தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன்... பை இந்தியன்' - 'இந்தியனாக இரு... இந்தியப் பொருளையே வாங்கு' என்ற கோஷம், மறைந்த பிரதமர் இந்திரா காலத்தில், பலமாக ஒலித்ததாம்! தற்போது, இக்கோஷம், அமெரிக்காவில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

ஜப்பானியப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. குண்டூசி முதல் கார் வரை, ஜப்பானிய தயாரிப்புகளையே வாங்குகின்றனர் அமெரிக்கர்கள்.

இதனால், அமெரிக்க பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளதுடன், ஜப்பானியரின் போட்டியால், அமெரிக்க தொழிற்சாலைகள் பல, 'கிடுகிடு'வென மூடப்பட்டு வருகின்றன. இப்போட்டிக்கு பலியானது அமெரிக்காவின் மிகப்பெரிய கார் தொழிற்சாலையான, 'போர்டு' கார் கம்பெனி.

ஜப்பானியரின் வியாபார தந்திரம் மிக நுணுக்கமானது. தம் பங்கு, 'மார்க்கெட் ஷேர்' எவ்வளவு எனக் கணக்கிடுகின்றனர். போட்டியாளரின் வியாபாரம் என்ன என்பதையும் அறிகின்றனர். அதற்கு ஏற்ப, பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால், உற்பத்தியாளருக்கு ஏற்படும் இழப்பை, ஜப்பானிய அரசு ஈடுசெய்து, ஊக்குவிக்கிறது.

உதாரணமாக, உங்கள் ஊர் கிராம சோடா கம்பெனி ஒன்று, உங்கள் கிராமத்திற்கும், சுற்று வட்டாரத்தில் உள்ள, 20 கிராமங்களுக்கும் சோடா - கலர், 'சப்ளை' செய்கிறது என வைத்துக் கொள்வோம். சோடா கம்பெனியின் தினசரி விற்பனை, 100 பாட்டில்கள் என்றும், ஒரு சோடா பத்து ரூபாய் என்றும் கொள்வோம்.

ஜப்பான் ஆசாமி இந்த வியாபாரத்தை பார்க்கிறார்... அவரும், உங்கள் கிராமத்திலேயே சோடா கம்பெனி போடுகிறார். உள்ளூர் சோடா, 10 ரூபாய் என்றால், அதைவிட தரமான சோடா தயார் செய்து, ஐந்து ரூபாய் என, விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.

மக்கள் எந்த சோடாவை வாங்குவர்?

இப்படியே, ஜப்பான்காரர் மார்க்கெட் பிடிப்பார்; உள்ளூர் ஆசாமி, நஷ்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், சோடா கம்பெனியை இழுத்து மூடுவார். எதிரியே இல்லாத நிலை உருவானதும், மெதுவாக தன் தயாரிப்பின் விலையை ஏற்றுவார், ஜப்பான்காரர். பின், போட்டியே இல்லாத தனிக்காட்டு ராஜாவாகி விடுவர்.

இந்த நிலையை அவர் அடையும் வரை ஏற்படக் கூடிய நஷ்டத்தை, ஜப்பானிய அரசு ஈடு செய்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சிக்கலில் மாட்டி, தன் நடையைக் கட்டி விட்டது, 'போர்டு' மோட்டார் கம்பெனி!

இதனிடையே, 'அமெரிக்க தொழிலாளர்கள் சொகுசு பேர்வழிகள்; ஜப்பானியர் போல முனைப்புடன் வேலை செய்து பழக்கமில்லாதவர்கள்...' என்று அமெரிக்க தொழிலாளர் பற்றி துடுக்காக ஒரு வார்த்தையை விட்டுவிட்டார், ஜப்பானிய அரசியல் பிரமுகர் ஒருவர்.

இந்த, 'துடுக்கு' வார்த்தை, அமெரிக்க தொழிலாளர்களிடையேயும், அமெரிக்க பொருட்களை விற்கும் வியாபாரிகளிடையேயும் மிகுந்த கொதிப்பை ஏற்படுத்தி விட்டது.

கார் விற்பனை செய்யும் அமெரிக்கர் ஒருவர், புத்தம் புது ஜப்பானிய கார் ஒன்றை தம், 'ஷோரூம்' முன் நிறுத்தி, ஜப்பானை கண்டிக்கும் விதத்தில் வாசகங்கள் எழுதி, 'ஒரு டாலர் பணத்தை, இந்த உண்டியலில் போட்டு விட்டு, அருகே உள்ள கம்பால், ஜப்பான் காரை ஒரு அடி, அடித்து விட்டுச் செல்லுங்கள்...' என, குறிப்பிட்டு இருந்தார்.

'அமெரிக்கனாக இரு; - அமெரிக்க பொருளையே வாங்கு!' என, கோஷமிடும் ஆசாமிகள், ஜப்பான் தயாரிப்பு காரை ஒவ்வொரு டாலராகப் போட்டு அடித்து, நொறுக்கினர்.

விஷயம் இப்படி இருக்க, அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளும், சிப்பந்திகளும் எந்த நாட்டு கார்களை பயன்படுத்துகின்றனர் என, ஒரு,'சர்வே'எடுத்தது அமெரிக்க பத்திரிகை ஒன்று. அந்த சர்வேயில், 75 சதவீத கார்கள், வெளிநாட்டு கார்கள் என்பதை கண்டறிந்து, 'ஷேம்' -- வெட்கம் என, தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

'அமெரிக்கர்கள் என்ன அமெரிக்கர்கள்; எல்லாருக்கும் இக்கரைக்கு அக்கரை பச்சை... எல்லா நாட்டவரும், தம் நாட்டு தயாரிப்பை விட, மற்ற நாட்டுத் தயாரிப்பைத் தான் விரும்புவர்...' எனக் கூறுகிறீர்களா...

ஜப்பானியர் மட்டும் விதி விலக்கு... ஜப்பானிய அரசு, ஜப்பானிய மக்களிடம், 'அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அப்போதுதான் அமெரிக்காவிற்கும், நம் நாட்டிற்கும், 'டிரேடு - பாலன்ஸ்' சரி வரும்' என, தொண்டைத் தண்ணீர் வற்ற கத்துகிறது... நோ யூஸ்!

'ஜப்பானியராகவே இருப்போம்; ஜப்பானிய பொருட்களையே வாங்குவோம்...' என்ற கொள்கையில் உறுதியாக உள்ளனர் ஜப்பானியர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us