்கும் கேள்விகளுக்கு, முன்னுக்குப் பின் முரணான பதில் சொல்லி மாட்டிக் கொள்வர்.

இது, போலீஸ்காரர்களுக்கு, பொன் முட்டையிடும் வாத்து கிடைத்தது போன்ற குஷியை ஏற்படுத்தி விடும். சிக்கியவர் பையிலிருக்கும் ஐம்பது பைசாவைக் கூட விட்டு வைக்காமல், வழித்து, துடைத்து எடுத்து, அனுப்பி விடுவர்.

ஒரு நாளைக்கு, ஒரு ஜோடி என்ற விகிதத்தில் தான் பிடிக்கின்றனர். ஒரே நாளில் பல ஜோடிகளை பிடித்தால், இந்த இடம் டேஞ்சரானது; இனி, இங்கே வரக்கூடாது என, முடிவு செய்து, அங்கே, ஜோடிகள் வருவது நின்று விடும் அல்லவா... அதனால், ஒரு நாளைக்கு ஒரு ஜோடி. பொன் முட்டையிடும் வாத்தை, ஒரே நாளில் அறுத்துக் கொன்று விடுவரா என்ன!

எது, எப்படி வேண்டுமானாலும் போகட்டும்... நீங்கள் எந்த ஊரில் வசித்தாலும் சரி, உங்களது வயதுக்கு வந்த மகள், தங்கை மாலை வேளையில் கம்ப்யூட்டர் கிளாஸ், டியூஷன், பாட்டு கிளாஸ், பரத நாட்டிய கிளாஸ் போன்றவற்றுக்கு செல்லும் போது, ஒரு கண் வைத்துக் கொள்ளுங்களேன். காரணம், வீட்டின் கூடத்திற்கே டெலிவிஷன் என்ற அரக்கன் வந்து விட்ட காலமல்லவா!

கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில்...

வால்மீகி ராமாயணத்தை சொல்லிக் கொண்டிருந்தார், பெரியவர் ஒருவர். கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டனர், ஊர்க்காரர்கள். ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார், கம்பர். அவர், கவிச்சக்கரவர்த்தி ஆகாத காலம் அது!

கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம். ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால் காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர் பாடியிருப்பதை, கதை சொல்பவர், விரிவாக எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நாளும், ராமனது கதையை கேட்கும் மக்கள், தம் வீட்டுக்குப் போகும் போது, தாம் கேட்டவற்றைப் பற்றி பேசியவாறு செல்வர். முறையாக விமர்சனம் செய்ய அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், எந்த எந்த பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி பேசுவர். அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார் கம்பர்.

அன்றும், கதை முடிந்து போகும்போது ஊர்க்காரர்கள் பேசியது கம்பர் காதில் விழுந்தது... 'ராவணன், சீதையை அப்படி தூக்கிப் போனானே... பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக் கூடாதா... சீதையை, அவனால் அணுகவே முடியாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்...' என்று, பேசியபடி சென்றனர். அது, அவர்களது ஆசை.

வால்மீகி காலத்துக்குப் பின், பல துறைகளில் மக்களின் மனோபாவம் மாறி விட்டது.

பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர் கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். இதன் காரணமாக, தமிழில் ராமாயணத்தைப் பாட வேண்டும் என்ற ஆசை, அவருக்கு உண்டாயிற்று.

சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று; அதற்கு பின் தோன்றிய, ஜைன ராமாயணமும் மக்களிடையே நிலைத்து நிற்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும் ஆர்வம், அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.

அவர் காலத்துக்கு முன், ராமன் பலருக்கு உபாசனா தெய்வமாகி விட்டான். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப் பாடத் துவங்கினார்.

பல இடங்களில், காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில், சில சிறு மாற்றங்களைச் செய்தார். தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில் பொருத்தினார். சீதையை நிலத்தோடு ராவணன் பெயர்த்து சென்றதாக எழுதினார்.

வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில், கைம்மை நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற, மாயாசனகனைப் படைக்கிறான் ராவணன். இப்படிச் சில மாற்றங்களை அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும் பாடினார்.

— 'சரி, எதை எடுத்துக் கொள்வது... எதை விடுவது...' மனம் குழம்ப, 'உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறாய்...' என, இன்னொரு மனம் கேட்க... 'உண்மை தானே!' என்றபடி, புத்தகத்தை மூடினேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us