தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வேண்டாம் பேராசை!

வேண்டாம் பேராசை!

வேண்டாம் பேராசை!


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 12 - ஹோலி

வாழ்வில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஆனால், அந்த ஆசைகள் பேராசையாக மாறும் போது தான் பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. அத்தகைய பேராசைகளை வேரறுக்க வேண்டும் என, நமக்கு உணர்த்தும் நாளே ஹோலி. மேலும், இது ஒற்றுமை உணர்வை வளர்க்கும் விழாவாக விளங்குகிறது.

இரணியன் என்ற அரக்க ராஜனுக்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். பெரும் தவமிருந்து, மனிதர்கள் மற்றும் மிருகம் உள்ளிட்ட எந்த சக்தியாலும் தனக்குஅழிவு வரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான், இரணியன். இதனால், தனக்கு அழிவு கிடையாது என்ற எண்ணத்தில் தன்னையே கடவுளாக நினைத்தான்.

மக்களும் இவனுக்குப் பயந்து, அவனை கடவுளாக ஏற்றனர். ஆனால், திருமாலின் பக்தனான பிரகலாதன் அதை ஏற்க மறுத்ததுடன், ஓம் நமோ நாராயணாய நம: என்ற மந்திரத்தைத் தவிர வேறெதுவும் உச்சரிக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த இரணியன், மகன் என்றும் பாராமல், அவனுக்கு விஷம் கொடுத்தான்; பாம்புகள் இருக்கும் அறையில் போட்டான்; காட்டில் விலங்குகளுக்கு இரையாக்க முயற்சித்தான். ஆனாலும், திருமால் அருளால், பிரகலாதனுக்கு ஏதும் ஏற்படவில்லை.

கோபமடைந்த இரணியன், தன் சகோதரி ஹோலிகாவை அழைத்தான். அவள் விசேஷமான ஒரு சால்வை வைத்திருந்தாள். அந்த சால்வையைப் போர்த்தியபடி தீயில் இறங்கினால், தீ உடலை தீண்டாது.

அந்த சால்வையை ஹோலிகா தன் உடலில் போர்த்தி, பிரகலாதனை மடியில் இருத்தி, தீயில் அமர ஆணையிட்டான், இரணியன். கொடுமைக்காரியான ஹோலிகாவும் அவ்வாறே செய்தாள்.

திருமால் அருளால் அந்த சால்வை, பிரகலாதனின் உடலைப் போர்த்திக் கொள்ள அவன் தப்பினான்; தீயில் எரிந்து போனாள், ஹோலிகா. அவள் இறந்த நாளை, மக்கள் கொண்டாடினர். அவளது பெயரால், அந்த விழாவிற்கு, 'ஹோலி' என பெயர் வந்தது. வடமாநிலங்களில், ஹோலியன்று ஹோலிகா உருவ பொம்மையை எரிப்பர்.

இவ்விழாவுக்கு மற்றொரு புராண வரலாறும் உள்ளது. தேவர்களுக்கு ஒருமுறை சிரமம் வந்த போது, அவர்கள் சிவனை அணுகினர். சிவனோ தவத்தில் ஆழ்ந்திருந்தார். அதை எப்படி கலைப்பதென அவர்களுக்கு தெரியவில்லை. எனவே, காதல் தலைவனான மன்மதனை அழைத்து, சிவன் மீது மலர்க்கணை தொடுத்து, அவரை எழுப்பும்படி வேண்டினர்.

மன்மதனும் அவ்வாறு செய்யவே, கோபமாக கண்களைத் திறந்தார், சிவன். அப்போது, நெற்றிக்கண்ணும் சேர்ந்து திறக்கவே, மன்மதன் எரிந்து போனான். காமத்தை உருவாக்குபவன், மன்மதன். காமத்தின் தலைவனை எரித்ததால், இப்பண்டிகைக்கு, மன்மத தகனம் மற்றும் காமதகனம் என்று பெயர் வந்தது.

காமம் என்றால் பெண்ணாசையை மட்டுமல்ல, அனைத்து வகை ஆசைகளையும் குறிக்கும். பேராசைப்படுவோருக்கு கடவுளின் அருள் கிடைக்காது என்பதே இந்நிகழ்ச்சி உணர்த்தும் தத்துவம்.

ஹோலியன்று, ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசியும், வண்ணநீரை வாரி இறைத்தும் விளையாடுவர்; போளி, தயிர்வடை ஆகியவற்றை கிருஷ்ணருக்கு படைத்து, பிரசாதமாகக் கொடுப்பர்.

பேராசை குறைய வேண்டும் என ஹோலி நன்னாளில், திருமாலையும், சிவனையும் வேண்டுவோம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us