தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., (14)

நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., (14)

நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., (14)


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

சாயா படத்தின் கணக்கு தீர்க்கப்பட்டு, கோவையிலிருந்து, சென்னை வந்து சிறிது நாட்கள் ஆகி விட்டது.

அன்று, ஊருக்கு சென்று திரும்பி வரும் என் அம்மாவை அழைத்து வருவதற்காக, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.

என் தாய் வருகிற ரயில் நிற்க கூடிய பிளாட்பாரத்திற்கு போகாமல், தவறுதலாக, மும்பை ரயில் வந்து நிற்கும் பிளாட்பாரத்திற்கு போய் விட்டேன்.

அங்கு, ஒரு அதிசயம் நடந்தது.

எந்த இயக்குனர், கோவையில் எனக்கு குட்பை சொல்லி, சென்ட்ரல் ஸ்டுடியோவிலிருந்து புறப்பட்டு சென்றாரோ, அதே இயக்குனர் நந்தலாலை, அங்கு சந்தித்தேன்.

என்னை கண்டதும், 'இப்போது என்ன செய்கிறாய்?' என்று கேட்டார்.

'வேலை ஒண்ணும் இல்லைங்க...' என்றேன்.

உடனே, இயக்குனர் கே.சுப்பிரமணியத்திடம் அழைத்துச் சென்றார். தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்த, நவீன சாரங்கதாரா படத்தை இயக்கியவர், சுப்பிரமணியம். அப்படத்தை, பல முறை பார்த்தவன் என்பதால், அப்படத்தின் இயக்குனரை பார்க்கப் போகிறோம், அவர் வேலை தர போகிறார் என்ற மகிழ்ச்சியும், ஆர்வமும் என்னுள் நிறைந்திருந்தன.

நாங்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், மாடியிலிருந்து இறங்கி வந்தார், சுப்பிரமணியம். மிக எளிமையான தோற்றம். நான் கற்பனை செய்திருந்த உருவத்திற்கும், நேரில் பார்த்த உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை. என்னை, நன்றாக உற்றுப் பார்த்தார். பின், ஒரு நடிகனிடம், என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமோ, அவற்றை எல்லாம் கேட்டார்.

என்னை பற்றி, நந்தலால் கூறியதையும் கேட்ட சுப்பிரமணியம், மறுநாள் வர சொன்னார்.

'காலையில் இங்கே வா; ஏதாவது ஏற்பாடு நடக்கும்...' என்றார் நந்தலால்.

மன நிறைவோடும், பூரிப்போடும் வெளியே வந்தேன். கே.சுப்பிரமணியம் தயாரிக்கும், நந்தலால் இயக்கும் படத்தில், எனக்கு வேடம் கிடைக்கப் போகிறது என்றால், அது என்ன அவ்வளவு சாதாரணமான, எளிதில் பெறக்கூடிய வாய்ப்பா!

அன்று இரவு தூக்கமே வரவில்லை; எப்போது, விடியும் என்று காத்திருந்தேன்.

மறுநாள் காலை, குறிப்பிட்ட நேரத்தில், சுப்பிரமணியத்தின், 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கார்பரேஷன்' எனும் கம்பெனியிலிருந்த வீட்டுக்கு நானும், என் அண்ணனும் சென்றோம்.

அரண்மனை போன்று பெரிய வீடு; அதை காணும் போதே திகைப்பும், அச்சமும் ஏற்பட்டன. நாங்கள், ரிக் ஷாவிலிருந்து இறங்கி, படிகளில் ஏறி, மாளிகையின் முன் பகுதிக்கு வந்தோம். 15, 20 நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தோம். பல பேர் வந்தனர்; போயினர். யாருமே, எங்களை பார்த்து, 'நீங்கள் யார்...' என்று கூட கேட்கவில்லை. அவர்கள் எல்லாம் படித்தவர்கள், அக்கம்பெனியில் பணியாற்றுகிறவர்கள் என்று, அவர்களுக்குள் பேசியதிலிருந்து அறிய முடிந்தது.

இதனால், நாங்களாக போய், 'இயக்குனர் சுப்பிரமணியம் இருக்கிறாரா...' என்று கேட்கவும், துணிவு ஏற்படவில்லை.

வலப்பக்கத்தில், டிக்கெட் கவுன்டர் மாதிரி ஒரு இடம் இருந்தது. அதற்குள் ஒருவர் இருந்தார்; அவரும், எங்களை பார்த்து ஏதும் கேட்கவில்லை.

பின், நாங்களே ஒரு முடிவுக்கு வந்தோம்; என் அண்ணன், கவுன்டர் அருகில் போய், 'இயக்குனர் சுப்பிரமணியம் இருக்காரா?' என்று கேட்டார்.

அதற்கு அவர், 'உங்களை அவர் வரச் சொன்னாரா, அதனாலே தான் வந்திருக்கீங்களா?' என்று கேட்டார்.

'ஆமாம்...' என்று சொன்னதும், 'அவர் ஷூட்டிங்குக்கு போயிருக்காருன்னு நினைக்கிறேன்; எதுக்கும் உக்காருங்க; வந்திடுவார்...' என்றார்.

அங்கே, ஒரு புறம் டீக்கடை பெஞ்சு போல் ஒரு பலகை இருந்தது. அதன்மீது உட்கார்ந்தோம்; நேரம் ஓடியது.

சில மணி நேரம் கழித்து, போர்டிகோவில் ஒரு கார் வந்து நின்றது. அதில், முன் சீட்டில் நந்தலாலும், பின் சீட்டில், கே.சுப்பிரமணியமும் இருந்தனர். அனந்த சயனம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், மேக் - அப்போடு இருந்தார், சுப்பிரமணியம்.

எங்களை கண்டதும், காரிலிருந்து இறங்கி, 'எப்போது வந்தீர்கள்?' என்று கேட்டார், நந்தலால். சுப்பிரமணியமும், 'வந்து நேரமாச்சா?' என்று கேட்டார்.

'நீங்க காலையில சொன்ன நேரத்துக்கே வந்துட்டோம்...' என்றோம்.

உடனே நந்தலால், 'இவங்க வந்து, மூன்று மணி நேரமாக காத்திருக்கின்றனர். நீங்கள் யாரிடத்திலும் தகவல் சொல்லவில்லயா...' என்று, வருத்தத்துடன் கேட்டார்.

'மன்னிச்சுடுங்க; மறந்துட்டேன். இப்போ, அவசரமா ஷூட்டிங்குக்கு போகணும்; நாளைக்கு வர சொல்லுங்க... ஒப்பந்தம்     செய்துடறேன்...' என்றார், சுப்பிரமணியம்.

என்னிடமும், 'நாளைக்கு வந்துடு; முடிச்சுடறேன்...' என்றார். நான் தலையசைக்கவும், 'வாங்க, ஸ்டுடியோவுக்கு போகலாம்...' என்று நந்நலாலை அவர் அழைக்க, படிகளில் நின்றபடியே திரும்பி என்னை பார்த்து, 'நாளைக்கு நீ வர வேணாம்; தேவையிருந்தால், அவங்களே வண்டியனுப்புவாங்க...' என்று சொல்லி, காரில் ஏறி போய் விட்டார், நந்நலால்.

அதை சொல்லும் போது, அவருடைய விழிகள் சிவந்து விட்டன. அவர், தன்னுடைய தன்மானத்தை மட்டுமல்ல, மற்றவர்களுடைய தன்மானத்தையும் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதை, அந்த ஓரிரு வார்த்தைகளின் வாயிலாக தெளிவுபடுத்தி விட்டார்.

பின், யாரிடமும் எதுவும் பேசாமல், நாங்கள் திரும்பி வந்து விட்டோம்.

மறுநாள், நந்தலாலை சந்தித்தோம். அவர், 'உங்கள் தலை விதியை மாற்றி எழுத எனக்கு சக்தி கிடையாது...' என்று சொன்னதோடு, 'சிறிது காலம் வீட்டிலேயே இரு... வேலை உன்னை தேடி வரும்...' என்று கூறினார். அவர் சொன்னது, அந்நேரத்திற்கு ஆறு தலாக இருந்தாலும், கே.சுப்பிரமணியம் கம்பெனியில், வேலை கிடைக்காத பெருத்த ஏமாற்றத் தோடு, வீட்டுக்கு திரும்பினோம்.

நந்தலாலின் நல்ல உள்ளத்திலிருந்து வெளி வந்த சொற்கள், பலிக்கவே செய்தன.

வேலை என்னை தேடி வரத்தான் செய்தது அதுதான்; சதிலீலாவதி!

நானும், என் தமையனாரும் நடித்த முதல் படம், சதி லீலாவதி.

பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் என்று அழைக்கப் பட்டவர்களில், என்னை போன்றவர்களும் மற்றும் பலரும் அதில் பங்கு கொண்டோம். அப்படத்தில், நான் மகிழ்ச்சியடையும் வகையில், என் வேடமோ, தொழில் வளர்ச்சியோ இல்லை என்றாலும், பல்வேறு நாடக கம்பெனிகளில், தொழில் முறை நடிகர்களாயிருந்த பலரை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், இதற்கு முன், அறிமுகமானவர்களோடு, மேலும் தொடர்ந்து நெருங்கி பழகவும், நல்லதொரு வாய்ப்பை பெற்றேன்.

எம்.கே.ராதா அண்ணன், இதற்கு முன், எனக்கு, நன்கு அறிமுகமானவர் தான் என்றாலும், இப்படத்தில் நடித்த போது, அவருடைய அன்றாட வாழ்க்கையை, நன்கு அறிய முடிந்தது.

சதி லீலாவதி படம் எடுத்த கம்பெனியின் பெயர், 'மனோரமா பிலிம்ஸ்' என்று நினைவு. மருதாசலஞ் செட்டியார், அபிராம செட்டியார் மற்றும் நஞ்சப்பச் செட்டியார் ஆகிய மூவரும், அக்கம்பெனியின் பங்குதாரர்கள்.

தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us