PUBLISHED ON : ஏப் 30, 2017

உறவுக்காரர், அலுவலகத்தில் உடன் பணியாற்றுவோர், ஒரே கல்லூரியில் படிக்கிறவர் என, பல விதங்களில், ஆண்களுடன் இன்றைய பெண்கள் பழக நேரிடுகிறது. அப்போது, 'ஆகா... இவர், நமக்கு ஏற்ற கணவராகத் திகழ்வார்...' என்று, சிலரைப் பற்றிய எண்ணங்களை பெண்கள் தம் மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடும்; அது, தப்பில்லை என்றாலும், ஆண்களை வகைப்படுத்தி, 'உஷார்!' என்று எச்சரிக்கிறது, ஒரு ஆங்கில பத்திரிகை. இன்னின்னாரை நம்பி ஏமாறாதீர்கள் என்று அது தந்துள்ள பட்டியலை, உ.ஆ., ஒருவர் உதவியுடன் படித்து, தெரிந்து கொண்டேன். பட்டியல் இதோ:
திருமண சோம்பேறி:
இத்தகைய நபர்கள், காலையில் எழுந்து பல் துலக்க எவ்வளவு சோம்பல் படுவாரோ அதே அளவுக்கு, திருமண விஷயத்திலும் சோம்பேறித்தனமாக இருப்பர். 'படிப்பு முடியட்டும்; வேலை அமையட்டும்; புரமோஷன் கிடைக்கட்டும்; தங்கச்சிக்கு திருமணம் ஆகட்டும்...' என்று, திருமணத்தை தள்ளிப் போட்டவாறு இருப்பர். இவரை நம்பினால், உங்கள் திருமணத்தையும், மணிவிழாவையும் ஒன்றாக நடத்த வேண்டியிருக்கும்!
சிக்கன சிங்காரம்:
ஒரு முறை உங்களை வெளியே அழைத்துச் சென்றால் திரும்பி வந்தவுடனே, என்னென்ன செலவாயிற்று என்று கணக்கு எழுதும் இவரிடம் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்; இதே போல நோட்டு நோட்டாக பறக்க விடுவோரிடமும் எச்சரிக்கை தேவை. ஒரு நாள் உங்களையே பறக்க விட்டு விடுவர்!
புத்தக புழு:
ஏராளமாக படிப்பவர், அறிவு ஜீவி; ஆனால், பெண் மனம் இவருக்குப் புரியாது; புரிந்தாலும் கவலைப்பட மாட்டார்.
'தேக' பக்தர்:
'காபி சாப்பிடப் போறாயா... அதற்கு முன், இந்த மாத்திரையை போட்டுக் கொள்ளும்படி டாக்டர் சொன்னாரே, ஞாபகம் இல்லயா... டைரியில் கூட குறித்து வைத்திருக்கிறேன்...' என்று பதறுவார். எப்போதும் பயம், படபடப்பு. உங்களுக்கு தலைவலி வந்தால், அவருக்கு நெஞ்சுவலி வந்து விடும். இவரை திருத்துவது நன்று; துறப்பது அதனினும் நன்று!
சாப்பாட்டு ராமன்:
'ஓட்டல் சாப்பாட்டினால் நாக்கே செத்து விட்டது...' என்று சொல்லி, அடிக்கடி உங்கள் வீட்டு சமையலில் எதையாவது ருசி பார்த்தபடி இருக்கிறாரா... ஜாக்கிரதை! கல்யாணத்துக்குப் பிறகும், இவர் சமையலறையை விட்டுக் கிளம்ப மாட்டார்!
பொழுது போக்காளர்:
இவருக்குத் தேவை, ஒரு சினேகிதி தான்; மனைவி அல்ல!
மிஸ்டர் நாகரிகன்:
'அது பண்பாடில்லை; இது, 'பேஷன்' இல்லை. அப்படி சிரிக்காதே, இப்படிப் பேசாதே...' என்று அடிக்கடி உபதேசம் செய்து, உங்களை திருத்திக் கொண்டே இருப்பார். இவருடன் வாழ்வது கொடிதினும் கொடிது!
- இப்படி எச்சரிக்கை செய்துள்ளது, அந்தப் பத்திரிகை. இன்னும் திருமணமாகாத வாசகியருக்கு, இந்த எச்சரிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என, நினைக்கிறேன்.
சரி... பெண்களுக்கு எச்சரிக்கை விட்டு எழுதியிருப்பது போல, எந்த வகையான பெண்களிடம், ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எவ்வகையான பெண்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என, ஆண்களுக்கு அறிவுரை ஏதும், அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதா என, புரட்டிப் பார்த்தேன்.
ஹூஹூம்... ஒன்றும் இல்லை!
அனேகமாக எல்லா இளம் பெண்களும் ஒரு குறிப்பிட்ட, 'செட் டயலாக்' பேசுவதையே பெருமையாக நினைக்கின்றனர் போலும். அவர்களின் வழக்கமான, 'டயலாக்' இப்படித்தான் இருக்கும்... 'என் குடும்பத்திலேயே நான் ரொம்ப வித்தியாசமானவ! துடுக்குத் தனம் ஜாஸ்தி. 'வெடுக் வெடுக்' என, பேசி விடுவேன். மற்ற பெண்கள் எல்லாம் எப்பவும் டிரஸ், சினிமா, பாய் பிரண்ட்ஸ்ன்னு தான் பேசிக்கிட்டு இருப்பாங்க. எனக்கு இதெல்லாம் அறவே பிடிக்காது. ஒரு, ஜெபர்சன் மக்ளின் எழுத்து பற்றியோ, மாப்சன் டோராதி கவிதை பற்றியோ தெரியாது. சே சே... எப்பப் பார்த்தாலும் கல்யாணம், குழந்தை பெத்துக்கறது... இதுதான் பேச்சா...' என, அலுத்துக் கொள்வது போல ஆங்கிலத்தில் புலம்பித் தீர்ப்பர்.
கொஞ்சம் வித்தியாசமான இளம் பெண்ணின் டயலாக்கை, சமீபத்தில் கேட்க நேர்ந்தது...
ஜெபர்சனையும், மாப்சனையும் கரைத்துக் குடித்த இளம் பெண் அவர். இனிமையான மாலை நேரம்; விசாலமான, ஆள் அரவமற்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் டைனிங் ஹாலில், அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, குறை குடம் போல் தளும்பாமல், நிறை குடமாகப் பேசினார். கொஞ்சம் கூட அலட்டலே இல்லை. திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, லேசாக தலை குனிந்து, தனக்கே உரிய வேற்று நாட்டு அழகு தமிழில், 'இப்போ அவசரம் இல்லே... இருந்தாலும் அப்பா, அம்மா, சொல்லும் போது நிச்சயம் உண்டு...' என்றார்.
ரொம்ப நாட்களுக்குப் பின், அலட்டல் இல்லாத பேச்சைக் கேட்ட திருப்தி ஏற்பட்டது!
சமீபத்தில், நானும், லென்ஸ் மாமாவும், கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் திருப்பூர் சென்றோம்.
தூசி படிந்த சிறிய சாலைகளில், கசமுசா டிராபிக்; மாட்டு வண்டிகள் ஏராளம்.
ஊரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென லென்ஸ் மாமா, 'மணி இங்கே பாரு... அந்த பனியன் கம்பெனி வாசலில், 'டேமேஜர் தேவை' என, எழுதி வைச்சுருக்காங்க. மானேஜர் என்பதை தான், 'டேமேஜர்' என தவறாக எழுதி விட்டனரா...' எனக் கேட்டு, 'கட கட'வெனச் சிரித்தார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
அடுத்த தெரு ஒன்றில் சுற்றி வரும்போது, அங்கேயும், 'டேமேஜர் தேவை...' என்ற போர்டு தொங்கியது.
'சரியான ஊரப்பா... இந்த ஊர் ஆட்களுக்கு, 'இங்கிலீஷ்' வரவே வராது போலிருக்கு. 'டேமேஜ்'ன்னா உடைஞ்சு போறது, சேதமடைவது. இதைச் செய்ய ஆட்கள் தேவைன்னு, விளம்பரம் செய்கின்றனரே...' என்று புலம்பிய லென்ஸ் மாமாவிடம், 'இங்கே பாருங்க...' என, இன்னொரு நிறுவனத்தின் வாசலில் தொங்கிய அட்டையைக் காட்டினேன்.
அதில், 'டேமேஜ் செக்கர் தேவை!' என, எழுதப்பட்டு இருந்தது.
பனியன்கள் தைக்கப்பட்ட பின், அவற்றில் சேதம் ஏதும் இருக்கிறதா என, சோதனை செய்ய ஆட்கள் தேவை என்பதையே சுருக்கமாக, அந்த ஊர் மக்கள் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தையாக, 'டேமேஜர்' என்ற சொல்லை பயன்படுத்தி யிருக்கின்றனர் என்பதை, புரிந்து கொண்டோம்.
திருப்பூரில் உள்ள, 90 சதவீத பனியன் பாக்டரிகளின் வாசல்களிலும், 'டெய்லர்கள், ஹெல்பர்கள், காஜா எடுப்பவர்கள், டேமேஜ் செக்கர்கள் தேவை' என்ற போர்டை காண முடிந்தது.
டெய்லரிங் துறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கும், ஏதாவது ஒரு வேலை திருப்பூரில் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.
'வேலைக்கு ஆட்கள் தேவை...' எனக் கூப்பிடுகின்றனர்; செல்வம் கொழிக்கும் பகுதி; கவர்னர் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நம்ம ஊர், 'வி.ஓ.,'க்கள், (பொருள் தெரியும் தானே? 'வெட்டி ஆபிசர்கள்!') கவர்னர் பணி கிட்டும் வரை, திருப்பூரை தமக்கு சோறு போடும் ஊராக்கிக் கொள்ளலாம்!
