sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த வாரம், இரண்டு நாட்கள் புதுச்சேரி அலுவலக வேலை; லென்ஸ் மாமாவும் உடன் வந்து இருந்தார். அவருக்கு அங்கு வேலை ஏதும் இல்லை; இருந்தும் வந்திருந்தார். காரணம், கம்பெனி ரேட்டிலேயே வேண்டிய, 'சரக்கு'களை புதுவையில் பெற்றுக் கொள்ளலாமே... அதற்கு தான்!

புதுவையில் இறங்கியதுமே, கடலூர் அலுவலகத்திற்கு போன் செய்து, 'ஒரு கிலோ டைகர் பிரான்ஸ் கொடுத்து அனுப்புங்க...' என்றார்.

எறால் மீன் வகையில், 'டைகர் பிரான்ஸ்' என்பது, 'ஒஸ்தி' சமாசாரம்; ஏற்றுமதிக்கு மட்டுமே வளர்க்கப்படுவது. ஒரு கிலோ, 1000 - 1,500 ரூபாய்!

ஐஸ் போட்டு பதப்படுத்தாமல், பிடித்த சில மணி நேரத்திலேயே, சமைத்து உண்டால், நாற்றமில்லாமல், சுவைபட இருக்கும் என்று கூறியுள்ளார் லென்ஸ் மாமா.

மாமா கேட்டிருந்த சமாசாரம், கடலூரில் இருந்து மதியம் வந்து சேர்ந்தது. அதை, புதுவையில் கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு ஓட்டலுக்கு அனுப்பி வைத்தார். ஓட்டலின் முக்கியஸ்தர்கள், மாமாவுக்கு வேண்டியவர்கள். அவர்களுக்கு போன் போட்டு, 'இரவு, 8:00 மணிக்கு வந்து விடுகிறேன்; நாலு சீட், 'ரிசர்வ்' செய்து வையுங்கள். அத்துடன், நான் வந்தபின், நான் கூறும் பக்குவத்தில், பிரானை சமைத்தால் போதும்...' என்றும் கூறி விட்டார்.

மாமா குறிப்பிட்ட நேரம் வந்தது. 'மணி... போதும் வேலை செய்தது; எப்போதும் உழைத்துக் கொண்டே இருந்தால், உடல் நலன் பாதித்து விடும். அவ்வப்போது, 'ரிலாக்சேஷன்' தேவை; அப்போதான், 'மைன்ட் பிரஷ்' ஆக இருக்கும், வா, போகலாம்...' என, அழைத்தார்.

தனக்கு பின் பாட்டுப் பாடவும், கம்பெனி கொடுக்கவும் ஆள் தேவை என்பதால், இவ்ளோ அறிவுரை.

எங்களுடன் இன்னும் இரண்டு, லோக்கல் நண்பர்களும் சேர்ந்து கொண்டனர்.

ஓட்டலின் முதல் தளம், கடலை ஒட்டியது. கடல் காற்றும், அதன் அலை ஓசையும் சூழ்நிலையை இதமாக்கியது. எங்களுக்கு, ரிசர்வ் செய்திருந்த டேபிளில் அமர்ந்தோம். அடுத்த டேபிளில், சேலை கட்டிய தமிழ் பெண்கள் இருவர், வெள்ளைக்காரப் பெண்மணிகள் போல், பப்ளிக்காக, பீர் அருந்தியும், அவ்வப்போது வெண்குழல் வத்தியை ஊதியபடியும் இருந்தனர்.

'கலாசார மாற்றம் எவ்வளவு வேகமாக போகிறது பார்... இப்படி மாறணும்ப்பா சொசைட்டி...' என்றார் மாமா.

'என்ன மாற்றமோ... என்ன முன்னேற்றமோ...' என, மனதிற்குள் நொந்தபடியே, எலுமிச்சை ஜூசை, 'ஸ்ட்ரா' மூலம், ஒரு இழுப்பு இழுத்து, கடலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

இதற்குள், மாமா கூறிய பக்குவத்தில், எறாவை தயார் செய்து எடுத்து வந்திருந்தனர். நண்பர்களும், மாமாவும், 'ஆகா... பேஷ் பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு...' என, சப்புக் கொட்டி சாப்பிட்டனர்.

லென்ஸ் மாமா வெளியூர்களுக்கு செல்லும் போது, எவ்வளவு பெரிய ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தாலும், இரவு உணவுக்கென, சில ஓட்டல்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். அவற்றில் சில பிளாட்பார கையேந்தி பவன்களும் அடங்கும்.

அப்படி ஒரு சாலையோர ஓட்டல், புதுவையிலும் உண்டு. அவர்களது நன்மை கருதி, ஓட்டல் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.

அந்த ஓட்டலை அடைந்தோம். சைனீஸ் மற்றும் பர்மிய உணவுகளும், தந்தூரி வகைகளும், நம்மூர் இட்லி,தோசையும் உண்டு; அங்கு, பிளாட் பாரத்தில் போடப் பட்டுள்ள மேஜை, நாற்காலியில் அமர்ந்து தான் உண்ண வேண்டும்.

ஓட்டலை நடத்திக் கொண்டிருந்தவர் ஓய்வு பெற்றுவிட, இப்போது, அவரது மகன் நடத்தி வருகிறார். அவருடன் பேச்சுக் கொடுத்தபடியே நூடுல்ஸ் சாப்பிட்ட லென்ஸ் மாமா, 'ஆமாம்... ஒரு போலீஸ்காரர் தினமும் வந்து, சிக்கன், மட்டன் என, 1,000 - 2,000 ரூபாய்க்கு, 'ஓசி'யில வாங்கீட்டு போவாரே... இன்னமும் வர்றாரா...' எனக் கேட்டார்.

இந்தக் கேள்வியை காதில் வாங்கிய ஓட்டலின் இளைய முதலாளியான அந்த இளைஞர், மாமாவை பார்த்து நமுட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து, 'அப்புறம் சொல்கிறேன்...' என்பது போல, கண்ணால் சைகை செய்தார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சென்றபின், எங்கள் அருகே வந்து, 'இப்போ வர்றது இல்லே... 'அஜினோமோட்டோ'வ ஏற்றி விட்டேன். ஆள் அம்பேலாகி விட்டார்...' என்றார்.

'அஜினோமோட்டோ' என்பது, ஒரு வகை உப்பு. சீனர்கள், இதை, உணவு தயாரிப்பின் போது பயன்படுத்துவர். உணவுப் பொருட்களின் நிறம் மாறாமல் இருப்பதற்காக, இதை பயன்படுத்துகின்றனர் என, நினைக்கிறேன். இந்த உப்பை அளவுக்கு அதிகமாக சேர்த்தால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விடும்.

இளைஞர் தொடர்ந்தார்... 'எங்கப்பா பொறுப்பில இருந்தவரைக்கும், எதற்கு பிரச்னை என நினைத்து, இதுபோல, 'ஓசி' கிராக்கிகளை சகித்து, உணவைக் கொடுத்துடுவார். என்னால இந்த அநியாயத்த பொறுத்துக்க முடியல. யோசிச்சுப் பாத்தேன்... உப்பு, காரத்த அதிகமாக்கறதுனால ஒரு பயனும் இருக்கப் போறதில்ல. உணவுப் பொருளோட சுவை மாறியிருக்கிறத கண்டுபிடிக்க முடியாமலும், அதேநேரம், உண்டவருக்கு பாதிப்பை உண்டாக்குறதுக்கு என்ன வழின்னு யோசித்தேன். 'அஜினோமோட்டோ' கை கொடுத்தது.

'அன்று நான் கொடுத்த உணவச் சாப்பிட்டுட்டு, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஆசாமி நாலு நாள், 'ஜிப்மரில்' (அரசு மருத்துவமனை) அட்மிட் ஆகிட்டாருன்னா பாத்துக்கங்க. அதுக்குபின், அவர், ஓட்டல் பக்கம் தலை வெச்சுக்கூட படுக்கல...' என்றார்.

- 'ஓசி'யில் உண்போரே... இனி, எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

ஜெர்மன் நாட்டின், சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிட்லர்; இவருக்கு, ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு.

ஒரு சமயம், பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவரை அழைத்து வரச் சொன்னார். அவரிடம், 'என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது; நான் எப்போது சாவேன்...' எனக் கேட்டார்.

ஹிட்லர் ஜாதகத்தை தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர், 'யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள்...' என்று சொன்னார்.

(யூதர்கள் தான், தம் நாட்டைச் சுரண்டியவர்கள்; அவர்களால்தான், ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் ஹிட்லர். அதனால், ஆயிரக்கணக்கான யூதர்களை விஷவாயு அறைகளில் அடைத்து, மிகக் கோரமாகக் கொன்றவர்.)

ஜோதிடர் பதிலைக் கேட்ட ஹிட்லர், 'யூதர்களுக்குத்தான் ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வருகிறதே... எந்த பண்டிகையின் போது, இறப்பேன் என்பதை சரியாக சொல்லுங்கள்...' என்றார்.

'நீங்கள் என்று இறக்கிறீர்களோ, அந்த நாள் யூதர்களின் பண்டிகை நாளாக, நிச்சயம் கொண்டாடப்படும்...' என்றார் ஜோசியர்.

அதன்பின், அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை.

- எப்போதோ, எதிலோ, எங்கோ படித்தது!

அமெரிக்கர்களுக்கு, பொதுவாக உலக அறிவு கம்மி. அதுபோலவே கூட்டல், கழித்தல்களில் கூட, 'சீரோ!'

என் சொந்த அனுபவத்தில், இதைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை நியூயார்க் நகரில், டாக்சியில் பயணம் செய்து, பணம் கொடுக்கும்போது, சர்வீஸ் சார்ஜ் கட்டணத்திற்கு, 10 சதவீதம் கொடுக்க வேண்டும்; மனக்கணக்காக அதை கணக்கிட்டு, டாக்சி டிரைவரிடம் அளித்தேன். கால்குலேட்டரில் கணக்கிட்டுக் கொண்டிருந்தவர், புருவம் உயர, 'இந்தியக்காரங்க கெட்டிக்காரங்கப்பா...' என்றபடியே, கட்டணத்தை வாங்கிச் சென்றார்.

லண்டனில் உள்ள கல்லூரி ஒன்றில், விரிவுரையாளராக பணிபுரியும் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர்களது கல்லூரி, அமெரிக்க மாணவர்கள், இங்கிலாந்தில், தம் கல்லூரியில் மேற்படிப்பு படிக்க, நுழைவுத் தேர்வு நடத்தியதாம்...

ஒரு மாணவன், படு புத்திசாலியாக எல்லா கேள்விகளுக்கும், 'டக் டக்'கென்று, பதில் சொல்லிக் கொண்டிருந்தானாம். அவனை தேர்ந்தெடுத்து விட்டனர். அந்த பையன் ஒரு சந்தேகம் கேட்டுள்ளான்... என்ன சந்தேகம் தெரியுமா? 'நான் இங்கிலாந்து வந்து மேற்படிப்பு படிக்கத் தயார்; ஆனால், இங்கிலாந்தில் எனக்கு மொழி பிரச்னை இருக்குமே... என்ன செய்வது...'

இங்கிலாந்தின் மொழியும் ஆங்கிலம் தான் என்பது கூட, அம்மாணவனுக்குத் தெரியவில்லையாம்!

- இது எப்படி இருக்கு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us