தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூன் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.ரகுநாதன், சென்னை: கேள்வி கேட்கும் வாசகர்களை என்றாவது நேரில் சந்தித்து, அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியதுண்டா?

உண்டாவது... சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன்... சில நேரங்களில் நான் யார் என்று சொல்லிக் கொள்ளாமலேயே!

* பி.மனோகர், காஞ்சிபுரம்: நான்கு பெண்கள் ஒன்று கூடினால், அவர்களால் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க முடியாது என்கின்றனரே... உண்மையா?

பழங்கால, படிக்காத பெண்களுக்காக அந்த காலத்தில் சொல்லப்பட்ட சொலவடை இது! இன்றைய பெண்களில் அனேகர், குறைந்தபட்சம், 10வது வரையாவது படித்து விடுகின்றனர். என்னென்னவோ மேற்படிப்புகளும் படிக்கின்றனர்... ஒற்றுமையாக, எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்... எனவே, 'நாலு பெண்கள், ஐந்து நிமிடத்தில் தோழிகளாகி விடுகின்றனர்...' என, இனி மாற்றிக் கொள்ளலாம்!

எம்.புனிதவதி, பண்ருட்டி: ஒரு மனிதனின் ஆபத்தான காலம் எது என்று சொல்வீர்கள்?

காலண்டரில், 20ம் தேதி துவங்கி, அடுத்து கிழிக்கும், 11 நாட்களும் ஆபத்தான நாட்கள் தான். சிக்கனம் தெரியாத அத்தனை பேருக்கும், அவர்களின் வருமானம், மாதத்தில் முதல், 20 நாட்களுக்குத் தானே போதுமானதாக இருக்கிறது

* எஸ்.சிவசங்கரி, ராமநாதபுரம்: 'சொர்க்கம்... நரகம்...' என்றெல்லாம் சொல்கிறார்களே... அவை எங்குள்ளன?

சொர்க்கம், நரகம் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளேதான் இருக்கிறது. அவரவர் நடவடிக்கைப்படி சொர்க்கத்திலும் வாசம் செய்யலாம்; நரகத்திலும் விழுந்து உழலவும் செய்யலாம்!

கே.ராஜேந்திரன், புதுச்சேரி: என் மனம் எப்போதும் அமைதியின்றி தவிக்கிறதே...

முன் யோசனை இன்றி செயல்படுவோரிட மிருந்து மன அமைதி ஓடிப் போய்விடும். முன் யோசனையுடன், உள்ளன்போடு, உறுதியுடன் கடமையைச் செய்பவர்களிடம் மன அமைதி என்றென்றும் குடி கொண்டிருக்கும்!



ஆர்.நவீன், மதுரை: என் நண்பன், சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் மிக்கவன்; இதனால், வெற்றி பெற்று சிறு தொழிலதிபராக இருக்கிறான். ஆனால், தலைக்கனம் பிடித்தவன் எனப் பெயர் எடுத்திருக்கிறானே...


என்ன தான் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும், விடாமுயற்சியும், ஊக்கமும், ஜெயிக்கும் வல்லமையும் இருந்தாலும் தன்னடக்கம் வேண்டும். இல்லையென்றால், கண்ணை மறைக்கும் பணம், கெட்ட பெயரை வாங்கித் தந்து விடும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us