தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்., (16)

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்., (16)

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்., (16)


PUBLISHED ON : ஏப் 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

நாங்கள், அரக்கோணத்திற்கு சென்றபோது, அங்கே கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியின், பதிபக்தி நாடகம் நடந்து கொண்டிருந்தது. நண்பர்கள் வற்புறுத்தியதன் விளைவாக, கடைசி காட்சியில், சண்டை போடும் கூட்டத்தினரில் ஒருவனாக சண்டையிட்டேன்.

நான் சண்டை போடுவது சிறப்பாக இருக்கும் என்றும், 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின்' நாடகங்களில் அதை பார்த்திருந்ததாலும், நட்பின் முறையில், அக்காட்சியில் நடிக்கும்படி வற்புறுத்தினர்.

எம்.கே.ராதா, என்னை செல்லமாக, 'ராமு...' என்று அழைப்பது வழக்கம். அவர், என்னை அழைத்து, 'ராமு... நீ சண்டை போடுறது சரி... ஆனா, அவங்க யாருக்காவது, எலும்பு, கிலும்பு முறிஞ்சுடாம பாத்துக்கோ...' என்று எச்சரித்தார்.

காரணம், சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது, அது இயற்கையாக இருக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், எனக்கோ, பிறருக்கோ ஏற்படும் விபத்தை பற்றி நான் சிந்திப்பது இல்லை.

அன்றும் சண்டைக் காட்சியில், உடன் சண்டையிட்ட நண்பனுக்கு, மூச்சு பிடித்துக் கொண்டதாக பின்னர் கேள்விப்பட்டேன்.

இது போதாதா, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு... மற்றவர்களை கேலி செய்து கொண்டிருந்தார்.

அதேநேரம், அப்போது மிகப் பிரபலமாயிருந்த அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹெரால்ட் லாயிட் போன்று, சதி லீலாவதி படத்தில் தனக்கென ஒரு வேடத்தை உருவாக்கும்படி செய்து விட்டார், கலைவாணர்.

அது தான், அவருக்கு முதல் சினிமாப் படம்; குளோசப், மிட் ஷாட், லாங் ஷாட் போன்றவற்றையோ, காட்சிகளில், நடிகர்களின் பாத்திரங்கள் எப்படி எல்லாம் நகர்த்தப்பட வேண்டும் என்பதையோ, அனுபவத்தில் அறிவதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில், என்.எஸ்.கே., தன்னுடைய பாத்திரம், படத்தில் எப்படி தெரிய வேண்டுமென்று சொன்னது, வியப்பாக இருந்தது.

கதாசிரியர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குனர் மற்றும் நடிகர் என, பல ஆண்டுகள் சினிமா தொழிலில் இருந்தாலும், மக்கள் மனதில் பதியும்படி படமெடுக்கத் தெரியாத பலர் இருக்கையில், படப்பிடிப்பையே பார்த்திராத நிலையில், என்.எஸ்.கே.,யின் கலை நுணுக்கத் திறமையை எண்ணும் போது, அவர் கலைமேதை என்பதை நன்கு உணர முடிந்தது.

சதிலீலாவதி படத்தில், எனக்கு தரப்பட்டிருந்த துப்பறிவாளர் வேடம் எனக்கில்லை என்பது, வாத்தியாரின் பேச்சிலிருந்து தெரிந்தது.

ஆனால், வேறொரு நல்ல வேடம் எனக்கு தரப்படும் என்று உறுதி கூறினார், வாத்தியார், கந்தசாமி முதலியார்.

அது, கதாநாயகனால் சுடப்பட்டு இறந்து விட்டதாக பிறரால் கருதப்படும் அவன் நண்பன், கிழவன் வேடத்தில் தலைமறைவாக வாழ்ந்து, அவ்வப்போது, கதாநாயகனுக்கு உதவி செய்து, கடைசியாக, நீதி மன்றத்தில் சாட்சி சொல்லி, கதாநாயகனை விடுதலை செய்வது போன்ற கதாபாத்திரம். அதிலும், சண்டை காட்சிகள் உண்டு. எனவே, மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் சென்னை திரும்பினேன்.

சில நாட்களுக்கு பின், சதி லீலாவதி படத்தில் நடிக்க இருக்கும் அனைவரும் ஆழ்வார்பேட்டையில் இருந்த கம்பெனி வீட்டிற்கு வந்து விட்டோம்.

எப்போது பார்த்தாலும் ஒரே பாட்டும், கூத்தும் தான். வேறு வேலை இல்லாவிட்டால் சீட்டாட்டம். இப்படி இரண்டொரு வாரங்கள் மகிழ்ச்சியாக கழிந்தன.

இந்நிலையில், சதிலீலாவதி படத்தை இயக்க, டங்கன் என்ற அமெரிக்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம். ஐந்தே முக்கால் அடி உயரம்; வலுவான உடம்பு; அகலமான நெற்றி; அமைதியான பார்வை; யாரிடத்திலும் எதுவும் பேசாதிருப்பார், டங்கன்.

தினமும், கம்பெனி வீட்டில், சதி லீலாவதி படத்திற்கான நாடக ஒத்திகை நடக்கும். நாடகத்தில் கதாநாயகியாக நடித்த, நம்மாழ்வார் என்ற நடிகர் தான், ஆரம்ப காலத்தில் ஒத்திகையிலும் நடித்தார். இவர், வாத்தியாரின் நாடக கம்பெனி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர். பல ஆண்டுகள் வாத்தியார் குடும்பத்தாருடன், கஷ்டத்திலும், நஷ்டத்திலும் பங்கு கொண்டவர்.

இவர் குரல், பெண் குரல் போலிருக்கும். சராசரிக்கும் குறைவான உயரம்; திறமையான நடிகர்; பிள்ளைகளுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

ஒத்திகையின் போது, மருதாசலஞ் செட்டியார், அபிராம செட்டியார் மற்றும் நஞ்சப்ப செட்டியார், இயக்குனர் டங்கன், அவருடைய நண்பர் மொய்லென், டங்கனை அறிமுகப்படுத்திய இயக்குனர் டாண்டன், இயக்குனர் சாச்சி, அவருடைய வாழ்க்கைத் துணைவி மற்றும் 'சண்டே டைம்ஸ்' ராமையா என, அத்தனை பேரும், வரிசையாக நாற்காலிகளில் அமர்ந்து பார்ப்பர்.

'பதிபக்தி' கதைக்கும், சதி லீலாவதி கதைக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யார் எடுக்கும், 'பதிபக்தி' கதையை தழுவியது தான், சதி லீலாவதி கதை...' என, 'பதிபக்தி' கதையின் ஆசிரியரான கிருஷ்ணசாமிப் பாவலரிடமிருந்து, உரிமையை பெற்றிருந்த மதுரை உரிமையாளர், எஸ்.எம்.சச்சிதானந்தம் பிள்ளை, மனோரமா பிலிம்சாருக்கு, வக்கீல் நோட்டீஸ் கொடுத்தனர். எங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பம்; வாத்தியார் கந்தசாமியும் நிம்மதி இழந்தார்.

ஒருநாள், வாத்தியாரை பார்க்க வந்தார் ஒருவர். பத்து நிமிடங்கள் பேசி விட்டுப் போனார். அவர் யார், வந்ததும் ஏன் திரும்பிப் போனார் என்பது தெரியாவிட்டாலும், அவர் கவனிக்கப்பட வேண்டிய மனிதர் என்பதை அவருடைய நடை, உடை மற்றும் பேச்சு பறைசாட்டியது.

அவர் போனதும், சந்தோஷத்துடன் வேகமாக வந்த வாத்தியார், எதிரில் வந்த எம்.கே.ராதா மற்றும் அங்கிருந்தவர்களிடம், 'எவனும் எதுவும் செய்ய முடியாது; வாசன் சாரே வந்து சொல்லிட்டுப் போயிட்டார்...' என்றார்.

அப்போது தான் வந்தவர், எஸ்.எஸ்.வாசன் என்பது தெரிந்தது. 'அடடா... அவரை சரியாக பார்ப்பதற்குள் போய் விட்டாரே... இனிமேல், எப்போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது...' என்று ஏங்கியது, என் உள்ளம்.

காரணம், நாங்கள், 'ஆனந்த விகடன்' இதழ் வாசகர்கள்; என் அண்ணனும் இன்னும் சிலரும், அதன் சந்தாதாரர்களாக இருந்தனர்.

'என் உள்ளத்தில் கற்பனை உருவமாக பதிந்திருந்த வாசனை, சரியாகப் பார்க்க முடியாமல் போய்விட்டதே...' என்ற வேதனை ஏற்பட்டது. ஒருவேளை, பார்த்துப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அவ்வளவு பெரிய மேதையிடம் நான் என்ன பேசியிருக்க முடியும்!

எவ்வளவு எளிமையான தோற்றம்... இடையில் நாலு முழ வேட்டி, சட்டை, மேல் துண்டு... அவ்வளவும் கதர். இதைத் தவிர வேறு எந்த ஆடம்பரமான உடைகளோ, அலங்காரங்களோ இல்லை.

அளவான, ஆழமான, அழுத்தந்திருத்தமான பேச்சு; அவர் சொன்னாராம்... 'என் உடைமையை இன்னொருவர் தனதென்று நிரூபிக்க, எந்த ஆதாரமும், சட்டமும் வலிமை படைத்ததல்ல...' என்று!

அது, அவர் சம்பந்தப்பட்ட வைகளுக்கு மட்டுமா பொருத்த முடையது... சமூக நியதிக்குக் கூட எடுத்துக்காட்டாக கூறலாம் அல்லவா!

'சதி லீலாவதி  படத்தை நீங்கள் நிறுத்த வேண்டாம்; தொடர்ந்து எடுங்கள். வழக்கில் தோல்வி ஏற்படுமானால், அதன் முழு நஷ்டத்தையும் நானே தருகிறேன்...' என்றும் சொல்லியிருக்கிறார்.

அவர் வார்த்தையில் யாருக்காவது அவ நம்பிக்கை ஏற்பட்டால் அல்லவா பயப்பட!

அப்படி ஒரு வழக்கு இருப்பதாகவே யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை.

நாணயமான ஒருவருடைய வாக்குக்கு எத்தனை பலம்; எவ்வளவு பெரிய மதிப்பு, உத்தரவாதம்!

மனதில் நல்லெண்ணம் இருந்து விட்டால் மட்டும் போதாது; அதை நிறைவேற்றும் வலிமையும் வேண்டும்.

இதை, என் விஷயத்தில் நன்கு உணர்ந்தேன். முதலில், துப்பறிவாளன் வேடம்; பின், அது மாறி, கதாநாயகனின் நண்பர் வேடம்; இப்போது, அதுவும் மாற்றப்படுவதை அறிந்தேன்.

— தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us