PUBLISHED ON : டிச 17, 2017

நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்; கெமிக்கல் இண்டஸ்ட்ரி ஒன்று நடத்தி வருகிறார். தென் மாவட்டக்காரர்... கொஞ்சம், 'குஷால்' பேர்வழி!
அவரது மேஜைக் கண்ணாடியின் கீழ், 'நோட்டீஸ் டு காலர்ஸ்' - தன்னைப் பார்க்க வருவோருக்கு, தரவாரியாக, எவ்வளவு நேரம் ஒதுக்குவார் என்பதை சூசகமாகத் தெரிவித்து, ஒரு சீட்டு வைத்துள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளவை மிகவும், 'இன்ட்ரஸ்டிங்' ஆக இருந்தது...
அது:
* நட்பு முறையில் பார்க்க வருவோருக்கு, 10 நிமிடம்.
* சேல்ஸ்மேன்களுக்கு அரை செகண்டு.
* லைப் இன்சூரன்ஸ் ஏஜன்டுகளுக்கு, 15 செகண்டு.
* ஓசி சாம்பிளுடன் வரும் பிராந்தி, விஸ்கி விற்பனையாளர்களுக்கு, இரண்டு மணி நேரம்.
* விருந்துக்கு அழைக்க வரும் நண்பருக்கு, இரண்டு மணி நேரம்.
* கிரிக்கெட் பற்றி பேச வரும் நண்பருக்கு, பகல் முழுதும்!
* 'பில்லை நான் குடுக்கிறேன்' எனும் நண்பர்களுக்கு, நாள் முழுக்க!
*வாடிக்கையாளர்களுக்கு, எட்டு மணி நேரம்.
* மனைவிக்கு, 'நோ டைம்!'
* 'கேர்ள் பிரெண்ட்ஸ்'களுக்கு இரவு முழுக்க!
* பணம் கொழுத்த, 80 வயதுக்கு மேலுள்ள உறவினர்களுக்கு எந்த நேரமானாலும்!
* வேலை கேட்டு வரும் உறவினருக்கு, மூன்று செகண்டு!
* வருமான வரித் துறையினர் மற்றும் 'பெண்டிங் பில்' வசூல் செய்ய வருவோருக்கு நாள் முழுவதும்... ஆனால், நாளை... (இன்று ரொக்கம், நாளை கடன் என்பது போல்!)
— இது எப்படி இருக்கு!
மயிலின் அகவலில், ஸட்ஜமும் (ஸ), காளையின் ஹூங்காரத்தில், ரிஷபமும் (ரி), ஆட்டின் குரலில், காந்தாரமும் (க), கொக்கினது சத்தத்தில், மத்தியமும் (ம), குயிலின் குரலில், பஞ்சமமும் (ப), குதிரையின் கனைப்பில், தைவதமும் (த), யானையின் பிளிறலில், நிஷாதமும் (நி) தோன்றியது தான், 'ஸரிகமபதநி' என்றார், குப்பண்ணா. சரிதானா என, 'வெரிபை' செய்ய, தோதான ஆள் கிடைக்கவில்லை.
மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரில், மாநாடு ஒன்று நடந்தது; அதில், சர்.சி.வி.ராமனும் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் ஒருவர் பேசும் போது, 'இந்த நாட்டில், இனிமேல் எவரையும் பட்டினியாலோ, பசியாலோ இறக்க விட மாட்டோம்...' என்று முழங்கினார்.
அவருக்குப் பின் பேசிய டாக்டர் ஒருவர், 'இனி, நாங்கள் நோய் நொடியால் எவரையும் இறக்க விட மாட்டோம்...' என்று கர்ஜித்தார்.
அடுத்துப் பேச எழுந்த சர்.சி.வி.ராமன், 'எவரையும் பசி, பட்டினியால் சாக விட மாட்டோம் என்கிறார், அமைச்சர். டாக்டரோ, யாரையும் நோயால் சாக விடமாட்டோம் என்கிறார். இவர்கள் இப்படிச் செய்தால், பிறகு நாம் எப்படித் தான் சாவதாம்?' எனக் கேட்டதும், 'குபீர்' சிரிப்பலை எழுந்தது!
ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து: மெட்ராஸ் என்ற பெயரை மாற்றி, 'சென்னை' என்று வைத்தது தவறு; இது, மோசமான பெயர் எண் வரக் கூடியது. இதனால், வெயில் மற்றும் மழை எதுவாக இருந்தாலும், அதிகப்படியாகத் தான் இருக்கும்.
அதே போன்று, பம்பாய் என்று இருந்தவரை அழகான, - அமைதியான நகரமாக இருந்தது. மும்பை என்பது நல்ல எண் உள்ள பெயர் அல்ல; அந்தப் பெயரை வைத்ததும் தான், அங்கே குண்டு வெடிப்பும், மதக் கலவரமும் உண்டானது. மீண்டும் மெட்ராஸ் என்றே பெயர் மாற்றினால், ஊர் உருப்படுவது உறுதி.
— கேடு கெட்ட அரசியல்வாதிகள் இந்த நாட்டை ஆளும் வரை, எதை மாற்றி என்ன பயன் என்கிறீர்களா!
சென்ற நுாற்றாண்டு வரை, நம்மூரில் பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுால்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக் காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில் ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள், ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில், ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை. இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.
குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள், காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும் பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.
மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால், பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க, 10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்' உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு வந்தது, ஆங்கில அரசாங்கம். இதுவே எவ்வளவு கொடுமை!
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக் கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர், ஆண்கள்.
இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு, 1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர். அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப் பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள் விதவைகள். இதில், வயதான விதவைகளைச் சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட கொடுமை இது!
இதில்...
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது - 1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!
பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும் இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும் பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால், தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன் திருமணம் செய்து கொள்ள முடியும். பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண் மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன், அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.
ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர் என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின், உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன் இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர், பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்... கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை.
