
உத்திர பிரதேச மாநிலம், சம்பல் பள்ளத்தாக்கு பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
இல்லை என்றால், பூலான் தேவி பற்றி நினைவுப் படுத்திப் பாருங்கள்...
கொள்ளையன் ஒருவனிடம் பணயக் கைதியாக, 1964ல் மாட்டி, 31 நாள் வேதனை அனுபவித்தார், ஒரு பத்திரிகையாளர்.
அவர் பெயர் சஞ்சய் குமார்; அவரது அந்த அனுபவத்தை படிக்கும் வாய்ப்பு, சமீபத்தில் கிடைத்தது.
இதோ, அவரது அனுபவம்:
மத்திய பிரதேசம் குவாலியரிலிருந்து வெளிவரும், 'நவ் ப்ரபாத்' தினசரியின் ஆசிரியராக, 57ல் பொறுப்பேற்றேன்.
இங்குள்ள பிரபல கொள்ளையர்களில் ஒருவன், பிரங்கி; ஒரே மாதத்தில், 101 நபர்களை கொன்ற, 'பெருமை' இவனுக்கு உண்டு.
புகழ் பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் பயிற்சி பெற்று திரும்பியிருந்தார், டி.ஐ.ஜி., - பி.கே.முகர்ஜி என்ற போலீஸ் அதிகாரி.
அவர், பிரங்கியைப் பிடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் திட்டமிட்டிருந்தார். 'வேட்டை'க்கான நாள் குறிக்கப்பட்டிருந்த சமயம்... எனக்கு இந்த செய்தி காதில் விழுந்தது. இந்தப் போலீஸ் வேட்டையைப் பற்றி, வாசகர்களுக்குச் சுடச் சுட செய்தி தர வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.
ஐ.ஜி.,யாக இருந்த பார்ஸிக்காரரான, ரஸ்டம்ஜியிடம் இதற்கு அனுமதி கோரி கடிதம் எழுதினேன்.
என் சொந்தக் கேமராவுடன், 1964ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒரு விடியற்காலை, 6:00 மணிக்கு போலீஸ் கோஷ்டியுடன் புறப்பட்டேன். 7:45க்கு, கோர்புரா என்ற இடத்தை அடைந்தோம்.
முகர்ஜி தலைமையில், 500 போலீஸ்காரர்களை கொண்ட லாரிகளும், பல அதிகாரிகளைக் கொண்ட மூன்று ஜீப்புகளும் அமைந்த அந்த குழுவை, ஒரு குட்டி ராணுவப்படை என்றே சொல்லலாம்.
முகர்ஜியுடன் நான் இருந்தேன். 'வேட்டை'க்கு புறப்பட்டோம். அப்போது, முகர்ஜி என்னிடம், 'நீங்கள் ஜீப்பின் கீழே, தரையோடு தரையாக படுத்துக் கொள்ளுங்கள்...' என்று சொன்னதும், தூக்கி வாரிப் போட்டது. உத்தரவைத் தட்ட முடியாமல், ஜீப்புக்குக் கீழ் படுத்துக் கொண்டேன். இரும்பு தொப்பி அணிந்த டிரைவர் மற்றும் முகர்ஜி, ஜீப்பின் முன்புறம் இருந்தனர். சக்கரங்களின் சந்து வழியே, நான் வெளிப்புறத்தைப் பார்க்க முடிந்தது.
மண் சாலை அது... ஒரே புழுதிப்படலம்!
காலை, 9:00 மணி இருக்கும்; 'டுமீல் டூமீல்' என்று, ஐந்து தரம் சுட்டார், முகர்ஜி. அதன் பின், மாலை, 5:00 மணி வரை, இந்த ஓசை ஓயவில்லை.
கொள்ளையரை போலீஸ் வளைத்துக் கொண்டது. தரையில் நின்றிருந்த கொள்ளையர், 'சடசட'வென மரத்திலேறி, அங்கிருந்து சுடத் துவங்கினர்.
ஐந்து மணிக்கு வெற்றி கிட்டியது, - போலீசாருக்கல்ல; கொள்ளையருக்கு! கட்டுப்பாடாக நின்றிருந்த போலீஸ் அணியை, சின்னாபின்னமாகச் சிதற அடித்து விட்டனர், கொள்ளையர்.
போலீஸ் வளையத்தை ஊடுருவி, எங்கள் ஜீப்புக்கு முன், குதிரையில் அமர்ந்தபடி, சாலையை வேகமாக கடந்த கொள்ளையர் தலைவன் பிரங்கியை, துப்பாக்கியால் சுட்டபடி ஜீப்பைக் கிளப்பினார், முகர்ஜி.
ஜீப்பின் கீழ் படுத்திருந்த நான், சாலையோரமிருந்து, 40 அடி ஆழ, மணற் பள்ளத்தில், 'கடகட'வென்று சரிந்து விழுந்தேன். என் காதுகளுக்குள் மணல் புதைந்து, அடைத்துக் கொண்டது என்பதைத் தவிர, வேறு காயம் எதுவும் ஏற்படவில்லை.
அதே நிமிடம், காணற்கரிய காட்சியொன்றைக் கண்டேன்.
பெயரைக் கேட்டாலே குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரன் பிரங்கி, ஆறு அடி தூரத்தில், குதிரை மீது உட்கார்ந்து, என்னை கவனித்துக் கொண்டிருந்தான். நான், சட்டென்று சமாளித்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
பெரிய மீசை; ஆறடி உயரம். அப்போது அவனுக்கு வயது, 62 என்றனர். இதில், 32 ஆண்டுகள், கொள்ளையிலேயே கழிந்தவை. அப்படியும் திடகாத்திரமாக, வாலிபனைப் போன்று இருந்தான்.
பழுப்பு நிறத்தில், நல்ல உயரத்துடன் இருந்தது அவனுடைய குதிரை; அரபி ஜாதி.
எனக்கு ஒரு பக்கம் உதறல்; மறு பக்கம் ஆர்வம். முகத்தைக் கேமராவால் மறைத்தபடி அவனை, 'கிளிக்' என்று எப்படியோ படம் பிடித்து விட்டேன். அது, நன்றாக விழுமென்று நான் நம்பவே இல்லை; மறுநாள் கழுவிப் பார்த்த போது, அருமையாக விழுந்திருந்தது; எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.
உடனே, மறைந்து விட்டான் பிரங்கி. நான் மெல்ல எழுந்து, போலீஸ் ஜீப்பை அடைந்தேன். பாவம், அதற்குள் ரொம்ப கவலைப்பட்டுப் போய் விட்டார் முகர்ஜி.
பிப்ரவரி, 16ம் தேதி இந்தப் போலீஸ் வேட்டையைப் பற்றிய எல்லா விவரங்களும், பத்தி பத்தியாக என் பத்திரிகையில் வெளியாயின. பிரங்கியின் படத்தைப் பெரிதாக வெளியிட்டது தான் ஆபத்தாயிற்று.
மார்ச், 6ம் தேதியன்று எனக்கு ஆபத்து நிகழ்ந்தது.
என்னைப் பார்க்க, கல்வியமைச்சர், டாக்டர் சங்கர் தயாள் சர்மா விரும்புவதாக, டெலிபோன் மூலம் தெரிவித்தார், அவருடைய உதவியாளர். மார்ச் 6ம் தேதி ஷிவ்புரிக்கு வருமாறு கூறினார் அவர்; ஒப்புக் கொண்டேன்.
மும்பை -- ஆக்ரா சாலையில், குவாலியரிலிருந்து, 64 கி.மீ., தூரத்தில் இருக்கிறது, ஷிவ்புரி. அங்கே, ஒரு கல்லூரிக் கட்டடத்தைத் திறந்து வைக்க இருந்தார், கல்வி அமைச்சர். 6ம் தேதி காலை,8:00 மணி பஸ்சில், ஷிவ்புரிக்குப் பயணமானேன். சாயந்திரம் திரும்பி விடுவதாக அனைவரிடமும் சொல்லியிருந்தேன்.
மணி, 9:30; ஷிவ்புரியை அடைய, இன்னும், 16 கி.மீ., தூரமே இருக்கும் நிலையில், சரேலென பஸ் நின்றது.
வழிமறித்து குறுக்கே நின்றனர், 15 பேர். அனைவரது கையிலும் துப்பாக்கி; தலைப்பாகைத் துணியின் முனையால், தங்கள் முகங்களைப் பாதி மறைத்திருந்தனர். பஸ்சிலிருந்த, 40 பயணிகளும் பயந்து போயினர்.
அடுத்த நிமிடம், எனக்கு மயக்கம் ஏற்படுத்துகிற நிகழ்ச்சி நடைபெற்றது.
என் பெயரைச் சொல்லி,'சஞ்சய்குமார் நாம் கா ஆத்மி நீசே உத்தர் ஜாயே...' - 'சஞ்சய் குமார் என்கிற பெயருள்ள பேர்வழி, கீழே இறங்கி வரட்டும்...' என்று கூப்பிட்டனர், கொள்ளையர்.
அப்போது எனக்கு ஏற்பட்ட அச்சத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. இரண்டு சீட்டுகளுக்கு நடுவே ஒளிய முயன்றேன்.
ஆடாது, அசையாது பயத்துடன் உட்கார்ந்திருந்தார், டிரைவர். பின்பக்கமிருந்த கண்டக்டர் கூட, பயந்து, முன்புறம் ஓடி, டிரைவருக்கு பக்கத்தில் ஒட்டிக்கொண்டு நின்றார்.
இதற்குள் பஸ்சுக்குள் வந்தனர், மூன்று கொள்ளையர். பயத்துடன் ஒளிந்து கொள்ள முயன்றதால், என்னை நானேஅடையாளம் காட்டி விட்டேன் போலும்... இரண்டு கொள்ளையர், என் கையை முறுக்கி, பஸ்ஸை விட்டுக் கீழே இறங்குமாறு என்னை இழுத்தனர்.
வேறு வழியில்லாமல் இறங்கினேன்; மறுகணம், அந்த பஸ், போய் விட்டது.
என் தோல் பையைப் பறித்து, அதனுள்ளிருந்த ஆபீஸ் காகிதங்களைக் கிழித்தெறிந்தனர். சட்டைப் பையில், 32 ரூபாய், 40 பைசா வைத்திருந்தேன்; அதையும் எடுத்துக்கொண்டனர். அடுத்து, என் கைகள் இறுக்கமாக கட்டப்பட்டன. கருப்புப் பஞ்சுகளை என் கண்ணின் மீது வைத்து, பெரிய துணியால் அதையும் கட்டினர்.
பின், எனக்கு திசை தெரியக் கூடாது என்பதற்காக, இரண்டு பேர், என் தோளை அமுக்கி, சுழற்றி விட்டனர்.
மண்சாலையிலிருந்து, பல வளைவுகள் கொண்ட பாதை வழியே அழைத்துச் சென்றனர். என்னுடைய வேட்டியும், செருப்புகளும் தடுக்கியதால், பலமுறை விழுந்து விழுந்து எழுந்தேன்.
இப்படி, 8 கி.மீ., தூரம் நடந்தேன்.
வர வர என் செருப்புகள் தடுக்கி, கீழே விழுவது அதிகமாக, ஆத்திரத்துடன் காலை உதறி, செருப்புகளை தூர வீசியெறிந்தேன்.
வழியில், ஒரு சிறுகோவில் வந்தது
போலும்... 'ஹர ஹர மகாதேவ்!' என்று கோஷமிட்டனர், கொள்ளையர்.
மூன்று நாள் நடை, குடிக்க தண்ணீர் மட்டுமே; உணவு கிடையாது. நான்காம் நாள் காலை, 10:00 மணி இருக்கும்; என் கண்ணில் கட்டியிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. சில நிமிடங்களுக்கு என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. மெல்ல மெல்லத்தான் உருவங்கள் புலனாயின.
என் எதிரில், ஒரு பாறை மீது அமர்ந்திருந்தான், பிரங்கி. ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்தான்.
ஏதேதோ கேட்டான்; எனக்கு சரியாக விளங்கவில்லை. ஒரே ஒரு சிகரெட் கேட்டேன். செயின் ஸ்மோக்கர் நான். மூன்று நாளாக சிகரெட்டே பிடிக்க முடியவில்லை.
பிரங்கியின் பக்கத்திலிருந்தவன் என்னை ஆபாசமாகத் திட்டி, 'உன் மாமியார் வீடு என்று நினைப்பா...' என்று சீறினான்.
அந்த ஆளை ஜாடையாகப் பார்த்து, பார்வையால் உத்தரவிட்டான், பிரங்கி. உடனே, எனக்கு பீடி வழங்கப்பட்டது. பின், சாப்பிட மோரும், கருப்பட்டியும் கொடுத்தனர்.
இரவு முழுவதும், நாட்டியமும், குடியுமாகவே அவர்களுடைய பொழுது கழிந்தது. இரண்டு, மூன்று பெண்கள் மாறி மாறி நாட்டியமாடினர். அந்த நாட்டியப் பெண்கள், குவாலியரைச் சேர்ந்த பரத்தையர் என்பது எனக்குத் தெரியும்.
முப்பது நாட்கள் என்னை கைதியாகவே வைத்திருந்தனர். ஏன், எதற்கு என்று கூட சொல்லவில்லை.
முப்பதாம் நாள் காலையில் தான் அங்கே வந்தாள், 22 வயது மல்கா. சம்பல் பள்ளத்தாக்கின் புகழ் பெற்ற கொள்ளைக்காரி; பல கொலைகள் செய்தவள்.
சுரிதாரும், பைஜாமாவும் அணிந்து, குதிரை மீது வந்தாள். துப்பட்டா ஒன்றை மார்பின் குறுக்காக அணிந்து, இடுப்பில் இரண்டு ரிவால்வர்கள் கட்டியிருந்தாள். காலில், பஞ்சாபி ஷூ.
மல்காவை நான் வழிமறித்து, 'என்னை நினைவிருக்கிறதா...' என்று கேட்டேன்.
அவள் திகைத்தாள்.
நான் சொன்னேன்... 'குவாலியரில் உன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். சம்பல் பள்ளத்தாக்கைப் பற்றி நான் ஒரு புத்தகம் எழுதி வந்ததால், அதைப் பற்றி உன் சகோதரி புட்லீயிடம் தகவல் சேகரிப்பதற்கு வந்தேன். அப்பொழுது உனக்கு வயது, 14; நீ, எனக்கு தேனீரும், தாம்பூலமும் கொடுத்தாய். உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்டேன்.
அவள் என்னை உற்றுப் பார்த்தாள். பின், நினைவு வந்து, வியப்புடன் என் எதிரே உட்கார்ந்து, 'இங்கே எப்படி வந்தீர்கள்?' என்று கேட்டாள். நான் வந்த கதையை சொன்னேன்.
பிரங்கியிடம் எனக்காக ஒன்றரை மணி நேரம் பேசியவள், பின் என்னிடம் வந்து, 'இன்னும் இரண்டு நாளில் உங்களை விடுவித்து விடுவர்...' என்றாள். பிறகு சிரிப்புடன், விடைபெற்றுச் சென்றாள்.
ஏப்ரல் இரண்டாம் தேதி, என்னை அழைத்து, என் உடமைகளை திருப்பித் தந்தான், பீரங்கி. என் தினசரி பத்திரிகைக்கு சந்தாவாக, 150 ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்து, தினந்தோறும் ஐந்து பிரதிகள் வீதம், ஒரு ஆண்டுக்கு அனுப்பச் சொன்னான். குவாலியரிலிருந்து, 4 கி.மீ., தள்ளி உள்ள ஒரு கோவிலில், பத்திரிகைகளை கொண்டு வந்து போட்டு விட வேண்டும் என்றான்.
இரவு, 11:00 மணிக்கு, என் கண்களை மீண்டும் கட்டி, ஒரு குதிரை மீது ஏற்றி, ஒரு ஆள் குதிரையை ஓட்ட, இன்னொரு ஆள் என் பின் உட்கார்ந்து கொள்ள, விடியற்காலை, 3:00 மணிக்கு குவாலியருக்கு செல்லும் சாலையில் விட்டு விட்டு சென்றனர்.
பீடி பிடித்தபடி, அந்த சாலையிலேயே உட்கார்ந்திருந்தேன். எட்டு மணிக்கு ஒரு பஸ் வந்தது. என்ன ஆச்சரியம்! அதே பஸ், அதே கண்டக்டர், அதே டிரைவர். மணி, 9:15க்கு பஸ் ஸ்டாப்பில் இறங்கி, தாடியும், மீசையுமாய் இருந்த என் முகத்தை மூடியபடி, என் வீட்டிற்கு ஓட்டமும், நடையுமாய் விரைந்தேன்.
என் வீட்டில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிராமணர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். என் ஐந்து வயது மகன், தலையை மொட்டையடித்து, பிண்ட தானம் கொடுத்துக் கொண்டிருந்தான். விதவை கோலத்தில் மூலையில் முடங்கி இருந்தாள், என் மனைவி.
எல்லாம் எதற்கு... நான், 'இறந்து' போனதற்குத் தான்!
ஆம்! நான் கொள்ளையர்களிடம் பிடிபட்டதும், யூனியன் உள்துறை அமைச்சகம் என்னைத் தேடி விரிவான ஏற்பாடுகள் செய்ததாம். நான் கிடைக்கவில்லை; ஆனால், நான் விட்டெறிந்த செருப்புகள் கிடைத்தன. அதனால், நான் கொலை செய்யப்பட்டு விட்டேன் என்று முடிவு கட்டி விட்டனர். அதனால், ஈமக் காரியங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.
இப்போதும் அந்த கோவில் முகவரிக்கு, என் பத்திரிகை அனுப்பப்பட்டு வருகிறது.
- இப்படி, தன் அனுபவத்தை எழுதியுள்ளார், சஞ்சய் குமார்.
ஐயையோ... நமக்கு இப்படி அனுபவம் எல்லாம் வேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன்.

