தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை, சமராயப்பேட்டையில் இருந்து வாசகர் செல்லமுத்து சுவையான சம்பவம் ஒன்றை எழுதியுள்ளார். இதோ:

என் கல்லூரி பேராசிரியர் பாடம் நடத்தும் போது, குறிப்பிட்ட நிகழ்ச்சி இது:

பல ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்தார், ஆங்கிலேயர் ஒருவர். இதற்காகவே, சாதாரண ஓட்டல்களில் தங்கியும், ரயில்களில் மூன்றாம் வகுப்பிலும் பயணம் செய்தார்.

சுற்றுப் பயணம் முடிந்தவுடன், தன் நாட்டுக்குச் சென்று, இந்தியாவில் வறுமை தாண்டவமாடுகிறது என்று பத்திரிகைகளில் மட்டம் தட்டி எழுதினார். உதாரணத்திற்கு, 'ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள சிறிய டப்பாக்கள், திருடு போகாமல் இருக்க சங்கிலியால் பிணைப்பட்டுள்ளன...' என்று குறிப்பிட்டார்.

இதைப் படித்த நம் இந்திய பேராசிரியர் ஒருவருக்கு கடும் கோபம் வந்தது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக, பத்திரிகையில், காரசாரமாக மறுப்புக் கட்டுரை எழுதி, 'என் நாட்டைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்க வேண்டியது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள உதாரணத்தில், ரயில் பெட்டி கழிப்பறை டப்பாக்கள் திருடு போகாமல் இருக்க, சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன என்பது தவறு. அந்த டப்பாக்கள் கழிப்பறையின் ஓட்டையை விட சிறிதாக இருக்கின்றன. அவை, கீழே விழுந்து விடாமல் இருக்கவே சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட, ஆங்கிலேயர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டி உள்ளதே...' என்று, குறிப்பிட்டார்.

ஆங்கிலேயருக்கு, 'பதிலடி' கொடுத்து விட்டதாகவும், பாரதத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்ததாகவும், நம்மவருக்கு பெரு மகிழ்ச்சி!

ஒரே வாரத்தில் மீண்டும் அதே பத்திரிகையில், 'நீங்கள் இப்படி சமாளிப்பீர்கள் என்று முன் கூட்டியே தெரியும்; அதனால் தான், டப்பாவின் அளவையும், ஓட்டையின் அளவையும் கணக்கெடுத்து வைத்துள்ளேன்; உண்மையில் ஓட்டையை விட, டப்பாவின் அளவு பெரியது...' என்று எழுதினார், அந்த ஆங்கிலேயர்.

இதைப் படித்து நம்மவர், 'கப் சிப்!'

படித்த பெண்களுக்கு, மற்ற பெண்களின் அனுபவத்தை பற்றிக் கூறி, விழித்துக் கொள்ளுங்கள் என எவ்வளவோ கூறினாலும், விழித்துக் கொள்வதில்லை என்பதையே, பல இளம்பெண்கள், தங்களது, 'பேட் எக்ஸ்பீரியன்ஸ்' குறித்து வரும் கடிதங்கள் பறைசாற்றுகின்றன. இதோ, வாசகி ஒருவரின் கடிதம்:

மதிப்பிற்குரிய அந்துமணி அவர்களுக்கு,

உங்களை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் இயலாததால், இப்பொழுது என் அறியாமையை இயம்பும் அவசியத்தைச் சுமந்து வருகிறது, இக்கடிதம். என்னுடன் பணிபுரிபவர்கள், என் பணி அமைப்பின் முக்கியஸ்தர்; நான் மற்றும் மூன்று ஆண்கள்.

முக்கியஸ்தருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன; தோற்றத்தில் இளைஞரைப் போல் காட்சி அளிப்பார். என் அலுவலகத்தில் முன்பு பணிபுரிந்த பெண்ணிடம், அவர் தொடர்பு வைத்திருந்தார். அப்பொழுது, அந்தப் பெண்ணிற்கு மணமாகவில்லை. அவர்களுடைய நெருக்கம் புரிய, எனக்கு சில நாட்கள் ஆனது. ஆனாலும், நான் அவர்களுடைய தொடர்பை கண்டுகொள்ளவில்லை.

அந்தப் பெண்ணின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார், முக்கியஸ்தர். ஒரு ஆண்டுக்கு முன் திருமணமாகி, வேறு ஊருக்கு மாற்றலாகி சென்று விட்டாள், அப்பெண். அவளது பிரிவு, முக்கியஸ்தரை மிகவும் பாதித்தது; அதை நான் அறிவேன்.

ஒருநாள் அவர், என்னிடம் 'அவள் இல்லாத குறை எங்கும் தெரியக்கூடாது; நீ தான் மற்ற பொறுப்புகளை எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்...' என்று கூறினார்.

அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. என் வாதங்களுக்கு பதிலடி கொடுப்பதோடு, சோஷியலாகப் பேசுவார்.

பொதுவாக மார்ச் இறுதியில், வேலை அதிகமாக இருக்கும். அதனால், ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அலுவலகம் வருவோம். திருமணமாகிப் போன பெண்ணின் வேலைகளை நானும் சிறிது செய்வேன். ஒரு நாள், வேலை நேரத்தின் போது, அவர், தவறான நோக்கத்தில் என்னை நெருங்கினார். வேலை காரணமாக, நான் அவருடன் இணைந்து பணியாற்றியதும், அவரது தனிமையும் அவரை இந்த நிலைமைக்குத் தள்ளின.

நான், பெரிய அழகியோ அல்லது அடுத்தவர்களை மயக்கும் கவர்ச்சியோ என்னிடம் இல்லை. எவ்வளவோ பேரை, தினமும் பேருந்து மற்றும் வேலை செய்யும் இடங்களில் சந்தித்தாலும் என்னை மறந்ததில்லை. அழகாலும், கவர்ச்சியாலும் நான் யாரையும் கவர்ந்ததில்லை. எனினும், என் நேர்மையான கள்ளம், கபடமற்ற பேச்சினாலும், நகைச்சுவையாலும் எல்லாரையும் கவரும் தன்மையுண்டு.

காதலில் ஈடுபடக் கூடாது எனும் வைராக்கியம் இருந்தும், முக்கியஸ்தர் என்னை நெருங்கியபோது, என்னால் விலகவோ, அவரைத் தடுக்கவோ, வெறுக்கவோ இயலவில்லை. ஆனால், அதன்பின் யோசித்துப் பார்த்த பொழுது, அது தவறு எனப் புரிந்தது. பின், அடுத்த தடவை அவர் என்னை நெருங்கியபோது, 'எனக்கு செக்ஸ் பிடிக்கவில்லை...' என்று கூறி அழுதேன். அவர் அந்த சமயத்தில், 'உன் விருப்பம்...' என்று கூறி, ஜென்டிலாக விலகி விட்டார்.

அதன்பின், என்னிடம் சகஜமாகப் பேசிப் பேசி, 'உனக்கு செக்ஸ் மேல் இருக்கும் கூச்சத்தை விலக்கி காட்டுறேன்...' என்றெல்லாம் கூறி, என்னிடம் பழக ஆரம்பித்தார்.

முதலில் அவரை வெறுத்த நான், பின், அவரை கணவராகவே நினைத்து வாழ ஆம்பித்தேன். இதற்கிடையில், அந்தப் பெண், மீண்டும் இந்த ஊருக்கே மாற்றல் வாங்கி, தன் கணவருடன் வந்து விட்டாள். அந்தப் பெண்ணின் முன், என்னிடம் அவர் பேசுவதே கிடையாது. நான் அருகில் இருந்தாலும், அந்தப் பெண்ணிடம் மட்டும் சிரித்துப் பேசுவார். என் மனம் கொதித்தாலும், அவர்களைப் பற்றி அறிந்ததால், எதுவுமே கூற முடிவதில்லை.

ஆனால், அப்பெண் இல்லாதபோது என்னிடம் மிகவும் அன்பாக பழகுகிறார். நான், 'எனக்கு துரோகம் செய்யாதீர்கள்...' என்று சண்டை போட்டபோது, 'நான் அவளிடம் இயல்பாகத்தான் பழகுகிறேன்; அவளை தொடுவது கூட கிடையாது...' என்று கூறினார்.

அவர் முன் போல் அவளுடன், 'தொடர்பு' கொள்வதில்லை. எனினும், மனதளவில் அவர்களின் நெருக்கம் குறையவில்லை. எனக்குரியவர் அந்தப் பெண்ணிடம் பேசுகிறார் என்ற பொறாமையில், அந்தப் பெண்ணிடம் இயல்பாக பேசுவதைக் கூட நிறுத்தி விட்டேன்.

என் உடலைப் பெற்று, மனதை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, தினமும் என்னை நோக வைக்கிறார். அவருடன் பழகவும் பிடிக்காமல், விலகவும் முடியாமல், மாற்றலாகிப் போகவும் வழியில்லாமல் தவிக்கிறேன். கண்ணைத் திறந்துகொண்டே கிணற்றில் விழுந்துவிட்ட என் மடத்தனத்தை எண்ணி, உணவு, உறக்கம் இன்றி வாடுகிறேன்.

ஆண் மகனைப் போல் வளர்ந்த நான், இப்போது, என் எதிர்காலத்தை நினைத்து பயப் படுகிறேன். அந்துமணி... எனக்கு தங்களது அறிவுரை வேண்டும் என்று கேட்கவில்லை; என் நொந்த மனதுக்கு ஒரு தோழனாய் இதமான வார்த்தைகளை, அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

தங்களின் நட்பையும், இதமான வார்த்தைகளையும், ஏற்க துடிக்கும் இந்த இளம் உள்ளத்தை ஏமாற்றாமல் விரைவில் எனக்கு ஆறுதல் அளியுங்கள்.

- என, முடித்துள்ளார் வாசகி. இவருக்கு தனித் தபால் மூலம் பதில் அனுப்பியுள்ளேன்.

இளம் பெண்கள் - படித்தவர்களாக இருப்பினும், இல்லாவிடினும், ஆண்கள் சிலரின் பொதுவான மனநிலை, செயல்பாட்டை இக்கடிதத்தை படித்த பிறகாவது உணர்ந்து கொள்ளட்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us