PUBLISHED ON : செப் 10, 2017

சபாஷ், மாணவியரே!
என் மகள் படிக்கும் கல்லூரியில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவை, 'காலேஜ் டே' என்ற பெயரில் கொண்டாடினர், மாணவியர். விழாவில், வகுப்பறை மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சிறு பரிசு அளித்து, கவுரவித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதுபோலவே, வாட்ச்மேன் மற்றும் கல்லூரி எதிரே, தினசரி சாலையை கடக்க உதவும், டிராபிக் கான்ஸ்டபிள் போன்றவர்களுக்கு பரிசு அளித்து மகிழ்ந்தனர்; அவர்கள் மாணவியரை பாராட்டியதுடன், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். பஸ் டே, காலேஜ் டே என்ற பெயரில், அரசு பொது சொத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் இன்றைய மாணவ சமூகத்தினர், இதுபோன்று, தமக்கு கல்வி அளிக்கும் கல்லூரிக்கும், அங்கு வேலை பார்ப்போருக்கும் தகுந்த மரியாதை அளித்தால், மாணவ சமுதாயம் போற்றப்படும்!
— பி.சுமித்ரா, சென்னை.
கூடி வாழ்ந்தால்...
சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவள் வீட்டிற்குச் சென்றிருந்த போது, தன் வீட்டில் நடக்க இருக்கும் பார்ட்டிக்காக பொருள் வாங்க, கடைக்கு கிளம்பியபடி இருந்தாள். 'என்ன திடீர் பார்ட்டி...' என்று கேட்டதற்கு, 'அது ஒண்ணுமில்ல; இதே ஊரில் எங்களது, ஐந்து உறவினர் குடும்பங்க இருக்கு; ஆனா, அடிக்கடி அவங்கள சந்திக்க முடியிறதில்ல; ஏதாவது விசேஷம்ன்னாக் கூட, குழந்தைகள அழைச்சுட்டு போக முடியிறதில்ல; அதனால் தான், ஐந்து குடும்பத்தினரும் சேர்ந்து, மூணு மாசத்திற்கு ஒருமுறை, யாராவது ஒருத்தர் வீட்டில் ஒண்ணு கூடி, சந்தோஷமாக இருக்க முடிவெடுத்தோம். சில சமயம், அருகில் உள்ள கோவிலுக்கோ அல்லது ஏதாவது சுற்றுலா தலத்திற்கோ சென்று வருவோம். கடந்த ஒரு வருஷமாகவே இதை நடைமுறை படுத்தி வர்றோம்.
'இந்த முறை எங்க வீட்டிற்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு செல்ல இருக்கோம். இதனால், சொந்த பந்தங்களிடையே நெருக்கமும், பாசமும் ஏற்படுறதுடன், குழந்தைகளுக்கும், சொந்த பந்தங்கள் நன்கு தெரிந்து, உறவுகள் தொடரும் வாய்ப்பு ஏற்படுது. சிலருக்கு ஒரே குழந்தை இருப்பதால், சொந்தங்களின் நெருக்கத்தால், துணையாக உடன்பிறப்புகள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட, இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில் இருந்து ஒரு மாற்றமும், மகிழ்ச்சியும் ஏற்படுது...' என்றாள். தனித்தீவாக இருக்கும் தனி குடும்பங்கள் ஒன்று சேர்வது நல்லது தானே... இனி, நானும் சொந்தங்களை இணைக்க முயற்சி செய்யப் போகிறேன். அப்ப, நீங்க...
- எஸ்.விஜயலட்சுமி, மதுரை.
மிச்சமிருப்பதும் பயன் தருமே!
எங்கள் தெருவில், பழமையான அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதில் அடித்திருந்த பெயின்ட் கலர் மங்கி இருந்தது. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், அடுத்த தெருவில் புது வீடு கட்டினார். மீதியிருந்த வால்பெயின்ட்டை, அந்தக் கோவிலின் சுற்றுச்சுவருக்கு அடித்தார்.
அத்துடன், எங்கள் பகுதியில் வீடு கட்டிக் கொண்டிருந்தவர்களிடம், மீதியிருந்த பெயின்ட்டை கேட்டு, அந்தக் கோவிலுக்கு அடித்து, புதுசு போல மாற்றி விட்டார். அவரின் செயலுக்கு, எங்கள் பகுதி மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது.
வீடு கட்டுவோர், மீதமாகும் பெயின்ட்டை, அடுத்த முறை பயன்படுத்தலாம் என்று எடுத்து வைத்து, அது காய்ந்து போன பின், உபயோகப்படாது என்று தூக்கி எறிவதை விட, பள்ளிக்கூடம், கோவில் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவலாமே!
— பிரேமா சந்தாராம், சென்னை.
