தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜி.சுகந்தகுமார், தேனி: இறந்தவர்களின் சிலை, புகைப்படம், சமாதி முன், விழுந்து நமஸ்கரிப்பதால் பலன் அதிகமா அல்லது உயிருடன் உள்ளவர்கள் முன், விழுந்து நமஸ்கரிப்பதில் பலன் அதிகமா?

இரண்டாவதில் தான் பலன் அதிகம்; எப்பவும் இல்லை என்றாலும், ஏதோ அவ்வப்போதாவது நிச்சயம் பலன் கிடைக்கிறது என்பதை, கண்ணெதிரே கண்டு கொண்டு தானே இருக்கிறோம்!

சி.வெற்றிவேல், ஆரப்பாளையம்: பட்டமும், பட்ட மேற்படிப்பும் படித்த இளைஞர்கள், வேலையின்றி, தன்னம்பிக்கை இழந்து, சோர்வாக எதிர்காலத்தை நினைத்து பயப்படும் இன்றைய நிலை பற்றி...

தாம் படித்து விட்டோம் என்ற நினைப்பே, 'என் தகுதிக்கு ஏற்ற வேலை அல்ல இது...' என, கிடைக்கும் பல வேலைகளையும் உதறித் தள்ளத் தூண்டுகிறது! பட்டங்களைப் பெற்ற இவர்களுக்கு, உண்மையிலேயே பல விஷயங்களில் அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. இதை, அவர்கள் சுய சோதனை மூலம் அறிந்து கொண்டால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கும்!

என்.வனிதா, குமுளி: தங்கள் குழந்தைகளை, தாங்களே மட்டம் தட்டிப் பேசும் பெற்றோர் பற்றி...

மனோதத்துவம் அறியாத வர்கள்... இதனால், அக்குழந்தையின் மனநிலை எவ்வாறு பாதிக்கும் என்பதையும், அதனால், அவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுப் போகும் என்பதையும் அறியாதவர்கள். இப்படிப்பட்ட பெற்றோர், சிறந்த மனோதத்துவ மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்!

எஸ்.கலைவாணி, திருப்பூர்: நேரமே போக மாட்டேங்குது... வாழ்க்கையே, 'போர்' அடிக்குது எனக்கு...

வாழ்வின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க ஆரம்பித்து, திட்டமிட துவங்கினால், நேரமே போதவில்லை என கூற ஆரம்பித்து விடுவீர்கள்; 'போர்' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். முன்னேற்றம் குறித்து நல்ல திட்டங்களை யோசித்துக் கொண்டே இருந்தால், ஒரு நாள் நிச்சயம், 'பொறி' தட்டும்; வளமான வாழ்வுக்கான பாதையில் முதல் அடி எடுத்து வைத்து விடலாம்!

என்.வந்தியபெருமாள், கடலூர்: தற்போதைய சூழ்நிலையில், ரசிகர்கள், சிறப்பான கதை யோட்டமுள்ள படங்களை விரும்புகின்றனரா அல்லது கவர்ச்சி ஆட்டத்தை விரும்புகின்றனரா?

இடை, தொடையை கவர்ச்சி ஆட்டங்களில் பார்த்து, அவற்றை ரசிக்க பழகி விட்ட ரசிகர்களுக்கு, அவற்றை முற்றிலும் துறக்க விருப்பமில்லை. அதே நேரம், நல்ல கதையும், கவர்ச்சியையும் எதிர்பார்ப்பவர்களாகவும் இருக்கின்றனர்!

ஜெ.ஆராமுதன், கோவில்பட்டி: சொத்து பிரச்னை விரைவாக முடிய, அடிதடி, பஞ்சாயத்து, கோர்ட் இம்மூன்றில் எதை தேர்ந்தெடுக்கலாம்?

கோர்ட்: சம்பந்தப்பட்டவர்களின் பேரன், கொள்ளு பேரன் காலத்தில் தான் முடிவு தெரியும்!

பஞ்சாயத்து: அப்பத்தை பங்கு போட, குரங்கிடம் சென்ற பூனைகளின் கதையாகி விடும்!

அடி தடி: 'மாமியார் வீட்டு' விருந்தாளியாக்கி விடும்!

- சம்பந்தப்பட்டவர்கள், விட்டுக் கொடுத்து, தமக்குள்ளே பேசி முடிப்பதே சிறந்த வழி!

எம்.ரத்தினவேல், திருவொற்றியூர்: தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை காதலிக்கலாமா?

வலியச் சென்று, தகுதிக்கு மீறிய பெண்ணை காதலித்தால், 'டேஞ்சர்...' பின்னி எடுத்து விடுவர். அவர்களாகவே முன் வந்தால், 'கன்சிடர்' செய்யலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us