PUBLISHED ON : டிச 11, 2016

மங்கம்மா சபதம் படப்பிடிப்பின் போது, மற்றொரு சம்பவம் நடைபெற்றது. அப்படத்தின் இயக்குனர் ஆசார்யா அமைத்திருந்த நகைச்சுவை காட்சிகளில், கலைவாணருக்கு போதிய திருப்தி ஏற்படவில்லை. அதனால் தம் அதிருப்தியை, துணிந்து, ஜெமினி அதிபர் வாசனிடம் தெரிவித்தார்.
பொதுவாக, ஜெமினி ஸ்டுடியோவில், கதை இலாகா எப்படி திட்டமிடுகிறதோ அதன்படி தான் நடிகர், நடிகைகள் பணி புரிவது வழக்கம். ஆனால், அவ்விதிகளை மீற துணிந்தார் கலைவாணர். காரணம், ஜெமினியின் விதிகளை, மீற வேண்டுமென்ற பிடிவாதமோ அல்லது லட்சியமோ அல்ல; பிரபல ஜெமினி தயாரிப்பான அப்படம், நகைச்சுவையிலும், நிகரற்று விளங்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு தான், தம் கருத்தை, எஸ்.எஸ்.வாசனிடம் தெரிவித்தார்.
கலைவாணரின் கருத்தை ஏற்றுக் கொள்ள தயங்கினார், வாசன். காரணம், ஒரு இயக்குனரிடம் பொறுப்பை ஒப்படைத்த பின், அவர் அமைத்துள்ள காட்சிகள், எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை என்று புகார் எழுப்ப, அவர் விரும்பவில்லை.
அதுபோன்ற தலையீடு, 'இயக்குனருக்குரிய தகுதியை குறைக்கலாம்; அவரது மனம் வருத்தமடையலாம்...' என்ற எண்ணம் கொண்டவர், வாசன்.
ஜெமினி அதிபரின் தயக்கத்தை புரிந்த கலைவாணர், மங்கம்மா சபதம் படத்தில் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகள், படத்திற்கு, தனிச் சிறப்பை தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான், தம் ஆட்சேபணையை கூறியதாக, தெரிவித்தார்.
சட்டென்று, ஒரு முடிவுக்கு வந்து விடாமல், தம் கையை, மோவாய்க்கருகே வைத்து, சிந்திக்க துவங்கினார், வாசன்.
'நீங்களும் சிந்தியுங்கள், நானும் சிந்தித்து விட்டுத் தான் சொல்கிறேன். இப்படம் சம்பந்தப்பட்ட, காமெடி காட்சிகளை, என்னிடம் ஒப்படையுங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்படும்படி, நான் அமைத்து தருகிறேன்...' என்று கூறி, அங்கிருந்து சென்றார் கலைவாணர்.
அன்று இரவு கண் விழித்து, மங்கம்மா சபதம் படத்துக்காக, எப்படிப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பது என்று சிந்தித்தார்; அதன் பயனாக, நல்ல பலன் கிடைத்தது.
அடுத்தநாள், உறங்காத கண்களோடு, உற்சாகத்தோடு, வாசனை கண்ட கலைவாணர், நகைச்சுவை காட்சிகள் மிகவும் திருப்தியாக அமைத்து விட்டதாக தெரிவித்தார். பட ஒத்திகையின் போது, அக்காட்சிகளைக் கண்ட வாசனும், இயக்குனர் ஆசார்யாவும் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தனர். தாம் ஏற்கெனவே தயார் செய்திருந்த, காமெடி காட்சியை விட, கலைவாணர் அமைத்திருந்த காட்சிகள், மிக சிறப்பாக இருப்பதாக, பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டார், ஆசார்யா.
அப்படத்தில் இடம் பெற்றிருந்த, நகைச்சுவை காட்சிகள், மகத்தான வரவேற்பை பெற்றன.
மங்கம்மா சபதம் படத்தில், கலைவாணர் கழைக் கூத்தாடியாக வந்து, மதுரத்திடம், மாம்பழத்திற்கு பதிலாக, முத்தம் கேட்பதும், பின் முத்தம் பெற்று விட்டது போல், கன்னத்தை, கையால் தடவியவாறு, வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் காட்சி இருக்கிறதே, அது, அவருக்கே உரிய தனி பாணி!
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப நாளன்று, மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது...
கலைவாணரும், மதுரமும், 'மேக்-அப்' போட்டு, காரில், ஜெமினி ஸ்டுடியோவுக்கு வந்தனர். அவர்களின் கார் உள்ளே போக முடியாதபடி, குறுக்கே, இரும்புச் சங்கிலி கோர்க்கப்பட்டிருந்தது.
அங்கே உட்கார்ந்திருந்த காவல்காரன், கலைவாணரைக் கண்டதும் எழுந்து நிற்கவும், 'இருப்பு சங்கிலியைக் கழற்றி விடப் போகிறான்...' என நினைத்தபடி பார்க்க, மாறாக, 'பாஸ் (எஸ்.எஸ்.வாசன்) ஒருவரின் கார் நுழைய மட்டுமே இச்சங்கிலியை கழற்றிவிட உத்தரவு; மற்றவர்கள் இந்த இடத்திலேயே இறங்கி, வரவேற்பு வாசல் வழியே நடந்து தான், உள்ளே போக வேண்டும்...' என்றான்.
இவ்விதம், காவல்காரன் சொன்னதும், கலைவாணரின் முகம் சுருங்கியது. பின் பக்கத்தில் திறந்திருக்கும் ஜெமினி ஸ்டுடியோவின் மெயின் கேட்டை, ஒரு முறை நோக்கினார். பின், டிரைவரிடம், 'காரை, வந்த வழியே திருப்பி ஓட்டு; ஜெமினி ஸ்டுடியோவில், இப்படியொரு இரும்புச் சங்கிலி தடை இருக்கும் விஷயத்தை, இன்று தான் தெரிந்து கொண்டேன். 'மேக் - அப்'போடு நடந்து சென்று, நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை...' என்றார்
என்.எஸ்.கிருஷ்ணன்.
காரை வந்த வழியே திருப்பி ஓட்டினார் டிரைவர். நேராக, தன் இல்லத்தை அடைந்து, 'மேக் - அப்'பை கலைத்து விட்டதுடன், மற்ற நடிகர்களிடமும், அன்று படப்பிடிப்பு இல்லை என்று அறிவித்து விட்டார். 'ஜெமினி ஸ்டுடியோவில், நுழைந்த முதல் நாளே, இப்படி ஆகிவிட்டதே...' என்று, சில நடிகர்களுக்கு உள்ளூர வருத்தம் ஏற்பட்டாலும், 'இரும்புச் சங்கிலி தடைக்கு பணியாமல், கலைவாணர் திரும்பி விட்டது சரியான முடிவு தான்...' என்ற எண்ணமும், அவர்களுக்கு ஏற்படவே செய்தது.
கலைவாணர் திரும்பிப் போன செய்தி, வாசனுக்கு எட்டியது. காவல்காரன், ஜெமினியின் சட்ட திட்டங்களை, கலைவாணரிடம் தெரிவித்ததன் விளைவு தான் அது என்பதை கேட்டறிந்தவருக்கு அச்சம்பவம் வேதனையை அளித்தது. உடனே, பெருந்தன்மையுடன் டெலிபோனில், கலைவாணரை தொடர்பு கொண்டார். அவரிடம், மிகவும் துணிச்சலோடு, 'நீங்கள் காரில் வரும் போது வழி விடுகிற இரும்புச் சங்கிலி, நடிகர்களுக்கு மட்டும் வழி விடாமல் இருப்பது ஏன்...' என்று, என்.எஸ்.கிருஷ்ணன் கேட்ட கேள்வி, ஜெமினி அதிபரை, வருத்தியது.
இதுவரை, அப்படிப்பட்ட முறை அமலில் இருந்ததை, ரத்து செய்து விடுவதாக கலைவாணரிடம் தெரிவித்தார். அந்த அறிவிப்பை கேட்டு, தம் நன்றியை ஜெமினி அதிபருக்கு தெரிவித்ததுடன், உடனே மீண்டும், படப்பிடிப்புக் குழுவினரோடு கிளம்பினார். கலைவாணரின் காரை கண்டதும், பதறி எழுந்த காவல்காரன், ஓடிச் சென்று, தடைச்சங்கிலியைக் கழற்றி, வழி விட்டான்.
அதன் வாயிலாக, மற்ற கலைஞர்களுக்கும் வழி பிறந்தது. அன்று முதல், தடை சங்கிலி அகற்றப்பட்டது. இதுபோன்ற எத்தனையோ சுய கவுரவத்தை தாமும் பெற்று, மற்றவர்களும் பெற, காரணமாக திகழ்ந்தார், கலைவாணர்.
கோவையில் இயக்குனர் நாயுடுவும், நாராயண அய்யங்காரும் சேர்ந்து, சென்ட்ரல் ஸ்டுடியோவில், படங்கள் தயாரித்து வந்த காலத்தில் நடந்த சம்பவம் இது...
ஜெமினி அதிபர் வாசனை போல், இயக்குனர் மற்றும் படத் தயாரிப்பாளரான ஸ்ரீராமுலு நாயுடுவும், கண்டிப்புக்கு பெயர் பெற்றவர்.
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் ஸ்ரீராமுலு நாயுடு, கெடுபிடிகளோடு இருந்து வந்தாலும், அவர், கலைவாணரை மதிக்கவே செய்தார். ஸ்டுடியோவின் ஒரு பகுதியை, அவருக்கென்று ஒதுக்கி தந்திருந்தார். மற்ற வெளியூர் நடிகர், நடிகையர், படங்களில் நடிக்க வந்தால், வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்து, படங்களில் நடிக்கும் நேரத்தில் மட்டும், ஸ்டுடியோவில் நுழைவர். ஆனால், கலைவாணரோ, தம் நடிகர் குழுவினரோடு ஸ்டுடியோவில் தங்கும் அனுமதி பெற்றிருந்தார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில், ஆரிய மாலா படத்தை, தயாரிக்க திட்டமிட்டிருந்த போது, அதில், 'கதாநாயகனாக யாரை போடுவது...' என்ற பேச்சு எழுந்தது. ராமுலு நாயுடுவும், நாராயண அய்யங்காரும் அது பற்றி பேசிய போது, 'பி.யூ.சின்னப்பாவை அப்படத்திற்கு கதாநாயகனாக போடுங்கள்...' என, உரிமையுடன் சிபாரிசு செய்தார், கலைவாணர்.
'யாரை வேண்டுமானாலும் படத்தின் கதாநாயகனாக போடட்டும்; நமக்கு என்ன வந்தது... நம் வரையில், நகைச்சுவை காட்சிகளில் நன்கு நடித்து கொடுத்து, பணத்தை வாங்கிப் போவதே மேல்...' என்று, நினைக்காமல், தம் கருத்துகளை, துணிவோடு, படத் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தார் என்றால், அதற்குரிய
தகுதியும், உரிமையும் கலைவாணரிடம் இருந்தது.
— தொடரும்.
நன்றி:
வ.உ.சி., நூலகம்
பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.
மா. பாலசுப்ரமணியன்
