தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் பிரபலமான, 'டிவி' அறிவிப்பாளராக இருந்தவர், மான்ட்டி ஹால். ஆண்டுக்கு, குறைந்தபட்சம் ஐம்பது தர்ம நிகழ்ச்சிகளில் பங்கு ஏற்கும் மான்ட்டி, இதுவரை, 500 கோடி ரூபாய் வரை, தர்ம காரியங்களுக்கு வசூல் செய்ய உதவியிருக்கிறார்.

இவர், கூட்டங்களில் பேசும் போது, பிறருக்கு உதவி செய்வது பற்றி, மனம் நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சியை, அடிக்கடி குறிப்பிடுவார். இதோ அந்நிகழ்ச்சி...

அது, 1942ம் ஆண்டு... மாகிஸ் ப்ரீட் என்பவர், ரெடிமேட் சட்டைகள் தைக்கும் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். ஒருநாள், அலுவலகம் வந்த மாகிஸ், எதிர் கடையின் வாசலை ஒரு இளைஞன் தேய்த்து, சுத்தம் செய்வதை பார்த்தார். அவனை கூப்பிட்டு விசாரித்த போது, அந்த இளைஞன், அவர் வீட்டிற்கு இறைச்சி சப்ளை செய்பவரின் மகன் என்பதை அறிந்தார்.

அந்த இளைஞனின் தந்தைக்கு போன் போட்டு, 'உங்கள் மகன் எதிர் கடையின் வாசலை சுத்தம் செய்வதை பார்த்தேன்; புத்திசாலியாக தெரியும் அவன் ஏன், இந்த மாதிரி வேலை செய்ய வேண்டும்...' என்று கேட்டார்.

கல்லுாரியில் சேர்வதற்காக, இரண்டு ஆண்டுகள் வேலை செய்து, பணம் சேர்த்து, அவன் கல்லுாரியில் சேர்ந்தான் என்றும், பணம் தீர்ந்து விட்டதால், ஒன்றரை ஆண்டுக்கும் மேல் கல்லுாரியில் படிக்க முடியவில்லை என்று சொன்னார், அவன் தந்தை.

'நாளைக்கு உங்கள் மகனை என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்...' என்றார், மாகிஸ்.

மறுநாள், மாக்ஸை சந்தித்தான் அந்த, 20 வயது இளைஞன்.

'கல்லுாரியில் திரும்ப சேர்ந்து படிக்கணுமா?'

'ஆமாம், சார்!'

'சரி, நான் உன்னை கல்லுாரியிலே சேர்க்கிறேன்; உனக்கு எவ்வளவு பணம் வேணும்... பாடப்புத்தகங்கள், கல்லுாரி கட்டணம் எல்லாம் சொல்லு...' என்றார்.

இளைஞனின் முகத்தில் மகிழ்ச்சி... என்ன நடக்கிறது என்றே அவனுக்கு புரியவில்லை. அவருக்கு நன்றி கூறி, நாளை வருவதாக சொல்லி கிளம்பினான்.

அடுத்த நாள், அந்த இளைஞன் கொடுத்த லிஸ்ட்டை கவனமாக பார்த்த மாக்ஸ், 'ஏன் தம்பி... உன் செலவுக்கு என்று எதுவும் வேண்டாமா... சாப்பாடு, டிரஸ், கைச்செலவுக்கு பணம் வேண்டாமா... அதையெல்லாம் சேர்த்து போட்டு கூட்டு...' என்றார்.

மொத்த தொகைக்கு, 'செக்' எழுதினார். 'தம்பி... உன்கிட்டே இதை கொடுப்பதற்கு முன், சில நிபந்தனைகள் இருக்கு...' என்றார்.

'சொல்லுங்க சார்...'

'முதல் நிபந்தனை: இந்தப் பணம் யார்கிட்டேயிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியக் கூடாது. இரண்டாவது:- கல்லுாரிக்கு போய் நன்றாக படிக்கணும், பிளேபாய் மாதிரி சுற்றக் கூடாது. மூன்றாவது: - இது கடன் தான்; நீ சம்பாதிக்க ஆரம்பித்ததும், உன்னால் முடியும் போது திருப்பித் தர வேண்டும். கடைசியாக, உன் வாழ்க்கையிலே இதே மாதிரி உதவியை, யாராவது ஒருத்தருக்காவது செய்யணும்...' என்றார்.

'தேங்க்யூ சார், நீங்க சொல்றபடி நடந்து கொள்வேன்...' என்றான் இளைஞன்.

அவன் சொன்னபடியே நன்றாக படித்து, கல்லுாரி மாணவர்களின் தலைவனாக ஆனான். மாதம் ஒருமுறை மாகிஸை வந்து பார்த்து, வகுப்பில், நல்ல மார்க் வாங்கியிருப்பதையும் தெரிவித்தான். மூன்று ஆண்டு படிப்பிற்கு மொத்தம், 990 டாலர்கள் (ஐம்பதாயிரம் ரூபாய்) கொடுத்திருந்தார், மாகிஸ்.

படிப்பு முடிந்து வேலைக்குப் போனதும், முதல் ஆண்டு, நுாறு டாலர்; இரண்டாம் ஆண்டு, நுாறு டாலர்; மீதி, 790 டாலர்களை மூன்றாவது ஆண்டு மொத்தமாகக் கொடுத்து விட்டான், இளைஞன்.

தன் வாழ்நாள் முழுவதும், மாகிஸ் செய்த உதவியை அவன் மறக்கவில்லை. அவர் நிபந்தனையின்படி பல வசதியற்ற இளைஞர்களுக்கு, கல்லுாரியில் படிக்க பண உதவி செய்தான்.

ஆனால், அவரது முதல் நிபந்தனையை மட்டும் அதாவது, 'யார் உதவி செய்தது என்பதை வெளியே சொல்லக் கூடாது...' என்ற நிபந்தனையை மட்டும், 30 ஆண்டுகளுக்கு மேல் அவனால் காப்பாற்ற முடியவில்லை. இந்நிகழ்ச்சி, மற்றவர்களுக்குத் தெரிய வந்தால், அவர்களில் ஒரு சிலருக்காவது, இது போன்ற இளைஞர்களுக்கு உதவி செய்ய துாண்டு கோளாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில் மாகிஸ் பெயரை வெளியிட்டார், அந்த இளைஞர்.

இந்நிகழ்ச்சியை அடிக்கடி நான் சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு... உதவி பெற்ற அந்த இளைஞன், நான் தான்... இறைச்சி கடைக்காரரின் மகன், என்பாராம்!

- ஆங்கில ஏடு ஒன்றில் வெளியான கட்டுரையை, உ.ஆ., உதவியுடன் படித்தது!

வி.வெங்கடேசன் என்ற அன்பர், மும்பையிலிருந்து, இ- மெயில் ஒன்று அனுப்பி இருந்தார்; நீங்களும் படித்துப் பாருங்களேன்...

காட்டில் பல தவளைகள் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. இரண்டு தவளைகள் மட்டும் வழி தவறி, பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டன. அவை, எவ்வளவோ முயன்றும் மேலே வரமுடியவில்லை.

அந்த பள்ளத்தைச் சூழ்ந்து நின்ற மற்ற தவளைகள், 'ஏன் கஷ்டப்படுகிறீர்கள்... உங்களால் எப்படியும் மேலே ஏறி வர முடியாது; இறப்பதை தவிர வேற வழி இல்லை...' என்று கூறின.

முயன்று முயன்று, தோல்வி அடைந்த ஒரு தவளை, மற்ற தவளைகளின் சொல் கேட்டு, முயற்சியை நிறுத்தியது. இன்னும் கீழே பள்ளத்தில், பாதாளத்தில் விழுந்து, இறந்தது.

விடாது ரொம்ப நேரம் முயற்சி செய்த இரண்டாவது தவளை, கஷ்டப்பட்டு மேலே ஏறி விட்டது.

'முடியாது என்று இவ்வளவு பேர் சொன்னோமே... அது, உன் காதில் விழவில்லையா...' என்று கேட்டன,மற்ற தவளைகள்.

'எனக்கு காது செவிடு... 'மேலே வர முயற்சிக்காதே... இறந்து போவது தான் வழி' என, நீங்கள் கூறியது எனக்கு கேட்வில்லை. நீங்கள் அனைவரும் என்னை, 'என்கரேஜ்' செய்வதாக நினைத்து, மீண்டும் மீண்டும் முயற்சி செய்து மேலே வந்தேன்...' என்றது அந்த தவளை.

'வாழ்வா... சாவா...' இந்த கேள்விக்கு தேவையான பதில், நம் எண்ணங்களில் தான் உள்ளது. ஒருவர் கஷ்டத்தில் துவண்டு இருக்கும்போது, உற்சாகப்படுத்தி, 'என்கரேஜ்' பண்ணி, ஓரிரு வார்த்தைகள் சொன்னால், அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். நம்பிக்கையை அழிக்கும் வார்த்தைகள் - அவர்களை கொன்று விடும்.

நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை மற்றவர்களுக்குக் கொடுங்கள்!

உங்கள் மனதில் என்ன செய்ய வேண்டும், என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை, உங்களால் செய்ய முடியும்; உங்களால் முடியாது என்று மற்றவர்கள் உங்களைப் பற்றி எண்ண வைக்காதீர்கள்!

வயது அதிகமாவதால், நீங்கள் சிரிப்பதை நிறுத்துவதில்லை; சிரிப்பதை நிறுத்துவதால், உங்களுக்கு வயது ஆகிறது.

‑— 'இவனால் முடியாது, தோற்று விடுவான்; இத்தோடு ஓய்ந்தான்...' என, 'நெகட்டிவ்' ஆக எண்ணுபவர்கள், சிந்திப்பவர்கள் மேற்சொன்னவற்றை பற்றி, இனியாவது சிந்திப்பார்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us