தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சந்திரபாபு (6)

சந்திரபாபு (6)

சந்திரபாபு (6)


PUBLISHED ON : செப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்தக்கண்ணீர் படத்தில் ஒருவர் ஓடிவந்து, மாடிப்படி ஏறும் சந்திரபாபுவிடம், 'நம்ம மோகனுக்கு குஷ்டம்...' என்பார். உடனே, முகத்தில் அதிர்ச்சி காட்டி, அலறி, பத்தாவது மாடிப்படியில் இருந்து அப்படியே கீழே குதித்தார், சந்திரபாபு.

இதை எதிர்பார்க்காத இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு மற்றும் கேமராமேன் அதிர்ச்சியாகி, 'என்ன பாபு சார்... இப்படி செய்யப்போறேன்னு சொல்லவே இல்லயே... நீங்க குதிச்ச குதியில, பிரேமுக்கு வெளியில போயிட்டீங்களே...' என்றனர்.

'அதனால என்ன... எத்தனை முறை குதிக்கணும்ன்னு சொல்லுங்க; சரியா வர்ற வரைக்கும் குதிச்சுக்கிட்டே இருக்கேன்...' என, சாதாரணமாக சொல்லி, தன் ரப்பர் உடம்புடன் குதிக்க தயாராகிவிட்டார். பின், பிரேமை அகலமாக வைத்து, அக்காட்சி எடுக்கப்பட்டது.

முதன்முதலாக, 1955ல், எம்.ஜி.ஆருடன், குலேபகாவலி படத்தில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார், சந்திரபாபு.

அதற்கு முன், 1950ல் எம்.ஜி.ஆரின் லாயிட்ஸ் சாலை வீட்டிற்கு சென்று, வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

அன்று, தன் வீட்டு வராந்தாவில், சிலருடன் பேசிக் கொண்டிருந்தார், எம்.ஜி.ஆர்., வித்தியாசமான பாணியில், கைகளை அசைத்தபடியே, கேட்டை திறந்து வீட்டுக்குள் நுழைந்த சந்திரபாபுவின் தோற்றம் மற்றும் நடையை பார்த்த எம்.ஜி.ஆர்., தன் முன் தயங்கியபடி நின்ற சந்திரபாபுவிடம், 'என்ன வேணும்?' என்று கேட்டார்.

'சினிமாவுல நடிக்க, 'சான்ஸ்' வேணும்...'

'நான் என்ன சினிமா கம்பெனியா வெச்சிருக்கேன்... என்கிட்ட வந்து, 'சான்ஸ்' கேக்குற; சரி... உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்டார்.

'சினிமாவுல நடிச்சிருக்கேன்... எனக்கு நல்லா பாட, ஆட தெரியும். உலக அளவில், பெரிய டான்சராகவோ, காமெடியனாவோ வரணும்ங்கிறது என் ஆசை. ஆனா, பரத நாட்டியம் தெரிஞ்சவங்களுக்கு தான், இங்க வாய்ப்பு கிடைக்குது. எனக்கு நீங்க சிபாரிசு செய்யணும்...' என்ற சந்திரபாபு, அந்த நொடியே ஒரு பாடலை பாடி காட்டியவர், திடீரென, பாடலுக்கு ஏற்ப, ஆடத் துவங்கினார்.

அவரது அச்செயல், எம்.ஜி.ஆர்., மனதில் பதிந்தது.

'என்கிட்ட கைய, காலை ஆட்டி நடிச்சு காண்பிச்சு என்ன பயன்... நான் ஒண்ணும் இயக்குனர் இல்லயே... ஏதாவது இயக்குனர்கிட்ட போய் வாய்ப்பு கேளு. அட்ரஸ் கொடுத்திட்டு போ; ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்றேன்...' என்று கூறி, சந்திரபாபுவை அனுப்பி வைத்தார்.

பின், அங்கிருந்தவர்களிடம், 'பாடிக்கிட்டே இருந்தான்; திடீர்ன்னு ஆட ஆரம்பிச்சுட்டான். ஆளு ஒரு மாதிரி இருந்தாலும், இவன்கிட்ட ஏதோ விஷயம் இருக்கு; அவன் செய்ற ஆக் ஷன்லயே, 'ஹ்யூமர்' இருக்கு...' என்றார் எம்.ஜி.ஆர்.,

பின் ஒருநாள், என்.எஸ்.கிருஷ்ணனிடம், 'கொஞ்ச நாளைக்கு முன், ஒரு பையன் இங்கே வந்தான்; பாக்க வித்தியாசமா இருந்தான். நடிக்க வாய்ப்பு கேட்டவன், திடீர்ன்னு பாடிக்கிட்டே, ஆட ஆரம்பிச்சுட்டான். நாடக கம்பெனியில இருந்த அனுபவம் கிடையாது; நடிப்பு, வசன உச்சரிப்பு எந்த அளவுக்கு வரும்ன்னு தெரியல. இதெல்லாம் இல்லாம, சினிமாவுக்கு எந்த அளவு ஒத்து வருவான்னு தெரியல...' என்றார் எம்.ஜி.ஆர்.,

அப்போது, நியூடோன் ஸ்டுடியோவில், மணமகள் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருந்தார், என்.எஸ்.கிருஷ்ணன். அன்றைய படப்பிடிப்பின் இடைவேளையில், என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஜி.ஆரும் அமர்ந்திருக்கையில், அங்கே வந்தார் சந்திரபாபு.

'எப்படி உள்ளே வந்தாய்?' என்று, எம்.ஜி.ஆர்., கேட்டதும், 'ஒரு பொய் சொல்லி உள்ளே வந்தேன்...' என்றார், சந்திரபாபு.

'என்ன பொய் சொன்ன?'

'இன்னிக்கு இங்க, மணமகள் ஷூட்டிங்ல நீங்க இருக்கிறதாகவும், வந்து பாருன்னு நீங்க என்கிட்ட சொன்னதாகவும், வாட்ச்மேன்கிட்ட பொய் சொன்னேன்; உள்ள விட்டுட்டாங்க...' என்றார்.

'அப்படியா... ஒரு நல்ல காரியத்துக்காகத் தான் பொய் சொல்லியிருக்க...' என்றார், என்.எஸ்.கே.,

'எனக்கு சினிமாவில வாய்ப்பு வேணும்; வீட்ல அப்பா வேற, ஏதாவது தொழில் பாருன்னு வற்புறுத்துறாரு...' என்றார், மிகுந்த துக்கத்துடன் சந்திரபாபு.

'சரிப்பா... உனக்கு நடிக்க தெரியுமான்னு நான் தெரிஞ்சுக்கணும்ல... நான், ஒரு காட்சியை சொல்றேன்; அதுக்கு தகுந்தாப்புல நடிச்சு காட்டு பாப்போம்...' என்றார், என்.எஸ்.கே.,

'சரி...' என, ஆர்வமானார், சந்திரபாபு.

'இப்ப, இந்த இடத்துல ஒரு பசு நிக்குது; நீதான் பால்காரன். உங்கிட்ட பால் வாங்க வர்ற ஒருத்தர், பால் ரொம்ப தண்ணியா இருக்குன்னு சொல்றாரு; நீ சமாளிக்கிற. இதுதான் காட்சி; எங்க நடிச்சுக் காட்டு...' என்றதும், 'விறுவிறு'வென தயாரானார், சந்திரபாபு.

அங்கிருந்த கயிறு ஒன்றை எடுத்து, பால் கறப்பவர் போட்டிருப்பது போல் தோளில் போட்டு, மாட்டை அதட்டுவது போல், 'அய்... அய்...' என, சத்தம் எழுப்பி, பால் கறப்பதற்கு பாத்திரம் ஒன்றை எடுப்பது போல் எடுத்து, பால் கறக்க அமருவது போல் அமர்ந்து, தன் கால்களுக்கு இடையே அப்பாத்திரத்தை கச்சிதமாக வைத்து, 'ஷ்ஷ்க்...' என, சத்தம் எழுப்பியபடியே, லாவகமாக பால் கறப்பது போல் நடிக்க ஆரம்பித்தார்.

சில நொடிகளுக்கு பின், பாத்திரத்தோடு எழுந்தார். அப்போது, என்.எஸ்.கே., 'ஏம்மா... என்ன உன்கிட்ட பால் வாங்கினா, ரொம்ப தண்ணியா இருக்கு...' எனக் கேட்க, 'இல்லியே... நான் எப்பவும் பால்ல தண்ணி கலக்கவே மாட்டேன்; தண்ணியில தான் கொஞ்சமா பாலை கலப்பேன்...' என்று சந்திரபாபு கூறியதும், எல்லாரும் சிரித்து விட்டனர்.

அதன்பின், 'ஏதாவது வாய்ப்பிருந்தா சொல்றேன்...' என்று சொல்லி, சந்திரபாபுவை அனுப்பி வைத்தார், என்.எஸ்.கே.,

அன்று, எதேச்சையாக நடித்து காண்பித்த, பால்காரர் வேடத்தை தான், பின், சகோதரி படத்தில் பயன்படுத்தினார், சந்திரபாபு.

குலேபகாவலி படத்தில் நடித்த போது, எம்.ஜி.ஆருடன் நட்பானார், சந்திரபாபு. ஆனால், அது, அவ்வளவு சுலபமாக நடந்து விடவில்லை. சந்திரபாபுவே விவரிக்கிறார் படியுங்கள்:

செட்டில் ரொம்ப வேடிக்கையாக பேசிக் கொண்டிருப்போம்; எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர், எம்.ஜி.ஆர்., தான்!

தனிமையில், நாற்காலியில் அமர்ந்திருப்பார். அன்றும், அப்படித்தான் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். நான், இயக்குனர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு மற்றும் பலர் அமர்ந்து, சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம். எம்.ஜி,ஆரை அழைத்து, தன் அருகே அமர சொன்னார், ராமண்ணா. உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன்; எல்லாரும் சிரித்தனர்; ஆனால், எம்.ஜி.ஆர்., மட்டும் சிரிக்கவில்லை.

'என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்., சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்... இப்படி உம்முன்னு இருக்கீங்களே...' என்றேன்.

'உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்... கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்...' என்றார் பட்டென்று!

எல்லாரும் என்னையே பார்த்தனர்; எனக்கு அவமானமாக இருந்தது.

பின் தான், அங்கிருந்தோர், எனக்கு எம்.ஜி.ஆரை பற்றி கூறினர்... 'அவர் எப்போதும், எதிலும், தான் மட்டுமே பிரபலமாக தெரிய வேண்டும் என்று நினைப்பார்; கூட்டத்தோடு சேர மாட்டார்; தனிமையில் தான் அமர்ந்திருப்பார்; அவருடன் பேச வேண்டுமானால், அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு, அவர் சிரிக்காததற்கு காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்ன்னா, அக்கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லயா... அதனால தான், அவர் அப்படி சொன்னார்...' என்றனர்.

தொடரும்.

- முகில்

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us