தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க வார இதழ் ஒன்றில், இந்தியர்களைப் பற்றிய சுவையான தகவல் ஒன்றை, படிக்க (உ.ஆ., உதவியால்) நேர்ந்தது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநிலத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் உள்ளனர். அவர்களில் சரி பாதி, இந்தியர்கள். மீதிப் பாதியில், பாகிஸ்தானியர்களும், தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனராம்!

எல்லா செலவும் போக, வாரத்திற்கு, 500 டாலர் (ஒரு டாலர் - ரூ.68) வரை, சம்பாதிக்கின்றனராம்! இவர்கள், பொதுவாக சொந்தமாக டாக்சி வாங்கி ஓட்டுவதில்லை; வாடகைக்கு எடுத்து ஓட்டுகின்றனர். வார வாடகை, 250 முதல், 270 டாலர்!

இந்த டாக்சி டிரைவர்களில் பலருக்கு, ஆங்கிலம் பேசத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தைச் சேர்ந்த முபீன் ஹுசேன் என்பவர், 1985ல் அமெரிக்கா சென்றார். இவர் லயோலா பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ.,

பட்டம் பெற்றவர். தற்போது டாக்சி ஓட்டுகிறார். இவரைப் போன்ற சில டாக்சி டிரைவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்

'எம்.பி.ஏ., படித்த நீங்கள், நல்ல உத்தியோகம் பார்க்கலாமே...' எனக் கேட்டால், 'படித்து முடித்தவுடன், பேங்க்ல வேலை கிடைச்சது. ஆறு மாதம் வேலை செய்தேன்; அந்த வேலை எனக்கு ஒத்து வரலே. காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை திரும்பத் திரும்ப கூட்டுவது, கழிப்பது, பெருக்குவது... சே... இந்தத் தொழிலில் நேரம், காலம் கிடையாது; நினைத்த நேரத்தில் வண்டியை எடுக்கலாம், நிறுத்தலாம்...' என்கிறார்.

வெள்ளைக்காரர்கள் அதிக ஆர்வம் காட்டாத, டாக்சி, லாரி மற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர் போன்ற வேலைகளில், நம்மவர்கள் நுழைந்து, பெருகிவருகின்றனர் எனக் குறிப்பிடுகிறது அக்கட்டுரை.

தர்மபுரி மாவட்ட வாசகி ஒருவர், தன் உள்ளக் குமுறலை முகம் தெரிந்தவர்களிடம் கொட்ட முடியாமல், எனக்கு எழுதி உள்ளார். கடிதம் இதோ:

நான் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தேன். 14 வயதில் பருவமடைந்து, 15 வயது வரை, நிம்மதியாக வாழ்ந்தேன். 16 வயதில் பிடித்தது சனி. என் பெற்றோர் இட்லி கடை நடத்தி வந்தனர். என்னை, பக்கத்து தெருவிலிருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், துணி துவைக்கவும் அனுப்புவர். அப்படி செல்லும் போதெல்லாம், ஒரு பொறுக்கி, என் பின்னாடியே சுற்றினான்.

நான் வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல அழகுடன் இருந்தேன். எங்கள் குடும்பமும் மான, ரோஷமுள்ளது. அவன், என்னை சுற்றிச் சுற்றி வருவது, எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள், அவனை திட்டினேன்; என் அம்மாவிடமும் சொன்னேன். அவங்களும், அவன் போகும் போதும், வரும் போதும் சாக்கு வைத்து திட்டுவர்.

அவன் பெரிய பணக்காரன்; நான் ஏழை. ஜனங்கள் கதை கட்ட ஆரம்பித்தனர்; என்னை, அவன் வைத்திருப்பதாக!

புரளியை, அவனே அவிழ்த்து விட்டு, என் எதிர் வீட்டிலேயே தவம் கிடக்க ஆரம்பித்தான். அதனால், என்னை ஒரு மாதிரியாக பார்க்கவும், பேசவும்

ஆரம்பிச்சாங்க ஜனங்கள். நான் துடியாய் துடித்தேன்; அழுதேன்.

இத்தனைக்கும் அவன், கல்யாணம் ஆகி, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன்; பொறுக்கி. மூன்று ஆண்டுகள் என்னைச் சுற்றித் திரிந்தான்; நான் அகப்படவில்லை. என், 19வது வயதில், சொந்த மாமாவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். என் அம்மா, 'எதையும் உன் கணவனிடம் சொல்லாதே...' என்று, சொல்லி விட்டார். நாங்கள்

மிகவும் சந்தோஷமாக, ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தோம்.

ஆறாவது ஆண்டே என்னை விட்டு விலக ஆரம்பித்தார் கணவர். இரவில், வெளியில் தங்க ஆரம்பித்தார். கேட்டால், 'வியாபாரத்துக்கு போனேன்...' என்பார். நான் பேச மாட்டேன். எனக்குத் தெரியாமல் குடிக்கவும் ஆரம்பித்தார். என் துரதிருஷ்டம் எனக்கு திருமணமான அடுத்த ஆண்டே என் அம்மா இறந்து விட்டார். எனக்கு மூன்று பெண் குழந்தைகள்.

அடுத்த வீட்டுக்கு தெரியக் கூடாது என்று, நான் எவ்வளவோ அமைதியாக இருந்தேன். ஆனால், அவர் இப்போது, பக்கத்து ஊரிலேயே, 'சின்ன வீடு' வைத்துள்ளார். மாதக் கணக்கில் அங்கேயே தங்குகிறார். முதலில் வியாபாரம் என்று பொய் சொன்னவர், இப்போது, 'ஆமாம், அப்படித்தான் செய்வேன்; குடிப்பேன்; ஒரு பெண்ணை வைத்துள்ளேன்... நீ, உன் வீட்டுக்குப் போ...' என்கிறார்.

என் அம்மா இறந்த ஆறாவது மாதத்தில், என் அப்பா, மறுகல்யாணம் செய்து கொண்டார். என் கூட பிறந்த தங்கைகள் நாலு பேர்; எனக்கு மூன்று பெண் குழந்தைகள். அம்மா வீட்டுக்கு எப்படி போவேன்... அழுகிறேன் அழுகிறேன்... அழுது கொண்டே இருக்கிறேன். என் வீட்டுக்காரர் நல்லவர் தான்; என்னைச் சுற்றித் திரிந்த பொறுக்கி தான், என் வீட்டுக்காரர் மனதை கெடுத்து இருப்பான் போல் தெரிகிறது. ஆனால், அவர், அதை என்னிடம் சொல்லாமல், மர்மமாக திட்டுகிறார்; அடிக்கிறார்; சித்ரவதை செய்கிறார்.

'உன் யோக்கியதைய, ஊருல உள்ளவர்களிடம் போய் கேள்...' என்று சொல்கிறார். நான் எந்த தப்பும் செய்யாமலேயே புழுவாய் துடிக்கிறேன். மாதத்தில் ஐந்து நாட்கள் கூட வீட்டில் தங்குவது இல்லை; அப்படியே வந்தாலும், திட்டும், அடியும் தான் கிடைக்கிறது. நான் யாரிடம் சொல்லி அழுவது!

ஒரு பெண்ணுக்கு தாய், கணவன் இருவருமே இல்லை எனும் போது, நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்... தற்கொலை செய்து கொள்ள நினைப்பேன். ஆனால், என்னை நம்பி ஏழு பெண்கள் இருக்கின்றனரே... என்ன செய்வேன்! என் இறப்பை என் கணவரும் எதிர்பார்க்கிறார். ஆனால், சாகவும் முடியாமல், நான் நேர்மையானவள் என்று சொல்லவும் முடியாமல் தவிக்கிறேன்.

இப்போது, எனக்கு, 30 வயது; இந்த வயதிலேயே எல்லா கஷ்டத்தையும் அனுபவித்து விட்டேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட, 'அய்யோ பாவம்...' என்று நினைக்க மாட்டேன் என்கின்றனர். அவங்க பங்குக்கு அவங்களும் ஏதாவது சொல்கின்றனர். வேதனை வேதனை வேதனை தானா என் உயிர் உள்ளவரை?

எனக்கு ஆறுதல் சொல்லி கடிதம் எழுத என் முகவரியை உங்களுக்கு தராவிட்டாலும், ஒரு அன்பு சகோதரியின் வாழ்வு நலம் பெற நீங்களும் வேண்டிக் கொள்வீர்கள் என்ற எண்ணத்தில், இக்கடிதத்தை முடிக்கிறேன்...

— இவ்வாறு எழுதியுள்ளார் அந்த வாசகி.

திருமணமாகி வாழ்வில், 'செட்டில்' ஆகிவிட்ட ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்வில் தலையிட்டு, அக்குடும்பத்தை சீரழிப்பது எவ்வளவு கொடூரமான செயல்... கேவலமான குணம் கொண்ட கயவனால், இந்த சகோதரியின் வாழ்வில் எத்தனை பாதிப்பு...

கடிதம் எழுதிய வாசக சகோதரியின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச, வாசகி வேண்டுகோளின்படி, கடவுள் நம்பிக்கை கொண்ட வாசகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யலாமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us