
'எனக்கு இரு நண்பர்கள்; ஒருவர், சூரிய அஸ்தமனத்தை பார்த்ததில்லை; இன்னொருவர், சூரிய உதயத்தை பார்த்ததில்லை. அஸ்தமனத்தைப் பார்க்காதவர் பெயர், கண்ணதாசன்; உதயத்தைப் பார்க்காதவர் பெயர், சந்திரபாபு...' - என்பார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
சந்திரபாபுவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நண்பர்கள் ஆகக் காரணம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான்.
கடந்த, 1945 - 46களில், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ஆவதற்கு முன், கோயம்புத்தூரில், எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்ற இசை அமைப்பாளரிடம், மாதம், 15 ரூபாய் சம்பளத்துக்கு, எடுபிடி வேலைகள் செய்து வந்தார். சினிமாவில், எந்தத் துறையிலாவது ஏதாவது சிறு வாய்ப்பு கிடைக்காதா எனத் தேடி அலைந்த சந்திரபாபு, சுப்பையா நாயுடுவிடம் பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டு வந்தார்.
இப்படி வாய்ப்பு கேட்டு வருவோருக்கு, 'வாய்ஸ் டெஸ்ட்' எடுக்கும் வேலை, எம்.எஸ்.வி.,க்கு!
சந்திரபாபு - எம்.எஸ்.வி., இருவரின் முதல் சந்திப்பு நிகழ்ந்ததும் அப்போது தான்.
எம்.எஸ்.வி.,யைக் கூப்பிட்டு, 'இந்தப் பையன் பாடுறதுக்கு வாய்ப்புக் கேட்டு வந்திருக்கான்; இவனுக்கு, 'வாய்ஸ் டெஸ்ட்' எடுப்பா...' என, சொல்லி அனுப்பினார், சுப்பையா நாயுடு. சந்திரபாபுவை பாடச் சொன்னார், எம்.எஸ்.வி.,
தனக்கு தெரிந்த வகையில் பாடிக் காட்டினார், சந்திரபாபு. இலங்கையில் சில ஆண்டுகள் இருந்ததால், அவரது தமிழில், கொஞ்சம் சிங்கள வாடையும் கலந்திருந்தது. அதனால், சுப்பையா நாயுடுவிடம், 'இவர் எங்க பாடினாரு... பாட்டை டயலாக்கா இல்ல பேசினாரு...' என, எம்.எஸ்.வி., தமாஷாக சொல்ல, சந்திரபாபுவுக்கு வாய்ப்புக்கிட்டாமல் போனது.
பல ஆண்டுகளுக்குப் பின், சந்திரபாபு நடிகராகி, எம்.எஸ்.வி.,யும் இசையமைப்பாளராகி, இருவரும் ஒன்றாக வேலை செய்யும் சந்தர்ப்பமும் அமைந்தது. குலேபகாவலி படத்துக்கு, விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையமைப்பில், சந்திரபாபு பாடும் பாடல் ஒன்று, பதிவு செய்யப்பட இருந்தது.
இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா, எம்.எஸ்.வி.,யிடம், 'சந்திரபாபுவுக்கு பாடலை வாசிச்சுக் காட்டுங்க...' எனக் கூற, ஹார்மோனியம் வாசித்தபடியே பாடிக் காட்டினார், எம்.எஸ்.வி.,
மவுனமாக அதைக் கேட்ட சந்திரபாபு, 'என்ன மெட்டு இது... இவருக்கு மெட்டே போடத் தெரியல. டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் உள்ள பாட்டு இது... இந்த மெட்டுக்கு எப்படி என்னால் டான்ஸ் ஆட முடியும்...' என, ராமண்ணாவிடம் கோபமாகக் கூறினார், சந்திரபாபு.
அன்று நடந்த சம்பவத்தை மனதில் வைத்துத் தான், சந்திரபாபு இப்படிப் பேசுகிறார் என, எம்.எஸ்.வி.,க்கு புரிந்தது. உடனே, தன் இடத்தில் இருந்து எழுந்தவர், ஆர்கெஸ்ட்ராவினரிடம் அப்பாடலை வாசிக்கச் சொல்லி, பாடலுக்கேற்ப நடனம் ஆடத் துவங்கினார், எம்.எஸ்.வி.,
நடிக்கும் ஆசையில், வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்று, சினிமாவுக்கு வந்தவர், எம்.எஸ்.வி., அதன் பின் தான் இசையமைப்பாளரானார்.
எம்.எஸ்.வி.,யின் நடனத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போன சந்திரபாபு, தன் கோபத்தை மறந்து, அவரை கட்டிப் பிடித்து, பாராட்டினார். அன்று முதல், இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.
தான் நடிக்கும், ஆனால், எம்.எஸ்.வி., இசையமைக்காத சில படங்களில், தனக்கென ஒதுக்கப்படும் பாடலை, எம்.எஸ்.வி., தான் இசையமைக்க வேண்டும் என, தயாரிப்பாளர்களிடம் சண்டை போடும் அளவுக்கு, அவர் மீது பாசம் வைத்திருந்தார், சந்திரபாபு.
கடந்த, 1960ல், கண்ணதாசனின் சொந்தப் படமான, கவலை இல்லாத மனிதன் படத்தில், சந்திரபாபுவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யும்படி கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டார், எம்.எஸ்.வி.,
தம் நண்பரின் சிபாரிசால், சந்திரபாபுவை ஒப்பந்தம் செய்தார், கண்ணதாசன். சகோதரி படத்தில், ஒரு லட்சம் ரூபாய் பெற்றதால், இப்படத்துக்காக, சிவாஜி அப்போது வாங்கும் தொகையை விட, சந்திரபாபுவுக்கு அதிகம் கொடுத்தார், கண்ணதாசன் என, சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
காலையில் படப்பிடிப்பை வைத்து, சந்திரபாபுவை துயில் எழுப்ப, அவரது வீட்டுக்கே சென்று, அவரை எழுப்பி, அழைத்து வர வேண்டிய வேலையும் சேர்ந்து கொண்டது, கண்ணதாசனுக்கு!
ஒரு நாள், கண்ணதாசன் வந்து எழுப்பியபடியே இருக்க, எந்த அசைவும் இல்லை. போர்வையை விலக்கிப் பார்த்தால், வெறும் தலையணைகளை வைத்து, எங்கேயோ தப்பிச் சென்றிருந்தார், சந்திரபாபு. அதேபோல், இன்னொரு நாள், கண்ணதாசன் வந்து போர்வையை விலக்கி எழுப்ப, பாத்ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டு, அங்கே ஏற்கனவே போட்டு வைக்கப்படிருந்த ஒரு சிறிய பெஞ்சில், படுத்துத் தூங்கி விட்டார். நீண்ட நேரம் பொறுத்துப் பார்த்த கண்ணதாசன், பின், பாத்ரூமில் இருந்து, சந்திரபாபுவை வெளிக்கொண்டு வருவதற்குள் பெரும்பாடுபட்டு விட்டார்.
ஒரு வழியாகப் படம் முடிந்து வெளிவந்து, பெரும் தோல்வியைத் தழுவி, கண்ணதாசனை பெருங்கவலைக்குள் தள்ளியது, கவலை இல்லாத மனிதன் படம்!
தன் சுயசரிதையில், 'தன் குணத்தாலேயே தன்னைக் கெடுத்துக் கொண்ட சந்திரபாபு, என் படத்தையும் கெடுத்து விட்டார்...' என்று கூறியுள்ளார், கண்ணதாசன்.
தன்னைப் பற்றி கண்ணதாசன், இப்படிக் குறிப்பிட்டதும், 'பிலிமாலயா' பத்திரிகையில் தன்னிலை விளக்கம் எழுதினார், சந்திரபாபு. அதற்கு, பதிலடி கொடுத்தார் கண்ணதாசன்.
இறுதியில், 'கண்ணாசனின் தமிழுக்கு நான் அடிமை; இந்த அற்புதத் தமிழை, திட்டித் தீர்க்க பயன்படுத்துகிறார், அவர். அந்தத் தமிழ், இந்த மீனவனுக்கும் சொந்தமப்பா; நானும் திட்ட முடியும்.
'உணர்ச்சிகளுக்கிடையே போராடும் உன் மேல், களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. நீ திட்டியபடியே இரு; நான் கேட்டபடியே இருக்கிறேன். இந்த பாபுவின் கதை, ஒரு நாள் முடியும். அன்று, எனக்காக இரண்டு வரிகள் பாடு; என் ஆத்மா சாந்தியடையும்...' என்று எழுதி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சந்திரபாபு.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.
- முகில்

