தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேட்டை செய்யும் குழந்தைகளை அதட்டி, அடக்கும் பெற்றோரும் உண்டு; அடித்து, அடக்கும் அப்பா, அம்மாவும் உண்டு. இது நம்மூர் கதை.

மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குழந்தைகளை அடிப்பது, மிரட்டுவது போன்றவை சட்டப்படி குற்றம்.

ஒரு குழந்தை உதைபடுவதாக பக்கத்து வீட்டுக்காரரோ, எதிர் வீட்டுக்காரரோ அல்லது அதே குழந்தையோ போன் மூலம் போலீசுக்கு புகார் செய்தாலே போதும்... 'தப தப'வென, குறிப்பிட்ட வீட்டுக்குள் புகுந்து, குழந்தையை கொடுமைப்படுத்தும் தகப்பனையோ, தாயையோ அல்லது இருவரையுமே பிடித்துச் சென்று தண்டனை கொடுத்து விடுவர், போலீசார்.

இப்போது நான் சொல்லப் போவது, ஜெர்மன் நாட்டில் நடந்த சம்பவம்... புலம் பெயர்ந்த இலங்கை அன்பர் ஒருவர், ஜெர்மன் நாட்டில் செட்டிலாகி விட்டார். சுய தொழில் மூலம் நன்கு முன்னேறி கார், பங்களா என வசதியுடனும், செல்வாக்குடனும் திகழ்ந்து வருகிறார்.

இவருக்கு, 10 மற்றும் 8 வயதில் ஆண் - பெண் என, இரு குழந்தைகள்; அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதில், ஆண் குழந்தை செம வாலு; எப்போதும் ஏதாவது குறும்பு செய்தபடி இருப்பான்.

ஒருநாள், பையனின் குறும்பு அளவுக்கதிகமாகப் போகவே, நாலு சாத்து சாத்தி விட்டார், தந்தை. இதை, தன் நண்பனிடம் கூறியிருக்கிறான், பையன். நண்பனின் ஐடியாபடி போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டான், பையன்.

கன ஜோரான உ.பா., பார்ட்டி ஒன்றில் பையனின் தகப்பனார் கலந்து கொண்டிருந்த போது, உள்ளே புகுந்து, தகப்பனாரை கைது செய்தது, போலீஸ். தன் நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் என, பெரிய வட்டத்தின் நடுவே தான் அவமானப்பட்டு விட்டதாக கருதி, மிகுந்த மன வேதனை கொண்டார், தகப்பனார்.

ஒரு வழியாக போலீஸ் பிடியிலிருந்து தப்பி வந்தபின், பையனுடன் சுமூகமாகவே நடந்துள்ளார், நண்பர். பள்ளி விடுமுறை விட்டதும், சொந்த நாடான இலங்கைக்கு போய் வரலாமென, 'புரோகிராம்' போட்டு கிளம்பிச் சென்றிருக்கின்றனர். விமானம், கொழும்பு பண்டாரநாயகா விமான தளத்தில் இறங்கியது.

விமானத்தை விட்டு, வெளியேறி, விமான நிலைய வளாகத்திற்குள் அக்குடும்பம் வந்தது தான் தாமதம்... அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தன் மகனை, 'பொளேர் பொளேர்' என, முதுகில் சாத்தி, 'இப்ப போடுறா போலீசுக்கு போனை...' என்று கூறியபடியே தாக்கியிருக்கிறார்.

பையனின் அம்மா உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தியது, அடுத்தக் கதை.

இதைப் படிக்கும் நீங்கள், 'ஜெர்மன் நாடு போன்ற இடத்தில் நாம் வசிக்கவில்லையே...' என, சந்தோஷம் கொள்கிறீர்களா அல்லது அது போன்ற சட்டம் இங்கும் தேவை என நினைக்கிறீர்களா?

பா.ராமமூர்த்தி என்பவர் எழுதிய, 'வெற்றியடைந்த வியாபாரக் கனவுகள்' என்ற நுாலை படிக்க நேர்ந்தது; அப்புத்தகத்தில் இருந்து சுவையான பகுதி ஒன்று...

...பேலுாரில் என்னை வியப்பில் ஆழ்த்தியவர், புபேன் மித்ரா; ஏன் என்கிறீர்களா... 'பாட்டா செருப்புகளை ஒரு குடிசைத் தொழிலாக செய்கிறேன்...' என்றது தான். 'பாட்டா செருப்புகளை இவர் எப்படிச் செய்ய முடியும்... இது என்ன போர்ஜரியா, மோசடியா, வங்கி ஆட்களும் சேர்ந்து செய்யும் திருட்டு வேலையா...' என்று ஏதேதோ எண்ணினேன்.

அது, ரொம்பச் சின்ன இடம்; தோல், முடிந்த செருப்பு, அரைகுறை முடிவில் உள்ள செருப்பு இதுகளைப் போட்டுக் கொள்ள மட்டும் ஓர் அறை இருந்தது.

மற்றபடி, மரத்தடியில் ஐந்து தொழிலாளர்கள் உட்கார்ந்து, ஒருவர் வெட்ட, ஒருவர் தைக்க, ஒருவர் ஒட்ட என்று, நாள்தோறும், சராசரி நுாறு ஜோடி செருப்பு செய்கின்றனர். அதாவது, ஒரு மாதத்தில், 2,500 ஜோடி தேவை; அதிகமாக இருக்கும் போது மூன்று ஷிப்ட்டுகள் வேலை இருக்குமாம். சராசரி, 3,500 ஜோடி என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்தத் தொழிற்சாலையில், என்னை ரொம்ப அசத்திய இடம்,'பாட்டா' என்ற வளைசலான எழுத்துகளையும், ரூ51 ரூபாய், 95 காசு என்ற விலையையும், தங்க வண்ணத்தில் செருப்பின் மீது முத்திரை அடிக்கும் இயந்திரமும் தான்.

பாட்டா நிறுவனம், மித்ராவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அது. இன்னின்னது நாங்கள் செய்வோம்; இன்னின்னது நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதில், பாட்டாவின் முத்திரை இயந்திரம் உங்களுக்கு வழங்கப்படும் என்பதும் இருந்தது.

ஒப்பந்தப்படி, பாட்டா நிறுவனம் சொல்லும் கடைகளுக்கு, தேவைப்படும் எண்ணிக்கையில் செருப்புகளை இவர்களே கட்டி, பார்சல் செய்து அனுப்பி விட வேண்டும். கடைக்காரர்கள் தரும், 'பெற்றுக் கொண்டோம்' கடிதத்துடன், பாட்டா நிறுவனத்திற்கு பில்களை அனுப்பி வைத்தால், புபேன் மித்ராவுக்கு உடனே பணம் கொடுத்து விடுவர்.

மித்ராவிடம் பொருளாதார நிலை பத்தி பேசினேன். மித்ராவுக்கு, அடக்கவிலை, ஒரு ஜோடி செருப்புக்கு, 16 ரூபாய் தான் (1980ல்); அவர், அதை பாட்டாவுக்கு, 18 ரூபாய்க்கு விற்கிறார். பாட்டா நிறுவனம் என்ன விலைக்கு விற்கிறது என்பதை தான் மேலே சொல்லியாச்சே...

மித்ரா சத்தமாக சிரித்து, 'மூர்த்திஜி... நாம் இந்த செருப்புகளை விற்பனை செய்ய இறங்குவது ஓர் இனிய கனவு. இதே செருப்பை, இதில் பாதி விலைக்கு கோல்கட்டா தெருக்களில் கூவிக் கூவி விற்க முயற்சித்து, தோற்ற பின் தான், எனக்கு இந்தச் சின்ன வாய்ப்பு கிடைத்தது. ஒரு நிறுவனத்துக்கு இருக்கும் மதிப்பு, தனி மனிதனின் உழைப்புக்கு இல்லை. அவர்களுக்கு உலக அளவில் பெயர் இருக்கிறது; ஊருக்கு ஊர் கடை இருக்கிறது...' என்றார்.

ஆண்டுக்கு, 50 ஆயிரம் ஜோடி செருப்புகள் விற்கிறார், மித்ரா. 'மாதம், மூவாயிரம் ஜோடிக்குக் குறைவில்லை. பண்டிகை சமயங்களில், 10,000 ஜோடி வரை ஆர்டர் வரும்; மாதாந்திர ஆள் கூலி, 2,400 ரூபாய்; இட வாடகை, 1,500 ரூபாய்; மற்ற செலவு, 500 ரூபாய் போக, 1,600 ரூபாய் மிஞ்சும்; அது எனக்குப் போதும்!' என்றார்.

- பதினெட்டு ரூபாய் மதிப்புள்ள செருப்பு, என்ன விலைக்கு விற்கப்படுகிறது பார்த்தீங்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us