PUBLISHED ON : ஏப் 23, 2017

வி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி: தமாஷான செய்தி ஏதேனும் சொல்லுங்களேன்...
சிரிப்பு சம்பந்தப்பட்ட செய்தி தான் இது... ஒரு நாளில், ஒரு மனிதன் சிரிப்புக்காக, எவ்வளவு நேரம் செலவிடலாம் என்பதை, மேரி லாண்ட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வு கூறும் தகவல், வெறும், 15 நிமிடங்கள் தான்! அதுவும், இதய நோய் உள்ளவர்களுக்கு மட்டும்!
கி.கோபாலகிருஷ்ணன், அம்மாபட்டி: உலகிலேயே நம் நாட்டில் தான் இதய நோய் உள்ளவர்கள் அதிகமாமே...
உண்மை தான்; அமெரிக்காவில், கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, 35 - 64 வயதுக்குள் இருக்கும், ஒரு லட்சம் இந்தியர்களில், 88 பேர், இதய நோயால் இறக்கின்றனர் என்றும், இதுவே, அமெரிக்கா மற்றும் சீனா முறையே, 55 - 37 என்ற விகிதத்தில் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
எம்.உதய், ராமநாதபுரம்: 'ஸ்டிரைக்' செய்பவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல், 'ஸ்டிரைக்' என்ற வார்த்தையை கேட்டாலே, ஏதோ ஈயத்தை காய்ச்சி, காதில் ஊற்றுவதை போல, ரொம்பவும் அலுத்து கொள்கின்றனரே நம் மக்கள்...
அவர்களின் அலுப்பில், நியாயம் இல்லை என்றா சொல்கிறீர்கள்... அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஊர்வலம், கடை அடைப்பு, வேலை நிறுத்தம், சாலை மறியல் எல்லாவற்றையும் சகித்து, இப்போது வெறுப்படைந்து விட்டனர். போராட்ட முறை இன்னும் பல ஆண்டுகள் இதே போல் தொடர்ந் தால், 'ஸ்டிரைக்' செய்பவர் களை, பொது மக்கள், 'கவனிக்கும்' நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்!
எம்.பி. அர்ஜுன், திண்டிவனம்: 'டிவி' சீரியல்களில் சிக்கி தவிக்கிறேன்... எப்படி மீள?
'டிவி'யைத் தூக்கி, கொஞ்ச காலத்துக்கு, பரணில் போடுங்கள். சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில், நெஞ்சம் படபடக்கத்தான் செய்யும்... அப்போது, 'டிவி' ஒளிபரப்பு ஆரம்பமாகாத காலத்தை நினைவுக்கு கொண்டு வந்து, பயனுள்ள புத்தகத்தில் மூழ்குங்கள் அல்லது வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்தசை செய்யுங்கள்; சீரியல் பைத்தியம் ஓடிப் போகும். இதெல்லாம், 'பழக்க தோஷம்' தான்!
பி.இனியன், ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடம்பர செலவுகள் அதிகம் செய்வது ஆண்களா, பெண்களா?
பெண்களிடம், 'தண்ணி'யடிக்கும், புகைப் பிடிக்கும், போதை பாக்கு சாப்பிடும் பழக்கம் கிடையாது; தோழியர் புடை சூழ ஓட்டலுக்கு சென்று, டிபன் சாப்பிடுவதில்லை; கையில் கிடைக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயைக் கூட அவர்கள் தான், சேமித்து வைக்கின்றனர். ஆண்களில், 75 சதவீதம் பேரும் ஊதாரிகள் தான்!
டி.ஸ்ரீதரன், சென்னை: நான், தியேட்டருக்கு சென்று, படம் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விவரம் புரிந்தவர், கெட்டிக்காரர், பணத்தின், நேரத்தின் அருமை, பெருமை தெரிந்தவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. முடிந்தால், உங்கள் சுற்றத்தையும், உறவுகளையும் உங்களைப் போல மாற்ற முயலுங்கள்!
சு.சாகர், வத்தலக்குண்டு: நான் சுகமாக வாழ, எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
உங்களிடம் கோப குணம் இருந்தால், அதை எப்பாடு பட்டேனும் விரட்டி அடியுங்கள். கோபமுள்ளவர்களிடம் எப்போதும் கவலை இருந்து கொண்டே இருக்கும்; கவலை உள்ளவர்கள் சுகமாக வாழ முடியாது!
