PUBLISHED ON : டிச 11, 2016

'பெண்ணியம் - தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல், இந்தியாவில் சென்ற நூற்றாண்டு வரை, பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என்பதை, விலாவரியாக விளக்கியுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாக காணப்பட்டன என்று, ஆங்கில அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின் படி, ராஜஸ்தானில், ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள், ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில், ஆறு வயதிற்கு குறைந்தவர்களில் ஒரு பெண் குழந்தை கூட இல்லை. இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அலகாபாத் நீதிபதி, குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர்க்காவலாளிகள், காவல் அதிகாரிகள் முதலியோர் அப்பகுதியில் பிறக்கும் பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு, வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தனர்.
மண வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறியாத பாலகர்களுக்கு, மணம் செய்து வைத்தனர். இதனால், பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. இக்கொடுமையிலிருந்து பெண் குழந்தைகளை விடுவிக்க, 1860ல், பத்து வயது முடியும் முன், கணவன், அவளுடன் உறவு கொள்ளுதல் கூடாது என்று, சட்டம் கொண்டு வந்தது. இதுவே எவ்வளவு பெரிய கொடுமை!
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்தியபடியே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை அமைத்து, தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொண்டனர், ஆண்கள்.
இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1871ல், எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்; அதாவது, நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின்னர், 1891ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை, 29 கோடி பேர்; இதில், 14 கோடி பேர் பெண்கள்; அதில், இரண்டரை கோடி பெண்கள் விதவைகள். இதில், வயதான விதவைகளை சேர்க்கவில்லை. குழந்தை திருமணங்களால் ஏற்பட்ட கொடுமை இது! இதில்...
ஒரு வயது விதவைகள், 597 பேர்.
12 வயது விதவைகள், 492.
23 வயது விதவைகள், 1,257.
34 வயது விதவைகள், 2,827. பேர்.
இப்படிப் போகிறது இந்த கணக்கு. எவ்வளவு கேவலம்!
ஒரு ஆண், பல பெண்களை மணக்கும் வழக்கமும் இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகிச் செல்லும் பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால், கணவன் வேறு பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். பல கணவன்மார்கள், தங்கள் மலட்டுத்தன்மையை, மனைவி மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிந்தனர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, அவளையும் கணவனுடன் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.
ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள் உடன்கட்டை ஏறினர் என்று, ஆங்கில அரசாங்க குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறுவது, அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன் இறந்த பின், பெண்கள் தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் பெண்ணை இதற்கு நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
- இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நூல்... நாம், நம் கலாசாரம், பண்பாடு பற்றி பீற்றிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை.
தினமும் காலையில் எழுந்தவுடன், ஒரு கிலோ மீட்டராவது ஓடுங்கள்.
* பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்
* பகலில் இரண்டு மணி நேரம் தூங்குங்கள்.
* தினசரி பேப்பரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.
* தினமும் நண்பர்களுடன், காலையில், மூன்று மணி நேரமும், மாலையில் மூன்று மணி நேரமும் மனம் விட்டு பேசுங்கள்.
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போங்கள்!
இத்தனையையும் செய்ய உங்களுக்கு நேரம் இருந்தால், நீங்கள் வேலை வெட்டியில்லாதவர்; உபயோகமான வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளுங்கள்.
டீ வாங்க வெளியே வந்த போது, ஆபீஸ் கேட் ஓரமாக நின்று, வெற்றிலை, புகையிலை குதப்பலைத் துப்பிக் கொண்டிருந்த குப்பண்ணா கண்ணில் பட்டார்.
ரொம்ப, 'ரிலாக்ஸ்டு' மூடில் இருந்தவரை அழைத்து, அமர வைத்தேன். அவரிடம் சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாகி விட்டதே என்று, 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று வள்ளுவர் சொன்னாரே... என்ன அர்த்தத்தில்...' என்று கேட்டேன்...
'எண்ணிக் கொள்...' என்று, ஆரம்பித்த குப்பண்ணா சொன்னது...
* ஐம்பொறிகளில் காதைத் தவிர, மற்ற நான்கும், அதனதன் வேலைகளை அதிகமாக செய்வதால், சோர்வடைந்து விடுகின்றன. காதுக்கு மட்டும், அந்த சோர்வே கிடையாது.
* ஒன்பது வகை பக்திகளில், முதலில் நிற்பது சிரவணம்; இறைவன் புகழை, செவியால் பருகுவதே பக்தியின் முதல் நிலை.
* செவியால் அழகு பெறும் சில விலங்குகள் முயல், கங்காரு; 'நெடுஞ்செவிக் குறுமுயல்' என்று, பெரும்பாணாற்றுப் படையில் வருகிறது.
* காது ஓங்கார வடிவமுள்ளது என்றும், அதன் நிறத்தைக் கொண்டு, பிற்காலத்தில் குழந்தையின் நிறத்தை உறுதி செய்யலாம் என்றும், என் பாட்டி சொல்லி இருக்கிறாள்.
* காதளவோடிய கண்கள்... என்று, பெண்களின் கண் அழகை, காதோடு சம்பந்தப்படுத்தி பாடுகிறான் கவிஞன்.
* வேதத்திற்கு, 'சுருதி' என்ற பெயர் உண்டு. பரம்பரையாகக் காதால் கேட்கப்பட்டு வந்ததால், இப்பெயர் ஏற்பட்டது.
* காதுகளில் அணிந்த குண்டலங்களை தானமாக வழங்கிய புகழ், கர்ணனுக்கே உரியது. கர்ணத்தால் புகழ் பெற்றதால் தான், அவனுக்கு கர்ணன் என்று பெயர் வந்ததோ, என்னவோ!
* காதில்லாப் பை, காதறுந்த ஊசி, காதில்லா ஜாடி, செவிவழிச் செய்தி, கர்ண பரம்பரைக் கதை, இந்த சொல் வழக்கு எல்லாம், காதின் பெருமையை உரைப்பதாகும்.
* தோடுடைய செவியன்... இப்பாட்டு, செவிக்குப் பெருமை தரும் திருஞான சம்பந்தரின் முதல் பாட்டு. காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்... என்கிறார் கம்பர்.
* செவியிற் சுவை யுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்... என்று கடிந்துரைக்கிறார், திருவள்ளுவர்.
* நீலக்குதம்பை, தாளுருவி, வடுக வானி, திருக்களாவம், குழை முதலியன பழங்காலக் காதணிகள். காதிலே அணி பூணுதல் கண்ணுக்கு ஒளி நல்கும்... இது, தற்கால உடல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!
- என்று தன், 'விரிவுரை'யை குப்பண்ணா முடிக்கவும், நான் பெஞ்சில் இருந்து குதித்து, குறுக்குப் பாதையில், வேகமாக ஓடினேன்.
