தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'குற்றாலத்தில் சீசன் ஆரம்பமாகி விட்டது; அருவிகளில் நீர் கொட்டுகிறது... சாரல் பிரமாதம்...' என, கேள்விப்பட்டு, 'மாமா... ஜூன் முதல் வாரம் பள்ளிக் கூடங்கள் திறந்து விடும்; குற்றாலத்தில் கூட்டம் இருக்காது; நாலு நாள் டேரா போடலாமா?' எனக் கேட்டேன்.

அவர், 'சரி' என்று சொல்ல, 'ரெகுலர் ரீடிங்' புத்தகங்களைத் தவிர்த்து, நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என, எடுத்து வைத்திருந்த புத்தகங்களை அட்டைப் பெட்டியில் அடுக்கி, வண்டியில் வைத்தேன். அதில், குஷ்வந்த் சிங் எழுதிய ஒரு புத்தகத்தையும் வைத்திருந்தேன்.

ஓட்டல் குறிஞ்சியில் ரூம் போட்டு, அதன் பால்கனியில் அமர்ந்து, சாரலையும், குரங்குகளின் சேட்டைகளையும், அருவியில் குளித்து முடித்து, தம் இரு கைகளால் நெஞ்சுப் பகுதியை மறைத்து, குளிரில் நடுங்கியபடி செல்லும் மனிதர்களையும் ரசித்துக் கொண்டிருந்த வேளையில், 'ஜமீந்தாரைப் பாத்துட்டு வர்றேன்...' எனக் கிளம்பினார், லென்ஸ் மாமா.

குற்றாலத்திலிருந்து சில கி.மீ., தொலைவில் வசித்து வருகிறார், அந்த ஜமீந்தார். மிகப் பெரிய நிலச் சுவான்தார்; ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடியும், இன்றும் அப்பகுதி மக்கள், அவரது பரம்பரையை, ஜமீன் பரம்பரையாகவே மதிக்கின்றனர்.

அந்த ஜமீன் பரம்பரையின் மூத்த ஜமீன், லென்ஸ் மாமாவின் நண்பர். இரவு நேரத்தில், மலைப் பகுதியில் ஜீப்பில் சுற்றுவது, ஜமீனின் வீர சாகசங்களை ரசிப்பது, லென்ஸ் மாமாவுக்கு மிகவும் பிடிக்கும்.

மாமா கிளம்பிச் சென்ற பின், ஓட்டல் வாசலில் விற்ற மங்குஸ்தான் பழங்களை வாங்கி வந்து, அவற்றின் கருமையான, தடித்த மேல் தோலை பிய்த்து, உள்ளே இருக்கும் கனியை ஒரு பாத்திரத்தில் இட்டு, என் நாற்காலி அருகே வைத்தேன். புத்தகப் பெட்டியிலிருந்த குஷ்வந்த் சிங்கின் புத்தகத்தை எடுத்து, பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.

அதில் ஒரு அத்தியாயத்திற்கு, 'மோகத்தை வெல்லும் வழி' எனத் தலைப்பிட்டு இருந்தார். அந்தத் தலைப்பை பார்த்ததுமே, மகாகவி பாரதியார், 'மோகத்தை கொன்று விடு; அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு' எனப் பாடியது நினைவுக்கு வர, 'இந்த பஞ்சாபி எழுத்தாளர், மோகத்தை வெல்ல என்ன வழி சொல்லப் போகிறார் பாப்போம்...' என எண்ணியபடி, மங்குஸ்தான் பழம் ஒன்றை எடுத்து, வாயில் போட்டு சுவைத்தபடி, படிக்க ஆரம்பித்தேன்.

சிங் சொல்கிறார்:

தியானத்தின் மூலமும், மிகச் சக்தி வாய்ந்த, 'ஓம்' என்ற மந்திரத்தை ஜபிப்பதன் மூலமும், குண்டலினி சக்தியை எழுப்பி, மோக உணர்ச்சியை அடக்க முடியும் என்கிறார், மிஸ் அலைஸ் கிருஸ்டன் என்ற ஆங்கில பெண்மணி.

வழக்கமாக சில பிரம்மசாரிய பிராக்டீஸ்கள் செய்வது மற்றும் சிற்றுண்டி வேளையில் ஐந்து நிமிடம், தனக்குள் மோக உணர்வை அடக்குவதன் மூலம், மிஸ் அலைஸ் சொல்கிற மாதிரி எல்லாம் மோகத்தை அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை.

காமத்தை வெல்வதற்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று, யோகிகள் சொல்லும் வழி; மற்றது என் வழி!

பத்மாசனமிட்டு, மூக்கையும்,

மனச் சலனங்களையும் அடக்க விரும்புவோர், உடனே யாராவது ஒரு சாமியாரைப் பாருங்கள்;  இல்லை என் வழிக்கு வருவதென்றால், நான் சொல்வதைக் கேளுங்கள்...

நான் ஒன்றும் குரு அல்ல; இருந்தாலும் ஒரு மாற்று வழி சொல்கிறேன்... அது, உல்லாசமான பாதை, துன்பம் கம்மி; தமாஷ் அதிகம்!

அதாவது, எப்போதெல்லாம் மனதில் மோக இச்சை மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம், உடனே அதைத் தீர்த்து விடுங்கள்.

உங்கள் வயதையும், உடம்பையும் பொறுத்து, குண்டலினி சக்தியை எழுப்பினால், எப்படி மோக வேட்கை அடங்குமோ, அப்படியே இதிலும் கொஞ்ச காலத்திற்கு அடங்கும்.

அது, மறுபடியும் தன் நச்சுத் தலையை நீட்டினால், வேறென்ன... மறுபடியும் முன்போலவே செய்து, அதை, மண்டையில் அடியுங்கள்!

—'இது மாதிரியான பிரச்னைகள் நமக்கு இல்லப்பா...' என்றபடியே, அடுத்த அத்தியாயத்தை திருப்பும் போது, உரித்து வைத்திருந்த மங்குஸ்தான்

பழங்களும் தீர்ந்திருந்தன.

சரி... மோகத்தை எந்த வழியில் அடக்கப் போகிறீர்கள்?

சாமியார் வழியா, ஆசாமி குஷ்வந்த் சிங் வழியிலா?

'திராவிடம், திராவிடர்...' என்றெல்லாம் எப்போதுமே பினாத்திக் கொண்டிருப்பார், அந்தப் பெரியவர், அவரது பினாத்தல்களில் சுவையான அந்நாள் சம்பவங்கள் கிடைக்குமென்பதால், அவரது அறுவைகளைத் தாங்கிக் கொள்வேன்.

அவ்வப்போது, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் அவரை சந்திப்பேன். மாலை வேளையில் அங்கு வந்து, ரவா உப்புமாவும், காபியும் சாப்பிட்டு, ஓட்டல் நாற்காலியை நாலு மணி நேரம் தேய்த்து விட்டு போவார். அவ்வளவு நேரம் ஊர் கதை, அரட்டை!

அன்று, தி.மு.க., தோற்றது பற்றி மனம் நொந்து பேசிக் கொண்டிருந்தார்.

நான், அவரிடம், 'தன்னுடன் பழகி, வேலை பார்த்தவர்கள், பின்னர், ஏழ்மை நிலை அடைந்து, கஷ்ட தசையில் வீழ்ந்தவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக, ரூபாய் 500 அனுப்பி வைப்பார், எம்.ஜி.ஆர்., எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

'அதேபோன்று, ஆர்.எம்.வீரப்பனும் உதவித் தொகை பெற்றார் என்றும், எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் இடம் பெற்ற பின்பும் கூட, இந்த உதவித் தொகையை மாதந்தோறும் வாங்கிக் கொண்டிருந்தார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.

'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜானகி காலமான பிறகும், இத்தொகை வீரப்பனுக்கு அனுப்பப்பட்டதா அல்லது நிறுத்தப்பட்டு விட்டதா?' எனக் கேட்டேன்.

கொலைக்குற்றம் செய்து விட்டது போல, என்னை, எரிப்பது போல ஒரு பார்வை பார்த்தார். அவரை சாந்தப்படுத்த எண்ணி, நைசாக பேச்சை திசை திருப்பி, 'இன்னொரு காபி சாப்பிடுறீங்களாண்ணே...' எனக் கேட்டேன். 'சரி' என்ற பாவனையில் அவர் தலை அசைக்க, காபிக்கு சொல்லி, 'அண்ணாதுரையின் சிலேடைகளில் ஏதாவது ஒன்றை அவிழ்த்து விடுங்களேன்...' என்றேன்.

உற்சாகமடைந்த பெரியவர் எடுத்து விட்டார்...

'அண்ணாதுரையின், 'திராவிட நாடு' பத்திரிகை அலுவலகத்தில், பழனின்னு ஒருத்தர் வேலை பாத்துட்டு இருந்தாரு; குறும்புக்காரர். ஒருநாள், அலுவலகத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு பிரியாணி வாங்கி வரச் சொன்னார், அண்ணாதுரை. அந்த எட்டு பேரில் நானும் ஒருவன்.

'முதலில், 'சரி'ன்னு சொன்ன பழனி, பின், அண்ணாதுரையிடம், 'நான் சைவம்; எனக்கு பிரியாணி வேணாம்; இட்லி போதும்...' என்றார்.

'பிரியாணியும், இட்லியும் வர, எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். குறும்புக்கார பழனி, 'சைவம் தான் மனிதனுக்கு இயற்கையான உணவு. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்; குரங்குகள் அசைவம் சாப்பிடுவது இல்லை; பழ வகைகள் தான் சாப்பிடுகின்றன...' என்றார்.

'அதற்கு அண்ணாதுரை, 'உண்மை தான்... மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தான்; அப்புறம், மெல்ல மெல்ல அவனுக்கு அறிவு வளர்ந்ததும், நெருப்பை ஏற்படுத்த கற்றுக் கொண்டான். மாமிசத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடவும் தெரிந்து கொண்டான். ஆனால், ஒரு சிலர் மட்டும் மனிதனாக வளராமல், இன்னும் குரங்கு நிலையிலேயே இருக்கின்றனர்...' என, ஒரு போடு போட்டார்.

'அனைவரும் சிரிக்க, வேறு வழியின்றி குறும்புக்கார பழனியும் சிரித்து வைத்தார்...' என, அவர் முடிக்க, அண்ணாதுரையின் சிலேடையை நானும் ரசித்தேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us