
'பாசிட்டீவ்' பலனை மட்டும் சொல்லுங்களேன்!
'டிவி' சீரியல்கள் மூலம், பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதைப் போல், தற்போது, ஜோதிடம் மற்றும் ராசி பலன் நிகழ்ச்சி, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக மாணவ, மாணவியரை அடிமைப்படுத்தி வருகிறது.
சமீபத்தில், என் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்த போது, அவன் மகன், சிகப்பு கலர் பேனா வாங்கித்தரச் சொல்லி, அடம் பிடித்துக் கொண்டிருந்தான். நண்பனிடம் இதுபற்றி கேட்ட போது, 'இன்றைய ராசிபலனில், இவனது ராசிக்கு, சிவப்புக்கலர், அதிர்ஷ்டமானதுன்னு, 'டிவி'யில் ஜோதிடர் சொல்ல, அதனால், சிவப்புக்கலர் பேனா கேட்டு அடம்பிடிக்கிறான்...' என்றவர், 'தினமும், 'இன்றைய ராசிபலன்' பார்க்கிறான்; 'இன்று நல்ல நாள்; போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்...' என்று நல்ல பலன் சொன்னால், அன்று உற்சாகமாகி விடுகிறான். 'இன்று கவனமாக இருக்க வேண்டும்; வீண் வம்பு வந்து சேரும். செயல், தடுமாற்றம், தோல்வி ஏற்படும்...' என்று பலன் சொன்னால், உற்சாகம் இழந்து, முக வாட்டத்துடன், 'அப்செட்' ஆகி விடுகிறான்...' என்று கூறினான்.
அதைக்கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
ஜோதிடர்களே... 'இன்று கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்; தேர்வில் வெற்றி கிடைக்கும்; போட்டி, பந்தயங்களில் வெற்றியடைவீர்கள், என்று பொய்யான, ஆனால் சுபமான பலன் சொல்லி, மாணவ, மாணவியருக்கு உற்சாக டானிக்கை கொடுங்கள். நல்ல விஷயத்திற்காக பொய் சொல்லுவது தவறில்லை. இல்லையேல், மாணவ - மாணவியருக்கான ஜோதிட பலன்களை சொல்லாமல் விட்டு விடுங்கள்; புண்ணியமாக போகும்!
— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
எந்த தொழிலும் கேவலமல்ல!
சில தினங்களுக்கு முன், கோவை வ.உ.சிதம்பரனார் பூங்காவிற்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். பூங்காவின் நுழைவு வாயில் அருகே, சாக்ஸ் விற்றுக் கொண்டிருந்தார், என் நண்பர்.
அதைப் பார்த்ததும், பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்த நண்பர், வேலையை விட்டு நின்று, சாக்ஸ் விற்கும் தொழிலில் இறங்கி விட்டாரோ என நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவர், கூடுதல் வருமானத்திற்காக, சாக்ஸ் விற்பனை செய்து வருவதாகவும், மொத்த விலையில் வாங்கி, சிறிய லாபத்தில் விற்பனை செய்வதால், கூடுதல் வருமானம் கிடைப்பதாகவும், யாரிடமும் கடன் வாங்காமல், பிள்ளைகளை உயர் கல்வி படிக்க வைப்பதாகவும் சொன்னார்.
எந்த தொழிலும் கேவலமல்ல என்பதை உணர வைத்த நண்பரை வாழ்த்தி, பாராட்டினேன்.
— எஸ்.டேனியல் ஜூலியட், கோவை.
வித்தியாசமான பெண்கள்!
கிராமத்தில் உள்ள என் அக்கா வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு, தெருமுனையில் பெண்கள் கூட்டம் ஒன்று நடந்தது. அதற்கு என்னையும் அழைத்து சென்றாள், அக்கா.
அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து, நகைச்சுவையுடன் பேசினர். அப்போது, ஒரு பெண் எழுந்து, 'நம்ம வில்ட்டி இப்போது ரொம்ப கெட்டுப் போயிட்டா... மேலத்தெரு கருப்பனோட மட்டுமில்ல, கீழத்தெரு செவளையோடும் சுத்துறா... கர்ப்பமாக இருப்பாளோன்னு சந்தேகமாக இருக்கு...' என்றார்.
அனைவரும், 'கப்சிப்' என ஆகி, 'யார் அவள்?' என்று கேட்டனர். பேசிய பெண்ணோ, அருகில் படுத்திருந்த ஒரு நாயை சுட்டிக்காட்ட, குபீரென எழுந்த சிரிப்பலையில், எனக்கு வயிறே வலித்து விட்டது.
இப்படி பொழுதுபோக்கும் பெண்கள் குறித்து அக்காவிடம் கேட்டேன். 'காடு, கழனின்னும், நகரத்து கடைகள்ல வெங்காயம், பூண்டு புடைப்பது, வீட்டு வேலைன்னு நாள் முழுவதும் உட்கார நேரமில்லாம உழைக்கிற பெண்கள், விடுமுறை நாள்ல இப்படி கூடி நகைச்சுவையாக பேசி, தங்களோட கவலைகள மறப்பர்...' என்றாள் அக்கா.
அடுத்தவர் குடும்பத்தை எப்படி கெடுப்பது என்பதை கற்றுத் தரும், 'டிவி' சீரியல்களே கதி என்று இருக்காமல், வேலை செய்து வருமானம் ஈட்டியும், மனதை லேசாக வைத்துக் கொள்ள நகைச்சுவை குழுவை ஏற்படுத்தி, தங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அப்பெண்களை நினைத்து ஆச்சரியப் பட்டேன்.
— மீனா குமரவேல், ராஜபாளையம்.

