PUBLISHED ON : ஜூன் 17, 2018

லென்ஸ் மாமாவும், குப்பண்ணாவும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தேன்;
குப்பண்ணா சொன்னார்... 'நம் பாடத் திட்ட முறை, காலங்காலமாக ஒரே மாதிரி தான் இருக்கிறது... என் கொள்ளுப் பேத்தி நேத்து தான் பாட புஸ்தகங்கள் வாங்கி வந்தா... அதப் புரட்டிப் பார்த்தேன்; அத பாத்தப்புறம் தான், கேள்விகள தான் அவங்க மாத்துறது இல்ல, பதிலையாவது மாணவர்கள் மாத்தி எழுதினா என்ன எனத் தோன்றியது...' என்றார்.
'எப்படி ஓய்... உதாரணம் சொல்லுமே...' என்றார் லென்ஸ் மாமா.
'அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?'
'அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் நீர் சொல்லும்...'
'மிகப்பெரிய கண்டம் எது?'
'வாழ்வில் எத்தனையோ கண்டங்களைத் தாண்டி வந்து விட்டேன்; அதில், இந்தப் பரீட்சை தான் மிகப் பெரிய கண்டம்...'
'பருவ மழை பெய்வதற்கு நீர் கூறும் காரணங்கள்?'
'நான் எந்தக் காரணமும் கூறத் தயாராக இல்லை...'
'பிரான்சில் ஓடும் மிகப் பெரிய நதி எது?'
'விசா வரட்டும்; போய் விசாரித்து வருகிறேன்...'
'ஊசியிலைக் காடுகள் என்றால் என்ன?'
'ஊசியிலைக் காடுகள் தான்!'
'பூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது?'
'அது எங்கேயும் ஓடவில்லை; ஒரே இடத்தில் தான் இருக்கிறது...'
- குப்பண்ணா பெரிசின், 'லொள்ளு' தாங்க முடியாமல் ஓட்டம் எடுத்தேன்!
அந்த நண்பர் கம்ப்யூட்டர், 'சாப்ட்வேர்' தொடர்புடைய ஆசாமி. அமெரிக்காவில் பணிபுரியச் சென்று விட்டவர். பெற்றோர் சென்னையில்.
நண்பருக்கு மணமுடிக்க நினைத்த பெற்றோர், நல்ல களையான,- அழகான ஒரு பெண்ணை பேசி முடித்தனர். திருமணம் செய்ய, கடந்த மாதம் சென்னை வந்தார். திருமணமும் இனிதே முடிந்தது.
இரண்டு ஆண்டுகளில், அமெரிக்கா அவரை மாற்றி இருக்குமோ என நினைத்தேன்; ஆசாமி மாறவில்லை. 'டவுன் டு எர்த் பர்சனாக' - அதே மயிலாப்பூர் அம்பியாகத்தான் திரும்பி வந்தார்.
அமெரிக்காவில் வேலை கிடைத்து, இங்கிருந்து செல்லும் கம்ப்யூட்டர் தொடர்புடையவர்கள் அதிகமாகி விட்டனர். அங்கு ரெண்டு ஆண்டு இருந்து, விடுமுறைக்கு இங்கு திரும்புபவர்கள் அலட்டும் அலட்டல் தாங்க முடியாததாக இருக்கும்!
சாதாரண பள்ளிக் கூட ஆசிரியர் மகனாக இருப்பார்; இப்போதெல்லாம் இந்த உதாரணம் சொல்ல முடியாது; ஆசிரியப் பெருமக்களுக்கு நிறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கே, ஒரு வேளை மட்டுமே முழு சாப்பாடு சாப்பிட்டு இருப்பார்... கையில் காசு இருந்தாலோ,- நண்பர்கள் அழைப்பிலோ - மேக்சிமம், மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ்சில் எப்போதாவது எண்ணை தோசை சாப்பிட்டு இருப்பார்... ஆனால், கஷ்டப்பட்டு படித்து, அமெரிக்க வாய்ப்புக் கிடைத்து, அங்கே சென்று இருப்பார்.
திரும்பி வரும் போது, மினரல் வாட்டர் தவிர வேறு எதையுமே தொட மாட்டார்... 'பிளடி மெட்ராஸ் கார்ப்பரேஷன்... என்ன இது... குப்பை, கூளமுமாக ஊர்... தமிழனுக்கு, 'கல்சரே' கிடையாது...' என்பார். சொல்லப்போனால் அமெரிக்காக்காரனுக்குத் தான் கலாசாரமே கிடையாது. அமெரிக்கா என்றொரு நாடு தோன்றியே, 200 ஆண்டுகள் தான் ஆகிறது. தமிழ் கலாசாரத்தை, 'கல் தோன்றி மண் தோன்றா...' எனச் சிலர் கூறி கல், மண் தோன்றும் முன்னாலேயே தமிழ் கலாசாரம் உருவாகி விட்டது என்று கூறுவர். விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்பவர்கள் மூவாயிரம் ஆண்டு தொன்மையானது தமிழ் கலாசாரம் என்கின்றனர்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்...
நண்பருக்கு திருமணம் முடிந்து, பத்து நாட்களான பின், ஒரு மாலை வேளையில், 'கெட் டு கெதர்' வைத்தோம்... நண்பரது புது மனைவி கிடையாது... பேச்சுலர்ஸ் பார்ட்டி மாதிரி... லென்ஸ் மாமாவும் சேர்ந்து கொண்டார்.
பார்ட்டி ஆரம்பமாகி, அரை மணி சென்று இருக்கும்... 'ஏம்ப்பா பிரபு... நண்பர் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நம்ம ஊர்ல இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் படிச்சவங்கள, கப்பல் லோடுல அமெரிக்கா கூட்டிக்கிட்டுப் போறாங்களே... அங்கே உள்ள அமெரிக்கன்களுக்கு நம்ம அளவுக்கு நாலெட்ஜ் இல்லியா?' எனக் கேட்டார், லென்ஸ் மாமா.
'உண்மை தான் மாமா... நம்ம நாட்டுக்காரனுக்கு, நாலு வாட்டி ஒரு விஷயத்தைச் சொன்னா போதும்; அவன் கற்பூரமா பத்திக்குவான்... இதையே அமெரிக்காகாரனுக்கு, 40 தடவை சொன்னாலும், மூளையிலே ஏறாது. இதனாலே, நம்மூரில ஆவரேஜ் ஸ்டுடண்டா இருக்கிற பையன் கூட, அங்கே போயிட்டா, நல்ல முறையில குப்பை கொட்ட முடியும்.
'அங்க, ஈஸ்டுலயும், வெஸ்டுலயும்... அதாவது, நியூயார்க், வாஷிங்டன் போன்ற பகுதிகளிலேயும், கலிபோர்னியா மாகாணத்துலேயும் மட்டுமே, புத்திசாலி அமெரிக்கர்கள் இருக்காங்க. மத்தபடி, எல்லா இடங்கள்லேயும், நம்மை விட பத்து மடங்கு புத்திசாலித்தனத்துலே குறைஞ்சவங்களாத் தான் இருக்காங்க...' என்றார் நண்பர்.
'அது சரிப்பா... உங்கள போல அங்க இருக்கிற நம்ம பசங்களுக்கு எல்லாம் என்ன வருமானம் கிடைக்கும்? 'லைப் ஸ்டைல்' எல்லாம் எப்படி இருக்கு?' எனக் கேட்டபடியே, 'அங்கிள் ஜானியை' ஒரு மிடறு விழுங்கினார், லென்ஸ் மாமா.
'பிரெஞ்ச் பிரை' தயாரிக்க உருளைக் கிழங்கை நீள வாக்கில் வெட்டி இருப்பார்களே...அது போல பீட்ரூட், முள்ளங்கி, கேரட் எல்லாம் வெட்டப்பட்டு, பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து, எடுத்து வந்து, மாமாவிற்கு சாப்பிடக் கொடுத்தார், 'கெஸ்ட் ஹவுசின்' உதவியாளர் மணி.
'ஏம்ப்பா... இதெல்லாம் பக்கத்துல உக்காந்து இருக்கே... இந்த சாகபட்சினி, இது கிட்ட குடு...' என்று என் பக்கம் கை காட்டிய மாமா, 'எனக்கு சிக்கன் லெக் பீசை, அவன்ல வச்சு, டீப் பிரை பண்ணிக் கொண்டாப்பா...' என சொல்லி, நண்பரின் முகத்தைப் பார்த்தார்.
'ம்... சொல்லு...' என்பது, அந்தப் பார்வையின் பொருள்...
'நாலாயிரம் முதல் பத்தாயிரம் டாலர் வரை -அதாவது, மாசம், ஒரு லட்சத்து, 75 ஆயிரம் முதல், 4 லட்சத்து, 50 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். ஆனா, இதுல, 30 சதவீதம் வரி பிடிச்சுடுவாங்க. வரி கட்டாம அதையும் சேமிக்கணுமுன்னா, தவணை முறையில பணம் கட்டுற மாதிரி ஒரு வீடு வாங்கணும்... வீடு வாங்கிட்டா,- கடன் கட்டி முடிக்க, 30 ஆண்டாகும்... அங்க, இங்க அசைய முடியாது...
'இப்போ, எங்கிட்ட ஒரு கார் தான் இருக்குது... கல்யாணமாயிடுச்சா, அமெரிக்கா போனதும், என் 'ஒய்ப்'புக்காக இன்னொரு கார் வாங்கியே ஆகணும்... நம்மூர் போல, அங்கே, பஸ், ஆட்டோ ரிக் ஷா என, 'பப்ளிக் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்' அதிகம் கிடையாது. அதனால, என், 'ஒய்ப்'புக்காக இன்னொரு கார் வாங்கியே ஆகணும். இது ஆடம்பரம் இல்லே; அவசியம். ஆச்சா... அடுத்து குழந்தை, குட்டி பொறந்துட்டா, வீட்டோட வெளியே போக, ஒரு வேன் வாங்கியே ஆகணும்...
'எல்லாத்துக்கும் ரெடியாக கடன் குடுக்குறான்... கையிலே காசே தொட வேண்டிய அவசியமே இல்லை... எது எடுத்தாலும், 'கிரெடிட் கார்டு' தான்... மனுஷனை வாழ்க்கை முழுக்க கடன்காரனா வாழ வைக்கிறது தான் அமெரிக்க கலாசாரம்...' என்றார் நண்பர்.
'நமக்குன்னு சலுகைகள் ஏதும் கிடைக்குதா?' என்றேன்.
'அட போப்பா, நீ வேற... இன்சூரன்ஸ் போடப் போனேன்... அங்க கார் டிரைவிங் லைசென்ஸ் வாங்கணுமுன்னா, கண்டிப்பா இன்சூரன்ஸ் செஞ்சுருக்கணும். இன்சூரன்ஸ்காரன், என்ன கேட்டான் தெரியுமா... சாதாரண அமெரிக்கனை விட, அஞ்சு மடங்கு அதிக தொகை இன்ஷூர் செய்ய கேட்டான்... 'உங்க ஊர்ல தர்ற, இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் இங்கே செல்லாது; இந்த ஊர் லைசென்ஸ் எடுத்த பின் வா... சாதாரண கட்டணத்துல இன்ஷூர் செய்யுறேன்'ங்கறான்...' என்றார் நண்பர்.
'அதெல்லாம் கிடக்கட்டும்... அங்க போயி தமிழர்கள் எல்லாம், ஒண்ணு மண்ணா தானே இருக்கீங்க... ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாச செஞ்சுக்கறீங்களா?' எனக் கேட்டார், லென்ஸ் மாமா.
'அத ஏன் கேக்கறீங்க மாமா... நுாறடி துாரத்துல இன்னொரு தமிழனப் பார்த்துட்டா, எதுத்த பிளாட்பாரத்துக்கு ஓடி விடுறானுங்க... இல்லே பக்கத்துல இருக்கிற கடையில புகுந்துக்கிறானுங்க. இப்படிச் செய்யறது முழுக்க முழுக்க மயிலாப்பூர், மாம்பலம், மந்தவெளியில குடியிருந்த பசங்க தான்... (எந்த, 'கம்யூனிட்டி' பற்றி சொல்கிறார் என்பது எனக்கு புரிந்தது; உங்களுக்கு?) வானத்துல இருந்து குதிச்சவங்க மாதிரி அலட்டிக்குவாங்க... எனக்கு இதுங்களக் கண்டா பிடிக்கறதே இல்ல.
'அடுத்து தெலுங்கு பேசும் மக்கள்... இந்த கம்ப்யூட்டர் பீல்டையே, அமெரிக்காவுலே ஆட்டிப் படைக்கிறவங்க, இன்னிக்கு இவங்க தான். 66 சதவீதம் பேர் இந்த பீல்டில் தெலுங்கர்கள் தான். அவங்களும் நம்மோட ஒட்ட மாட்டாங்க... காரணம், அவங்களுக்கு இங்கிலீஷ் வராது; நமக்கு தெலுங்கு தெரியாது...' என்றார் நண்பர்.
கறுப்பு லேபிள், மாமாவை ஆட்டிப் படைக்க ஆரம்பித்திருந்தது... 'நல்லா இருங்கப்பூ... நல்லா இருங்க...' என்றபடியே தட்டுத்தடுமாறி, 'டாய்லெட்டை' நோக்கி நடந்தார்.
கெட் டு கெதர் முடிந்தது!
