தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/10 ரூபாய் டாக்டர்!

10 ரூபாய் டாக்டர்!

10 ரூபாய் டாக்டர்!


PUBLISHED ON : ஏப் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது, ஒரு பழைய ஓட்டு வீடு; வீட்டின் இரு புறமும் இருந்த திண்ணையில் நிறைய பேர் அமர்ந்திருந்தனர். சிலர் கைகளில் குழந்தையோடு நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் அந்த இடம் பரபரப்பானது; அனைவரும் எழுந்து, அந்த மனிதரை மிகுந்த மரியாதையோடு வணங்கினர். அவர், டாக்டர் சுப்பைய்யா!

சுப்பைய்யா பிறந்து, வளர்ந்தது எல்லாம் இந்த ஓட்டு வீட்டில் தான்; மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, பணி ஓய்வும் பெற்று விட்டார். ஆரம்பத்தில், அவருடைய குடும்பத்தினர் அந்த வீட்டில் தான் இருந்தனர். பின், நாளடைவில், நோயாளிகளின் வருகை அதிகரிக்க, இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், வேறொரு வீட்டை வாங்கி, அந்த வீட்டில் தன் குடும்பத்தினரை குடியேற்றினார்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தன் மருத்துவ பணியை தொடர்ந்தார். ஆரம்பத்தில் வைத்தியம் பார்க்க, கால் அணா வாங்கினார். பின், 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என, 50 ஆண்டுகள் கடந்து, தற்போது, 10 ரூபாய் வாங்குகிறார். தன்னை நாடி வரும் மெடிக்கல் ரெப்கள் கொடுக்கும் சாம்பிள் மாத்திரை, டானிக் போன்றவற்றை ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்து விடுவார். இதுவரை யாரிடமும், 10 ரூபாய்க்கு மேல் வாங்கியதில்லை; சிலருக்கு அதைக்கூட வாங்காமல் வைத்தியம் பார்த்திருக்கிறார்.

அவருடன் மருத்துவக் கல்லுாரியில் படித்தவர், டாக்டர் விஜயகுமார்; இன்று, பெரும் கோடீஸ்வரர். அதே ஊரில், மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையை நடத்தி வருகிறார். ஆடி, பி.எம்.டபிள்யு., மற்றும் ஜாகுவார் என, மூன்று கார்கள் வைத்திருக்கிறார். அவரிடம் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். ஆனால், சுப்பைய்யாவோ, இன்றும் தன் பழைய ஸ்கூட்டரில் தான் பயணிக்கிறார். இருப்பினும், விஜயகுமாருக்கு, சுப்பைய்யாவின் மீது உள்ளுக்குள் வெறுப்பு இருந்தது. காரணம், 10 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கிறேன் என்று தனக்கு வரவேண்டிய நோயாளிகளை அவர் அபகரித்துக் கொள்வதாக எண்ணினார். இதனால், சமயம் கிடைக்கும்போதெல்லாம் நன்றாக பேசுவதை போல பேசி, கேலி செய்வார்.

அப்படித்தான் ஒரு பொது நிகழ்ச்சியில் சுப்பைய்யாவை சந்தித்த விஜயகுமார், 'என்ன டாக்டர்... இன்னும் நீங்க மாறவேயில்லயே... எதுக்காக, இவ்வளவு கஷ்டப்படணும்... உங்களுக்கு இருக்கிற திறமைக்கு, இன்னைக்கு, என்னை விட பெரிய கோடீஸ்வரரா இருந்திருக்கணும்; நிறைய மருத்துவ விருதுகளை வாங்கிக் குவிச்சிருக்கணும். ஆனா, இன்னும் அந்த ஓட்டு வீட்டையும், பழைய ஸ்கூட்டரையும் கட்டிகிட்டு அழறீங்க...' என்று கேலி செய்தார்.

மென்மையாக சிரித்த சுப்பைய்யா, 'நான் படிச்சது, மக்களோட வரிப்பணத்துல... ஏழைகளுக்கு தரமான மருத்துவத்தை செய்யணும்ன்னு தான் அரசு, எனக்கு இலவசமா மருத்துவ கல்வியை கொடுத்து, என்னை மருத்துவராக்கி இருக்கு...' என்றார்.

'இப்படி எளிமையாக இருந்தா, யார் உங்கள மதிப்பாங்க?'

'மகாத்மா காந்தி கூட எளிமையாகத்தானே இருந்தாரு... இந்த உலகம் அவர மதிக்கலையா... ஏன், நம் அப்துல் கலாமும் அப்படித்தானே வாழ்ந்தார்...' என்றார்.

'அப்ப நீங்க உங்கள, காந்தி, கலாம்ன்னு சொல்றீங்க...'

'நிச்சயமா இல்ல; அவங்க நமக்கு கற்றுக் கொடுத்தத பின்பற்றி வாழ விரும்புறேன்; அவ்வளவுதான்...' என்றவர், அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், விஜயகுமாரிடமிருந்து விடைபெற்றார்.

மற்றொரு சந்திப்பிலும் இப்படித்தான், சுப்பைய்யாவிடம், 'சிறந்த மருத்துவருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு கிடைச்சிருக்கு...' என்றார், விஜயகுமார்.

'ரொம்ப மகிழ்ச்சி டாக்டர்; வாழ்த்துகள்...' என்றார், சுப்பைய்யா.

'உங்களுக்கும் விருது வேணும்ன்னா சொல்லுங்க, ஏற்பாடு பண்ணிடலாம்...'

'அதெல்லாம் வேணாம்; அதிலெல்லாம் எனக்கு ஆர்வமுமில்ல...'

'அப்ப, எனக்கு ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்களா?'

'அப்படியில்ல; என்னோட எண்ணத்தை சொன்னேன்...'

'உங்கள மாத்தவே முடியாது; ஆனா, ஒண்ணு, என்றாவது ஒருநா, வாழ்க்கையில தப்பு செய்துட்டோம்ன்னு நீங்க வருத்தப்படுவீங்க...' என்று சொல்லிச் சென்றார்.

இதுபோல ஒன்றல்ல, இரண்டல்ல, பலமுறை சுப்பைய்யாவை கேலி செய்திருக்கிறார், விஜயகுமார். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன், வழக்கமான பணியைத் தொடர்ந்தார், சுப்பைய்யா.

பொதுவாகவே, யார் என்ன சொன்னாலும் வருத்தப்பட மாட்டார் சுப்பைய்யா. அவரைப் பொறுத்தவரை அவர் எடுக்கும் முடிவு சரி என்றே நம்புவார். அவருடைய மனைவி ஜானகியும், பணம், கார் என, எதற்கும் ஆசைப்படாமல் எளிமையாகவே வாழ்ந்தார். அவர்களுடைய ஒரே மகள், அரசு பள்ளியில் படித்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறாள்.

இரவு, 10:00 மணி —

என்ன நினைத்தாரோ, தன் மனைவியை அழைத்தார், சுப்பைய்யா.

''ஜானு... உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்,'' என்றதும், ''என்னதுங்க...'' என்றாள், ஜானகி.

''ஒண்ணுமில்ல; என்னை பத்தி என்ன நினைக்கிறே?''

''இதென்ன திடீர்ன்னு இப்படியொரு கேள்வி...'' என்றவள், ''உங்கள மாதிரி மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதரை பாக்கவே முடியாது; அந்த அளவிற்கு நீங்க ரொம்ப நல்லவர்,'' என்றாள்.

''இந்த பிழைக்கத் தெரியாத டாக்டரை கல்யாணம் பண்ணிகிட்டோமேங்கிற எண்ணம், எப்போதாவது உன் மனசில தோணியிருக்கா?'' என்று கேட்டார்.

அதிர்ந்த ஜானகி,''ஏங்க... என்னெல்லாமோ பேசறீங்க...''

''இல்ல... மற்ற டாக்டர்கள் எல்லாம் லட்ச லட்சமா சம்பாதிக்கிறாங்க. ஆனா, எனக்கு பென்ஷன், 30 ஆயிரம் ரூபாய் வருது; கிளீனிக்கிலேருந்து எல்லா செலவும் போனா, மாசம், 10 ஆயிரமோ, 20 ஆயிரமோ வரும். மற்ற டாக்டர்கள் வெளிநாட்டு கார்கள வெச்சிருக்காங்க... அடிக்கடி குடும்பத்தோட பாரின் டிரிப் போறாங்க... உன்னை, நான் பார்ட்டி அது இதுன்னு எங்கேயும் கூட்டிகிட்டு போனதில்ல; எப்ப பாத்தாலும் ஸ்கூட்டரையும், நோயாளியையும் கட்டிகிட்டு அழறேன்.''

இதைக் கேட்ட ஜானகிக்கு அழுகை வந்தது.

''இதுக்கெல்லாம் ஒருநாளும் நான் ஆசைப்பட்டதில்ல; நான் மட்டுமில்லே, நம்ம பொண்ணும் தான். நீங்க கணவரா கிடைச்சது நான் செய்த பாக்கியம்,'' என்றாள்.

''அப்பாடா... இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு; ஊர்ல உள்ள டாக்டர்கள் எல்லாம் என்னை புகழற மாதிரி பேசி, கேலி செய்றாங்க. அதையெல்லாம் கேட்கறப்ப, நான் தப்பு பண்றேனோன்னு தோணுச்சு. அதான் கேட்டேன்.''

''அதையெல்லாம் காதிலேயே வாங்காதீங்க...''

''இன்னைக்கு நிம்மதியா துாங்குவேன்,'' என்று சொல்லி, தன் அறைக்கு சென்றார்.

காலை, வழக்கமாக, 5:00 மணிக்கு எழுந்து, 5:30மணிக்கு வாக்கிங் புறப்படும் டாக்டர், எழுந்திருக்காமல் இருந்தார். அசதியில் துாங்குகிறார் என்று நினைத்த ஜானகி, மணி, 7:00 ஆகியும் எழாமல் இருப்பதைப் பார்த்து, அவரை எழுப்பினாள். அவரிடம் எந்த அசைவுமில்லை. ஜானகிக்கு வியர்த்து கொட்டியது. அவள் பயந்தது போலவே, இந்த உலகத்திலிருந்து விடைபெற்று சென்று விட்டார், சுப்பைய்யா.

விஷயம் தெரிந்து, அவர் வீட்டு முன் கூடினர், மக்கள். பலர் கதறி அழுதனர்; டாக்டர் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையும், பாசமும் ஒட்டுமொத்தமாக வெளிப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒன்று கூடி பேசி, மக்கள் அஞ்சலி செலுத்த, அவர் பூதவுடலை, அவர் நேசித்த கிளீனிக்கில் வைக்க வேண்டும் என்று அவர் குடும்பத்தாரிடம் கூறினர். அவர்களின் விருப்பத்திற்கிணங்க, டாக்டரின் சடலத்தை, ஓட்டு வீட்டு கிளீனிக்கிற்கு கொண்டு சென்றனர்.

ஊர் மொத்தமும் அங்கே திரண்டது. கடைக்காரர்கள், தங்கள் கடைக்கு விடுமுறை அறிவித்தனர். டீக்கடைக்காரர்கள், டீ போட்டு, டாக்டரை பார்க்க வந்தவர்களுக்கு இலவசமாக வினியோகித்தனர். ஊரிலிருந்த மொத்த மாலைகளும் அங்கே குவிந்தன. எல்லாரும் தங்கள் அப்பா, தாத்தா இறந்தால் எப்படி சோகமாக இருப்பார்களோ அப்படி இருந்தனர். எங்கு பார்த்தாலும் சோகம், கதறல்.

மாலை, இறுதி ஊர்வலம் துவங்கியது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு, ஊர்வலமாக சென்றனர். அப்படி ஒரு இறுதி ஊர்வலம் அந்த ஊரில் இதுவரை நடந்ததில்லை. அனைத்து, 'டிவி' சேனல்களும் அங்கே திரண்டு, இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே ஏன் உலகமே வியந்து பார்த்தது.

தன் மருத்துவமனையில், தொலைக்காட்சியில், சுப்பைய்யாவின் இறுதி ஊர்வல காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார், விஜயகுமார். உடன் சில மருத்துவர்களும் இருந்தனர். அவர் மனதில், தான் சுப்பைய்யாவை, பல சந்தர்ப்பங்களில் கேலி செய்த காட்சிகள் ஓடின.

''என்ன டாக்டர், சீரியசா எதையோ யோசிக்கிற மாதிரி தெரியுது,''என்றார், ஒரு டாக்டர்.

''நாம வாழறதெல்லாம் வாழ்க்கையே இல்ல; வாழ்ந்தா, டாக்டர் சுப்பைய்யா மாதிரி வாழணும்!'' என்றார், தன்னையும் அறியாமல், டாக்டர் விஜயகுமார்.

ஆர்.வி.பதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us