PUBLISHED ON : மார் 12, 2017

பாய் பிரண்ட் கலாசாரம்!
பள்ளியில் படிக்கும் வரை, மிகவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்த என் தோழி, கல்லூரியில் சேர்ந்தவுடன், அடியோடு மாறிப் போனாள்.
வெகுநாட்களுக்கு பின், சமீபத்தில் அவளை சந்தித்த போது, இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது, கல்லூரியில் அவளுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், இல்லைன்னா காலேஜ்ல யாரும் மதிக்க மாட்டாங்க என்று சொல்லி, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாள்.
நகரத்திற்கு படிக்க வந்ததே, அப்பா, அம்மா, சொந்தங்கள் என்று எந்த தொந்தரவும் இல்லாமல் ஊர் சுற்றத் தான் என்று கூறி, 'இதுவரைக்கும் நாலு பசங்க என் அனுமதியோட என்னை, 'பேட் டச்' செய்துருக்காங்க; அந்த, 'த்ரில்' எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...' என்றதும், அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
பெற்றோரே... இப்படியும் சில பெண்கள் இருக்கின்றனர் என்பதற்கு என் தோழி உதாரணம். எல்லாரும், இவளைப் போல இருக்க மாட்டார்கள் என்றாலும், கட்டவிழ்த்து விட்ட சுதந்திரம், எல்லை தாண்டவும் தயாராயிருக்கும் என்பதை மனதில் வைத்து, உங்கள் செல்லங்களை கண்காணியுங்கள்!
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
வித்தியாசமான பேருந்து பயணம்!
சமீபத்தில், தொலைதூர தனியார் பஸ் ஒன்றில், பயணித்தப் போது, ஸ்பீக்கரில் சினிமா பாட்டு ஓடத் துவங்கியது. ஒரு பாட்டு முடிந்ததும், 'பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மற்ற சான்றிதழ்கள் தொலைந்து விட்டால், எங்கு, எப்படி விண்ணப்பித்து, நகலை பெறுவது...' என்று, ஒரு பெண்ணின் குரல், விளக்கி கூறியது.
அத்துடன், ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன், நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவை எப்படி பெறுவது... ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் சேர்ப்பிற்கு யாரை அணுகுவது போன்ற நமக்கு தேவையான பயனுள்ள தகவல்கள் ஒலிபரப்பானது. இதை கேட்ட ஒரு சில பயணிகள், பேனா, பேப்பரோடு குறிப்பெடுக்கவே துவங்கி விட்டனர்.
பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் வித்தியாசமான சிந்தனை, மிகவும் பாராட்டுக்குரியது.
நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், இருவருக்கும் வாழ்த்து சொல்லி இறங்கினேன்.
— வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.
தாம்பூலம் போடுவது எப்படி?
சமீபத்தில், எங்கள் வீட்டிற்கு உறவினர் பாட்டி ஒருவர் வந்திருந்தார். கிராமத்துக்காரரான அவர், சாப்பிட்டதும், மூன்று வேளையும் தாம்பூலம் போடுவார். அதைப்பார்த்த என் மகள், 'பாட்டிக்கு எப்போதும் வாய் சிவப்பாக இருக்கணும்; அதற்காகத் தான் வெற்றிலை போடுறார்...' என்று, கேலி செய்தாள். பாட்டி சிரித்தபடியே, 'பேத்தியாளே... அது அப்படியில்ல; பழைய பழக்கவழங்களில் எல்லாம் ஏதோ ஒரு நல்ல காரணம் இருக்கும்; அது, இந்த காலத்து புள்ளைங்களுக்கு தெரியுறதில்ல. வெற்றிலை போடும் பழக்கமுள்ள முதியோருக்கு, அவ்வளவு சீக்கிரம் எலும்பு முறிவு ஏற்படாது. ஏன்னா, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் வெற்றிலையில் இருக்கு.
'காலை உணவுக்கு பின் போடும் தாம்பூலத்தில், பாக்கு அதிகமாக இருக்கணும்; காரணம், மதிய நேரம் வெப்பம் அதிகரிக்கும் போது, உடம்பில் பித்தம் ஏறாமல் இது தடுக்கும். மதிய உணவுக்கு பின் போடும் தாம்பூலத்தில், சுண்ணாம்பு கொஞ்சம் தூக்கலா இருக்கணும். அது, உணவிலுள்ள வாயுவை கட்டுப்படுத்தும். இரவில் போடும் தாம்பூலத்தில், வெற்றிலை அதிகமிருந்தால், நெஞ்சில் கபம் கட்டாது. இம்முறையில் தாம்பூலம் போடுவது தான் முன்னோர்களின் வழிமுறை...' என்றார்.
அதைக் கேட்டதும், தாம்பூலம் போடுவதில், இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று வியப்படைந்தோம்.
— என்.வஜ்ர மாணிக்கம், மதுரை.
பரந்து விரிந்த மனித நேயம்!
சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த என் நண்பர் கூறிய செய்தி இது:
உணவு விடுதியில், தன் நண்பருடன் தேநீர் அருந்திக் கொண்டு இருந்திருக்கிறார், என் நண்பர். அப்போது, ஒருவர், சாப்பிட்டதற்காக பணம் செலுத்தும் போது, காசாளரிடம், 'ஐந்து காபி, இரண்டு மற்றவருக்கு...' என்று கூறியுள்ளார். அடுத்து வந்த இளைஞரோ, பத்து காபிக்கு பணம் செலுத்தி, ஐந்து காபி வாங்கியுள்ளார். அவருக்கு பின் வந்தவர், 'ஐந்து சாப்பாடு, இரண்டு மற்றவருக்கு...' எனக் கூறி, மூன்று சாப்பாட்டை மட்டும் வாங்கிச் சென்றுள்ளார்.
ஒன்றும் புரியாமல், நண்பர், காசாளரிடம் அது குறித்து கேட்ட போது, அவர், 'கொஞ்ச நேரம் பொறுங்கள்...' என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில், முதியவர் ஒருவர் கிழிந்த ஆடைகளோடு, காசாளரிடம் வந்து, 'மற்றவர்களுக்கான உணவு ஏதும் உள்ளதா...' எனக் கேட்க, 'ஆமாம்...' என்று கூறி, காபி மற்றும் சாப்பாட்டை, அந்த முதியவருக்கு கொடுத்துள்ளார்.
அப்போது தான், அங்கு சாப்பிட்டவர்கள், கூடுதலான காபி மற்றும் உணவுக்கு பணம் கொடுத்து சென்றதன் அர்த்தம் அவருக்கு புரிந்துள்ளது.
முகம் தெரியாத ஏழை மக்களுக்கு செய்யும் உதவி, மிகப்பெரிய மனித நேயம். பெரிய அளவில் அன்னதானம் செய்ய முடியவில்லை என்றாலும், இதுபோன்று ஒரு சிலருக்காகவது நம்மால் முடிந்த உதவியை செய்யலாமே!
— கரு.செந்தில்குமார், கோவை.
பெற்றோரை மறவாதீர்!
பொதுவாக, தொலைவில் இருந்து வந்து பணிபுரியும் இளைஞர்கள், வேலைப் பளு, செலவு மற்றும் அலைச்சல் காரணமாக, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட்களுக்குத் தான், சொந்த ஊருக்கு செல்வர். ஆனால், என்னுடன் பணிபுரியும் இளைஞர் ஒருவர், மாதம் ஒருமுறை அல்லது இரு முறை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தன் பெற்றோரை பார்க்க கிளம்பி விடுவார்.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'என்ன தான் சம்பாதித்து கொடுத்தாலும், பிள்ளைகள் தங்களுடன் இருப்பதையே விரும்புவர், பெற்றோர். அவர்கள் மறைந்த பின், அவர்கள் புகைப்படத்திற்கு வேண்டியதை எல்லாம் செய்வதை விட, இருக்கும் போது, அவர்கள் விரும்பியதை செய்தால், அவர்கள் மனம் குளிரும். செலவு, அலைச்சல் இருந்தாலும், அதை பற்றியெல்லாம் நினைக்காமல், அவர்களுக்கு கவலையோ, ஏக்கமோ வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...' என்றார்.
அவரது விளக்கம் கேட்டு, மலைத்து போனேன். பெற்றோரை மறந்து, வேலையில் மூழ்கி, கடமைக்கு பணம் கொடுக்கும் இளைஞர்கள், இனி சிந்திக்க வேண்டும்.
— பா.ஜெயக்குமார், வந்தவாசி.
