PUBLISHED ON : ஏப் 08, 2018

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் பகுதியை சேர்ந்தவர், அமானுல்லா, வயது: 53, சூளகிரி தாலுகாவில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டி.பார்ம் முடித்துள்ள இவர், அத்திமுகம் பகுதியில், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை, 'இலவச கிராம மருத்துவமனை' என்ற பெயரில், ஆறு ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்.
அத்துடன், பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து, எம்.டி., - எம்.பி.பி.எஸ்., டாக்டர்களை வாரந்தோறும் வரவழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தில், கடந்த, இரு ஆண்டுகளாக, வாரந்தோறும் சனிக்கிழமை அன்று, மருத்துவ சேவையை செய்து வருகிறார். இவ்வூரில், ஒன்றரை ஆண்டுக்கு முன், ஏழை, எளிய மக்கள் விபத்து மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவங்கினார். இதற்காக, உத்தனப்பள்ளியை சேர்ந்த லட்சுமிகாந்த் என்பவரை டிரைவராக அமர்த்தியுள்ளார்.
இது குறித்து அமானுல்லா கூறியதாவது:
ஏழை மக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பது தெரிவதில்லை. இந்நோய்கள் இல்லாமல் எல்லாரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். உத்தனப்பள்ளியில் மட்டும் இதுவரை, 52 ஆயிரம் பேருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கியுள்ளோம். அதேபோல், அலேசீபம் பகுதியில், ஆறு ஆண்டுகளில், நான்கு லட்சம் மக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
வாரந்தோறும், பெங்களூரு அம்பேத்கர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், இரண்டு நாட்கள் இங்கு வருவதால், இலவசமாக சிகிச்சை அளிக்க முடிகிறது. உத்தனப்பள்ளியில், இரண்டு ஆண்டுகளில், 382 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 34 பேருக்கு, கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்.
அத்திமுகம் பகுதியில், 2,500க்கும் மேற்பட்டோரை, பெங்களூரு அழைத்து சென்று, இலவச அறுவை சிகிச்சை செய்ய வைத்துள்ளோம். உத்தனப்பள்ளியில் நாங்கள் ஆரம்பித்த இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம், 600க்கும் மேற்பட்ட மக்கள், உயிர் பிழைத்துள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அதிகளவு மக்கள், வாரந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதை, என் சொந்த செலவில் தான் செய்து வருகிறேன்.
‑- இவ்வாறு அவர் கூறினார்.
இவருடன் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் எண்: 93422 50876.
ஆ.மாரிமுத்து
