தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தோன்? எம்.ஜி.ஆர்., (9)

நான் ஏன் பிறந்தோன்? எம்.ஜி.ஆர்., (9)

நான் ஏன் பிறந்தோன்? எம்.ஜி.ஆர்., (9)


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

திடீரென்று ஒருநாள், என்னை கம்பெனிக்கு அழைத்தனர்; போனேன்.

'கத்திச் சண்டை சீன் இருக்கு; நீயும், வி.எஸ்.மணியும் ஒத்திகை பார்த்துக்குங்க...' என்றார், உதவி இயக்குனர், ரகுநாத்.

'சரி...' என்றேன்.

அக்காலத்தில், சண்டைப் பயிற்சி தர, 'ஸ்டன்ட் மாஸ்டர்' கிடையாது. யார் சண்டைக் காட்சியில் நடிக்கயிருக்கின்றனரோ, அவர்களே தங்களுக்குள், எப்படி சண்டையிடுவது என்பதை பற்றி, பேசிக் கொள்ள வேண்டும்.

இப்போது, தேவையான அளவுக்கு புதிது புதிதாக கக்திகளை தருவதுபோல், அப்போது தரமாட்டார்கள். பழைய கத்தி தான்; ராஜஸ்தான் பாணியில் உள்ள வளைவான அசல் இரும்பு கத்திகள்.

அக்கத்திச்சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. கத்திகளை கையில் எடுத்தோம்; இருவரின் கத்திகளும் மோதின; சுழற்றி சுழற்றி தாக்குவதும், பின்வாங்கி முன்னேறுவதுமாக சண்டையிட்டோம்.

எப்படியோ, அப்படத்தில், இந்திரஜித்தின் கழுத்தை, கத்தியால் வெட்டிக் கொன்றார், ராமர்.

பெரியவர் சேகரால் அமைக்கப்பட்ட, 'ராமர் - இந்திரஜித் கத்திச்சண்டை' நிகழ்ச்சி, நான் பட்டாளத்துக்கு போக வேண்டுமென்ற என் விருப்பத்தை அதிகப்படுத்தியதே தவிர, குறைக்கவில்லை.

ஆனால், 'நினையாத ஒன்று வந்து எய்தினும் எய்தும், எனையாளும் ஈசன் செயல்' என்று, பெரியோர்கள் சொல்லியிருக்கின்றனரே, அது எத்தகைய உண்மை என்று, அதன் பின் நடந்த சம்பவம் மூலம் உணர்ந்து கொண்டேன்.

கலை உலகிலிருந்து விலகி, ராணுவத்திற்கு செல்ல இருந்த என் வாழ்க்கையில், புதிய பாதை ஒன்று குறுக்கிட்டு, மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டு வந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது!

ஒருநாள், திடீரென்று, நாராயணன் அண்டு கம்பெனிலியிருந்து எனக்கு அழைப்பு; போனேன்.

நாராயணய்யங்கார் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த இயக்குனர் நந்தலால், ஜஷ்வந்த்லாலுடன் சேகரும் இருந்தார். நாராயணய்யங்கார் என்னைப் பற்றி, நந்தலாலிடம் அறிமுகப்படுத்தினார்.

எனக்கு, குதிரை ஏற்றம், கத்திச்சண்டை எல்லாம் தெரியும் என்று எந்தெந்த வகையிலெல்லாம் சொல்லி, அவர்களை திகைக்க வைக்க முடியுமோ, அப்படியெல்லாம் புகழ்ந்து சொன்னார், சேகர்.

அவற்றை, அமைதியுடன் கேட்ட நந்தலால், 'சட்டையை கழற்று... தேகப்பயிற்சி செய்ற உடம்பா என்பதை பார்க்கிறேன்...' என்றார்.

சட்டை மற்றும் பனியனை கழற்றினேன். உடம்பை அவர்கள் பார்த்தனரா, இல்லையா தெரியாது. அதற்குள், நாராயணய்யங்கார், 'போதும் போதும் சட்டையை போட்டுக் கொள்...' என்றார்.

புறப்படும் போது, அவர் என்னிடம், 'தொழிலுக்குன்னா பரவாயில்ல; மற்றபடி இனிமே யாரு சொன்னாலும், உடம்பை வெளியே காட்டாதே... வீட்டுக்கு போய், சுத்திப் போட சொல்லு...' என்றார்.

விரைவில், எனக்கு, முன் பணம் கொடுக்கப்பட்டது. என்ன வேடத்திற்கு தெரியுமா... நான், கனவிலும் எதிர்பாராததும், கற்பனையில் கூட நடக்காதென்று, நினைத் திருந்ததுமான கதாநாயகன் வேடம். அதுவும், அப்போது பிரபல நடிகையான, குமுதினியுடன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு.

இனி, சினிமாவில் வேலையே கிடையாது என்று நம்பிக்கையிழந்து, மனமொடிந்து, 125 ரூபாய் சம்பளத்தில், ராணுவத்திற்கு செல்ல முடிவெடுத்து, சேருவதற்கு முயன்று கொண்டிருந்த எனக்கு, மாதச் சம்பளம், 350 ரூபாயும், படிச்செலவுக்கு மாதம், 35 ரூபாய் என்று, 385 ரூபாய் சம்பளத்திற்கு,

ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.

'கொடுக்கிற தெய்வம், கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும்...' என்பார்களே... அது, இப்படித்தானோ!

சினிமாவுக்கு வரும் முன், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடிக்கும் போது, நான் ஏற்ற வேடங்கள் எத்தகையது என்றால், எதிரியின் கையாளாகவும், துப்பறிபவராக வேடம் ஏற்று நடிக்கும் காளி என்.ரத்னத்தால் தூக்கி எறியப்பட்டு, குத்துக்கள் வாங்கிக் கீழே விழுந்து, அவருக்கு பேரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் ஆளாக நடிக்கும் வேடங்கள் தான்.

சினிமாவில் இவ்வேடங்களில் நடிப்பது என்றால், கீழே விழுவோருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, மெத்தையோ, வைக்கோலையோ பரப்பி வைத்து பாதுகாப்பு அளிப்பர். நாடக மேடையில் அப்படி செய்ய இயலாது. விழுந்தால், மேடையின் தரையில் தான் விழ வேண்டும். அத்துடன், அக்காலத்தில் ஒலி பெருக்கி வசதியும் இல்லை.

ஆயிரக்கணக்கில் கூட்டமாக உட்கார்ந்து நாடகம் காணும் ரசிகர்கள், மேடையில் நடிகன் விழும் போது ஏற்படும் சத்தத்தை கேட்டே ரசிக்க வேண்டும்; அச்சத்தம் கேட்காமல் போனால், அக்காட்சிக்கு சுவையே இராது. ஆதலால், அடிபட்டாலும், கை, கால் முறிந்தாலும், மண்டையே உடைந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல், தரையில் தான் விழ வேண்டும்!

இப்படியெல்லாம் அடிபட்டு, புண்பட்டு, பண்பட்டிருந்த நான், நாடகக் கம்பெனியிலிருந்து, சினிமாவுக்கு எப்பேர்பட்ட சூழ்நிலையில் வந்தேன் என்பதை, முன்பே சொல்லியிருக்கிறேன்.

சினிமாவுக்கு வந்த போது, 16 - 17 வயது இருக்கும். பொதுவாக, எனக்கு குஸ்தி, குத்துச் சண்டை, சிலம்பு விளையாட்டு மற்றும் கத்திச் சண்டை போன்றவற்றில் ஆர்வம் உண்டு. இதனாலேயே என்னை, நாடக கம்பெனியில் உள்ளவர்கள், முரட்டுத்தனமாகவும் அதேசமயம், சாமார்த்தியமாக, சண்டைக் காட்சிகளில் நடிப்பவன் என்றும் திறமையுள்ளவன், பலம் பொருந்தியவன் மற்றும் துணிச்சல்காரன் என்றெல்லாம் கூறுவர்.

அந்தத் தன்மைகள் என்னிடம் இருந்தனவோ, இல்லையோ, அவர்கள் அப்படி சொல்லிச் சொல்லியே எனக்கே, நாம் அப்படிதானோ என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

நான், பாய்ஸ் கம்பெனியிலிருந்து, சினிமாவுக்கு நடிக்க வந்த முதல் படம், சதி லீலாவதி. இது, கலைவாணருக்கும் முதல் படம்.

அப்போது, அவர் மிகவும் ஒல்லியாக இருப்பார். அப்படத்தில் நகைச்சுவை நடிகராக, நடித்துக் கொண்டிருந்தார். சிரிக்க சிரிக்க பேசுவார்; கேட்கக் கேட்க அலுக்காது.

என்னுடை நடையையும், பயில்வான் போன்று நான் செயல்படுவதையும் பார்த்து, 'ஏய்... உன் மனசுலே என்ன பெரிய பயில்வான்னு நினைச்சுட்டிக்கிருக்கீயோ... அங்கே போறே, இங்கே போறே, பாடியைக் காண்பிக்கற... முண்டாவைக் காட்டற... என்ன இது...' என்பார் கேலியாக!

கலைவாணர், அப்படி கேலியாகப் பேசுவாரே தவிர, யாரும் கோபித்துக் கொள்ளும்படியாக அது இராது. ஆனாலும், அவர் சொல்லும் கருத்து, உள்ளத்தை குத்துவதாக இருக்கும். சொல்லும் முறை இனிப்பாக இருந்தாலும், நம் உள்ளம் வேதனைப்படும்.

எனக்கோ, திறமையாக பேசவோ, கேலி செய்யவோ தெரியாது. அதனால், அவருடன் குஸ்தி சண்டை போட்டு, அவரை கீழே தள்ளி சாய்க்க வேண்டும் என்று தோன்றும்.

ஒருநாள், இப்படி விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு, கடைசியில் குஸ்தி சண்டை போடும் நிலைமைக்கு வந்து விட்டது.

சதி லீலாவதி படத்திற்கு, சண்டைக் காட்சிகளை பழகுவதற்காக மணலைக் கொட்டி, குஸ்தி போடும் இடத்தை தயாரித்திருந்தனர்.

சாப்பிடுவதற்கு சென்று கொண்டிருந்த நாங்கள், முதலில் குஸ்தி போடுவது, பின், சாப்பிடுவது என்று முடிவு செய்தோம். நண்பர்கள் சிலர், சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

'நான் தோத்துட்டேன்னா பரவாயில்ல; ஏன்னா நான் ஒரு சாதாரண, 'காமெடியன்!' ஆனா, எல்லாரும் உன்னை வீரன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க... நீ தோத்துட்டே, அப்புறம் கம்பெனியிலேயே இருக்க முடியாது; பாத்துக்க...' என்றார் கலைவாணர்.

'தோக்கும் போது பாத்துக்கலாம்...' என்று சொல்லி, குஸ்திக்கு அழைத்தேன். இருவரும் குஸ்தி போட ஆயத்தமானோம்.

— தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us