PUBLISHED ON : ஏப் 08, 2018

வி.தேவி, சென்னை: இன்றைய பெண்களிடம் இருக்க வேண்டியது...
கல்வி அறிவு மட்டுமல்ல; அரசியல் மற்றும் பொது அறிவுடன், நாட்டு நடப்பையும் அறிந்திருப்பது மிக மிக அவசியம். 90 சதவீத பெண்கள், கல்வியில் சிறந்து விளங்கினாலும், சினிமா தவிர வேறு ஒன்றும் தெரியாமல் இருக்கின்றனரே!
* ஜி.சண்முகம், பண்ருட்டி: மனசாட்சிப்படி நடக்க வேண்டும் என, அடிக்கடி வற்புறுத்துகிறீர்களே... ஏன்?
அது, தவறு செய்ய வழி காட்டாது. மனசாட்சியை மறந்து விட்டவனிடம் ஒழுக்கம் மற்றும் நேர்மை இராது; நற்குணங்கள் அடியோடு ஒழிந்து போகும். இவை எல்லாம் இல்லாமல் வாழ்வது வாழ்க்கையா?
* மு.ரவி, அருப்புக்கோட்டை: தன்னம்பிக்கை அதிகம் காணப்படுவது ஆண்களிடமா, பெண்களிடமா?
சந்தேகமே இல்லாமல் பெண்களிடம் தான்! கணவனை இழந்த பின், எத்தனை பெண்கள், சுய காலில் நின்று, குடும்பத்தை கரை சேர்க்கின்றனர். மொடாக் குடியனாக, வீட்டுச் செலவுக்கு காசு தராத கணவர்களை ஓரம் கட்டி, தன்னம்பிக்கையுடன் செயல்படும் தாய்மார்கள் ஏராளம். பொறுப்பில்லாமல் பெற்று போட்டு, சீட்டு, ரேஸ் என்று அலையும் தகப்பனை, 'இக்னோர்' செய்து, உடன் பிறந்தோரை நல்ல நிலைக்கு கொண்டு வர, தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனரே!
ஆர்.அனு, சென்னை: எள்ளுப் பேரன் என்கிறார்களே... அப்படி என்றால் என்ன?
உறவு சிறுத்துப் போவதை, தானியங்களை உதாரணம் காட்டி பெயர் வைத்தனர், நம் மூதாதையர். பிள்ளையின் மகன், பேரன்; அவன் பிள்ளை, கொள்ளு பேரன்; பேரனை விட துார உறவுமுறையுடையவன் கொள்ளுப் பேரனுடைய பிள்ளை, எள்ளுப் பேரன். கொள்ளை விட, எள் சிறியது; எள்ளுக்கு அடுத்த பேரன்... தெரியவில்லை.
டி.ராஜேந்திரன், கோவை: உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசும் நண்பர்களை ஒதுக்குவது எப்படி?
தவிர்க்கக் கூடியவர்களாக இருந்தால், 'உன் சங்காத்தமே வேண்டாம்' என, ஒதுங்கி விடுங்கள். முடியாதவர்கள் என்றாலும் சங்கடம் ஏதும் இல்லை; அவர்களது குணந்தான் உங்களுக்கு தெரிந்து விட்டதே!
எம்.ராமசாமி, மதுரை: என்னுடைய கடமையாக எண்ணி, நல்ல காரியங்கள் செய்ய நினைக்கிறேன்; என்ன செய்யலாம்?
சுயநலமிகளே நிறைந்துள்ள உலகத்தில், உங்கள் நல்லெண்ணத்திற்கு பாராட்டுக்கள்! மனிதராகப் பிறந்துள்ள ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டியது, பிறரின் துக்கங்களைத் துடைத்துக் கொண்டே இருப்பதாகும். இன்றே செயலில் இறங்குங்கள்!
வி.அருண், விருதுநகர்: நிரந்தரமான கொள்கை உடையோரை அரசியலில் காண முடிவதில்லையே...
ஏன் இல்லாமல்... எந்த கட்சி ஆட்சி அமைப்பது போல் இருந்தாலும், அதில் தம்மை இணைத்துக் கொள்வோர் இருக்கின்றனரே; அவர்களது கொள்கை நிரந்தரமானது தானே!
