PUBLISHED ON : ஜூன் 04, 2017

இப்படியும் ஒரு மகன்!
வழக்கமாக செல்லும் உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். வயது முதிர்ந்த, இயலாத நிலையில் உள்ள தன் தந்தையை அங்கு அழைத்து வந்திருந்தான், அவரது மகன். அவர், பலவீனமாக இருந்ததால், அவர் சாப்பிடும் போது, உணவு பதார்த்தங்கள், அவரது சட்டை, வேட்டி மற்றும் தரை மீது விழுந்தது. பக்கத்தில் சாப்பிடுவோர், இதைப் பார்த்து, முகத்தை சுழித்து, அவரது மகனை முறைத்தனர். ஆனால், மகனோ, மிகவும் அமைதியாக, தன் அப்பா சாப்பிடுவதையே பார்த்தபடி இருந்தான்.
சாப்பிட்டு முடித்ததும், தன் தந்தையை, கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவரது முகம் மற்றும் ஆடையில் ஒட்டியிருந்த உணவு பொருட்களை துடைத்து, தலையை வாரி, கண்ணாடியை துடைத்து, அவருக்கு மாட்டி விட்டான்.
இருவரும் அங்கிருந்து வெளியில் வர, உணவு விடுதியே அமைதியானது. பில்லுக்கு மகன் பணம் செலுத்தி, தன் தந்தையின் கைப்பிடித்து, மெதுவாக அழைத்து செல்ல, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில், ஒரு வயதானவர் எழுந்து, 'தம்பி... எதையாவது விட்டு செல்றீங்களா?' என்று கேட்டார்.
'இல்லயே... நான் எதையும் விட்டுச் செல்லலையே...' என்று மகன் கூற, அதற்கு, அந்த வயதானவர், 'இல்ல தம்பி... நீங்க, பெற்றோருக்கு நம்பிக்கையையும், இளையோருக்கு, ஒரு பாடத்தையும் விட்டு விட்டு செல்றீங்க...' என்றதும், அதுவரை முகம் சுழித்தவர்கள் கூட, எழுந்து நின்று கை தட்டி, பாராட்டினர்!
— வ.முருகன், பாப்பனப்பட்டு.
மரம் வளர்க்கும் மாணவர்கள்!
வெளியூரில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நானும், அதை வாங்கி, ஊருக்கு திரும்ப, பஸ் நிலையம் நோக்கி, நடந்து வந்த போது, மரக்கன்றுகளை வாங்கியவர்கள், வழி எங்கும் அதை, வீசி சென்றுள்ளதை பார்த்து, வேதனையடைந்தேன்.
அப்போது, அவ்வழியே வந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், கீழே கிடந்த மரக்கன்றுகளை பார்த்து, தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு, பின், 'மளமள'வென அவற்றை சேகரிக்க துவங்கினர்.
ஆர்வம் தாங்காமல் அவர்களிடம், 'இந்த மரக்கன்றுகளை என்ன செய்யப் போறீங்க...' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'இந்த மரக்கன்றுகளை, எங்க பள்ளி வளாகத்திலும், எங்க ஊரில் உள்ள குட்டையிலும் நடப்போறோம்...' என்றனர். மேலும், இதுபோல்,
நிறைய மரக்கன்றுகளை நட்டு இருப்பதாகவும், இப்பழக்கத்தை, தங்கள் ஆசிரியர் ஒருவர் கற்றுத்தந்ததாகவும் கூறினர்.
அந்த மாணவர்களையும், மரங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்திய ஆசிரியரையும், மனதார பாராட்டினேன்.
— அ.செந்தில்குமார், சூலூர்.
சத்தான ஐடியா!
சமீபத்தில், என் பேத்திக்கு,ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடினோம்; என் மகளுக்கும், மருமகனுக்கும் ஒரு யோசனை தோன்ற, மறுநாள், என் பேத்தியுடன் படிக்கும் மாணவர்களுக்கு, கேக் மற்றும் சாக்லேட் கொடுக்காமல், கடலை மிட்டாய் மற்றும் கமர்கட்டு, இரண்டையும் கொடுத்து அனுப்பினோம்.
இதைப் பார்த்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், வியந்து பாராட்டினர்; குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
இதை, அனைவரும் பின்பற்றலாமே!
— எஸ்.ஷம்ஷீன், நெய்வேலி.
தடையாக இருக்காதீர்கள்!
நான், 9ம் வகுப்பு ஆசிரியை; என் வகுப்பு மாணவியர் ஐந்து பேர், முதல், 'ரேங்க்' எடுப்பதற்கு போட்டி போடுவர். அதில், ஒருவள், காலாண்டு தேர்வில் ஐந்தாவதாக வந்தவள், அரையாண்டு தேர்வில் பத்தாவது ரேங்க் வாங்கினாள். அழைத்து, காரணம் கேட்க, அழ ஆரம்பித்தவள், 'சடங்காகிறது தப்பா டீச்சர்... மே மாத லீவ்ல, 'ஏஜ்' அட்டென்ட் ஆனேன். உடனே, பள்ளிக்கு போக வேணாம்ன்னு எங்க அம்மா தடுத்தாங்க. பிடிவாதம் பிடிச்சு, ஸ்கூலுக்கு வந்தேன். அதிலிருந்து, யாரையும் பார்க்கவோ, பேசவோ கூடாதுன்னு எங்கம்மா ஒரே, 'டார்ச்சர்!'
'அதோட, ஸ்கூலுக்கு அவங்க தான் கூட்டி வந்து, திரும்ப அழைச்சுட்டுப் போவாங்க. பள்ளி விடுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக வந்து, 'கேட்'ல நிற்கிறாங்க. இதனால, எல்லாரும் என்னை கேலி செய்றாங்க. இந்த மன உளைச்சலால் என்னால், படிக்க, சாப்பிட, தூங்க முடியல...' என்றாள்.
அவளது சங்கடம் புரிந்து, 'நாளைக்கு, உங்கம்மா, அப்பாவ ஸ்கூலுக்கு அழைச்சுட்டு வா... முக்கியமா உங்கப்பாவ கூப்பிட்டு வா...' என்றேன்.
மறுநாள், அவளது பெற்றோர் வந்தனர். அவளது அம்மாவை உட்காரச் சொல்லி, தலைமையாசிரியரும், நானும், தனியாக அவளது அப்பாவிடம் பேசிய போது, அவருக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை. சம்பாதித்து போடும் கடமை வீரராக மட்டுமே இருந்துள்ளார்.
அவரிடம், 'தாயே, தான் பெற்ற பெண்ணை நம்பாமல் நடந்து கொண்டால் எப்படி... அவள் நன்றாக படிக்கிறவ; அவளுக்கு உறுதுணையாக இல்லாம, இப்படி சந்தேகப் பிராணியாக இருந்தா, இது, அவ மனசை மட்டுமல்ல, வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் மனைவிய ஒவ்வொரு வாரமும் கவுன்சிலிங்கிற்கு கூட்டி வாங்க; நாங்க அவங்க கிட்ட பேசி இதை புரிய வைக்கிறோம்...' என்று அறிவுரை கூறினோம்.
நல்லவேளையாக, அவரும், அவரது மனைவியும் புரிந்து நடந்ததில், இப்போது, முழு ஆண்டு தேர்வில், முதல் மாணவியாக வந்துள்ளாள், அந்த மாணவி.
பெற்றோரே... குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு, நீங்களே தடையாக இருக்காதீர்!
— மஞ்சுளா விஜயகுமார், சென்னை.
பள்ளிகளுக்கு இன்றைய தேவை!
விழுப்புரத்தில் வசிக்கும் என் நண்பன், தன் இரு குழந்தைகளையும் உள்ளூர் பள்ளியில் சேர்த்துள்ளான்.
அப்பள்ளியில், தினமும் பள்ளி முடிந்த பின், 20 நிமிடங்கள், 'ஸ்பெஷல்' வகுப்பு நடைபொறும், அதில், வங்கியில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் உள்ள படிவத்தை, எப்படி பூர்த்தி செய்வது என்று கற்றுக் கொடுப்பர், தினமும், ஒரு புதிய ஆங்கில வார்த்தைக்கு, அர்த்தம் சொல்லிக் கொடுப்பர்.
அடுத்து, சாலையில் விபத்து ஏற்பட்டு, அடிபட்டு கிடப்பவர்களுக்கு முதலுதாவி செய்வது மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து செல்லிக் கொடுப்பர்.
மேடை பயத்தை போக்க, தினமும் ஒரு மாணவனை, அவனுக்கு பிடித்த ஏதேனும் ஒரு தலைப்பில், ஐந்து நிமிடம் மேடையில் பேச வைப்பது என, ஆக்கப்பூர்வமான விஷயங்களை கற்றுத் தருகின்றனர்.
இதுபோன்று, மற்ற பள்ளிகளும் பின்பற்றினால், சிறந்த மாணவர்கள் நிறைய உருவாவர் என்பது நிச்சியம்!
— வி.சீனிவாசன், சென்னை.
