தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்ப்யூட்டர் துறையில் இருக்கிறார் நண்பர் ஒருவர். ஒருநாள் விட்டு ஒருநாள், போன் போட்டு பேசாமல் இருக்க மாட்டார். நேரில் பார்க்க வேண்டும் என, தொல்லை கொடுப்பார். சந்தித்த பின், என் முகத்தை பார்த்தபடியே, 'கம்'மென அமர்ந்து இருப்பார். என்னவென்று கேட்டால், 'உங்கள் முகத்திலிருந்து வீசும் ஒளியை பார்த்துக் கொண்டிருந்தாலே, என் மன பலம் கூடுகிறது...' என, பெரிய, 'ஐஸ்' கட்டியைத் தூக்கி, தலையில் வைப்பார்.

இப்படிப்பட்ட ஐஸ்களில் மயங்குபவனா நான்... 'சரி சரி... வந்த விஷயத்தை சொல்லுங்கள்...' என்பேன்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, 'கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா சொல்லுங்க...' என்றார்.

இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. கொஞ்ச நேரம் விழித்து விட்டு, 'தெரியலயே...' என்றேன்.

நண்பரே சொன்னார்:

கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்தும் போது, 'ஆண் பால், பெண் பால் வேறுபடுத்தி காட்ட வார்த்தைகள் உள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் உயிரற்ற சில பொருட்களை பெண் பாலாக அழைப்பது உண்டு. உதாரணமாக, கப்பல் உயிரற்ற பொருள்; ஆனால், அதை ஆங்கிலத்தில் பெண் பாலாகக் கூறுவர்...' என, விளக்கியபடி இருந்தார்.அப்போது துடுக்கான மாணவன் ஒருவன் எழுந்து, 'கம்ப்யூட்டர் எந்த வகையைச் சேர்ந்தது?' என்று, கேட்டான்.

ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை; மொழி அகராதியிலும் இதற்கான விடை இல்லை. எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும், மாணவியரை இன்னொரு குழுவாகவும் பிரித்து, இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்று கூறி, 'நீங்கள் சொல்லும் விடையை நிரூபிக்கும் வகையில், நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும்...' என்றார்.

இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து, ஆராய்ச்சி செய்தனர். பின், மாணவியர் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது...' என்றும், மாணவர்கள் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஒரு பெண்...' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா?

மாணவியர் கூறிய விடை:

*கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில், முதலில் அதை, 'பவர் ஆன்'

செய்ய வேண்டும்.

*ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் இருந்தாலும், அவைகளால் சுயமாக சிந்திக்க முடியாது.

*கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னை களாக அமைகின்றன.

*ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... 'ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், இதைவிட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!

இந்த காரணங்களால், கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று கூறினர் மாணவியர்.

'கம்ப்யூட்டர் பெண்ணுக்குத்தான் சமம்...' என்பது, மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறிய காரணம்:

*கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர, வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.

*ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு, கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.

*நாம் செய்யும் சிறு தவறுகளைக் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பின்கூட, அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.

*ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம், அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும், என்றனர் மாணவர்கள்.

'இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த சமாசாரம், 'நெட்'டில் படித்தது...' என்றார் நண்பர்.

- கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரே... உங்கள் அனுமானம் என்ன?

மதுரை செல்லும் விமானத்திற்காக, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு சினிமா கோஷ்டி. நேரம் அதிகாலை; ஒரு ஓரமாக நானும் அமர்ந்திருந்தேன். கறுப்புக் கலர் குட்டைப் பாவாடை, வெள்ளை நிற இறுக்கமான பனியனை, 'டக் இன்' செய்து, குதிரை போல நடந்து வந்தார் நடிகை த்ரிஷா. அரை தூக்கம், இன்னும் அவர் கண்ணில் இருந்தது.

எனக்கு எதிர் வரிசை இருக்கையில் அமர்ந்து, தடிமனான ஒரு, 'அயன்ராண்ட்'டின் புத்தகத்தை எடுத்து, படிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது அடிக்கண்ணால் யாராவது தன்னைக் கவனிக் கின்றனரா என்று, பார்த்துக் கொண்டார். என் அருகே அமர்ந்திருந்த இரண்டு பாலியஸ்டர் வேட்டிகள், கொஞ்சம் சத்தமாகவே கிசுகிசுத்துக் கொண்டன...

'காலைப் பாருடா... வெண்ணை மாதிரி என்னா வெளுப்பு!' என, ஒரு பாலியஸ்டர் சொல்ல, 'ஆமாடா...' என்றது அடுத்த பாலியஸ்டர். 'வாடா... கிட்டே போய் பார்க்கலாம்...' என, இருவரும் கிளம்பவும், அவர்கள் பேச்சை கேட்கும் ஆவலில், அவர்களுடன் நானும் எழ முயன்றேன். ஆனாலும், அப்பட்டமாக தெரியக் கூடாது என, இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின், ஒன்றும் தெரியாதது போல அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டேன்.

அமர்ந்திருந்த நடிகையின் பின்பக்கம் நின்று, குனிந்து பார்த்தபடி கொஞ்சம் விரசமான கமென்டுகளை பரிமாறிக் கொண்டதுடன், அவர் படித்த பள்ளியின் பெயர், குலம், கோத்திரம், உடன் பிறப்பு எல்லாவற்றையும் ஒருவர் மற்றவரிடமும், முதலாமவர் தப்பாக சொல்லும் போது, மற்றவர் அதைத் திருத்துவதுமாக, ஒரே தமாஷாக இருந்தது.

திடீரென நடிகை சரண்யா ஆடி ஆடி வருவது தெரிய, 'சரண்யா அக்கா வராங்க டோய்...' என்ற படியே, மஞ்சள் கலரில், ஆர்.ஆர்.சி., மதுரை என, அச்சிட்டிருந்த துணிப்பையை ஆட்டியபடியே, நடிகையை நோக்கிச் சென்றனர்.

இப்படி நடிகைகளையும், அவர்களது ஜாதகத்தையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனரே நம் மக்கள் என, வருந்தியபடி, விமானம் கிளம்பும் அறிவிப்பை எதிர்பார்த்து அமர்ந்தேன்.

'அமெரிக்க கேன்சர் சொசைட்டி' என்ற அமைப்பு, சிகரெட் புகைப்பதை நிறுத்தினால் ஏற்படும் பயன்களை வெளியிட்டு உள்ளது. அவை, ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. உ.ஆ., ஒருவர் உதவியுடன் அதை படித்து தெரிந்து கொண்டபின், வெண்குழல் வத்தி வேந்தன் லென்ஸ் மாமாவிடம் புத்தகத்தைக் கொடுத்தேன்.

ரொம்ப, 'கேர்புல்' ஆக அதைப் படித்தார் மாமா. படித்து முடித்தவர், 'பொத்' என்று அந்தப் புத்தகத்தை மேஜை மீது எறிந்துவிட்டு, அஞ்சு அஞ்சு அஞ்சு ஒன்றை, அதன் பெட்டியில் இருந்து உருவி, தன் மதுரை நண்பர் பரிசாகத் தந்த விலை உயர்ந்த லைட்டரால் பற்ற வைத்து, 'குப் குப்' என, ரயில் இன்ஜின் ஆனார்.

நீங்கள் ஒரு புகைஞராக இருந்தால், லென்ஸ் மாமா வழியைப் பின்பற்ற வேண்டாம்; புகைப்பதை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து, மெதுவாக புகைக்கு பகை ஆகுங்கள்.

புத்தகத்தில் இருந்த குறிப்பு...

*கடைசி சிகரெட் ஊதி, 20 நிமிடங்களுக்கு பின்...

ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, கை, கால், பாத உஷ்ணம், 'நார்மல்' ஆகும்.

* எட்டு மணி நேரங்களுக்கு பின்...

ரத்தத்தில் உள்ள, 'கார்பன் மோனாக்சைட்' மற்றும் பிராண வாயுவின் நிலை, 'நார்மல்' ஆகும்.

* 24 மணி நேரம்...

மாரடைப்பு அபாயம் குறையும்

* 48 மணி நேரத்திற்கு பின்...

நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.

வாசனை மற்றும் சுவை பார்க்கும் சக்தி அதிகரிக்கும்.

நடப்பது சுலபமாகும்.

* இரண்டு வாரம் முதல் 3 மாதம் வரை...

ரத்த ஓட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

நுரையீரலின் செயல்பாடு, 30 சதவீதம் அதிகரிக்கும்.

* 9 மாதம் வரை...

இருமல், சைனஸ் தொந்தரவு, சோர்வு குறையும்; சீராக மூச்சு விட முடியும். நுரையீரலில், 'சிலியா' மீண்டும் வளர்ந்து சளித் தொல்லையைக் குறைக்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும்; தொற்று நோய் எதிர்ப்பு சக்தி வளரும்.

* 1 வருடம்...

மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் புகைப் பவர்களை விடப் பாதியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us