PUBLISHED ON : ஜூன் 17, 2018

சூடிக்கொடுத்த சுடர்கொடியாளான ஆண்டாள், கோவில் கொண்டிக்கும் தொன்மையான நகரம், ஸ்ரீவில்லிபுத்துார்.
இவ்வூரின் பல பெருமைகளில், 142 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நுாலகமும் ஒன்று!
கடந்த, 1875ல், திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர், பென்னிங்டன்; இவர், தம் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வருகை தந்தபோது, மக்கள், பொழுது போக்குவதற்கு, ஒரு நுாலகம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். அதன்படி, 1875ல் ஏற்படுத்தப்பட்டது தான் பென்னிங்டன் பொது நுாலகம்.
மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், ஊரில் உள்ள தர்ம சிந்தனை கொண்டவர்கள் மற்றும் நுாலக வளர்ச்சிக்கு பாடுபடும் மனப்பக்குவம் கொண்டவர்களையும், செயலர், தலைவர் உறுப்பினராகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது, இந்த நுாலகம்.
நுாலகத்திற்கு புதிய நுால்கள் வாங்குவது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, நுாலகத்தை பராமரிப்பது உள்ளிட்ட செலவுகளுக்கு, யாரிடமும் போய் நிற்கக் கூடாது என்பதற்காக, கடைகள் கட்டி, அதன் வாடகை வருமானத்தில் நுாலகம் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார், பென்னிங்டன்.
சுமார், 1,344 சதுர அடியில், தரை மற்றும் முதல் தளத்தை கொண்டுள்ளது, இந்நுாலகம். இங்கு, ஆண்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்களுக்கு என்று தனித்தனியாக படிக்கும் இடங்கள் உள்ளன.
எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக, இந்த நுாலகத்திற்கு பெருமளவில் பெண்கள் வருகை புரிகின்றனர். அதேபோல், சிறுவர்கள் பகுதியில், அவர்கள் கைக்கு எட்டும் உயரத்திற்கு புத்தக அலமாரி செய்யப்பட்டு, புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு தலைப்புகளில் தமிழில், 35 ஆயிரத்து 936 புத்தகங்களும், ஆங்கிலத்தில், 30 ஆயிரத்து 988 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. அரசு ஆவணங்கள் மற்றும் பொக்கிஷம் போன்ற பழமையான புத்தகங்களும் இங்கு இடம்பிடித்துள்ளன.
நவீன யுகத்திற்கு ஏற்றார் போல, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன. அவற்றை படித்து வேலை வாய்ப்பு பெற்றோர் ஏராளம். அவர்கள் தங்கள் நன்றியை இங்குள்ள குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர்.
செவ்வாய் கிழமை வார விடுமுறை; இருப்பினும், நாளிதழ் படிக்க வருவோரின் நலனுக்காக, அந்தப் பிரிவு மட்டும் விடுமுறையின்றி செயல்படுகிறது. மொத்தம் 17 நாளிதழ்கள் வாங்கப்படுகின்றன.
பிடித்த பக்கங்களை நகல் எடுத்துக் கொள்ள, நுாலகத்திற்குள் வசதி செய்யப்பட்டுள்ளது. நுாலக விழா போன்ற விழாக்கள் நடத்தப்பட்டு, வாசகர் - எழுத்தாளர் சந்திப்புகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன.
கோலகட்டாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் நுாலக அறக்கட்டளை, சிறந்த நுாலகத்திற்கான பரிசு வழங்கி, இந்நுாலகத்தை பாராட்டியுள்ளது.
'இப்படி ஒரு நுாலகத்தை உருவாக்கி, அதற்கான நிரந்தர நிதிக்கு வழி செய்தவருமான, கலெக்டர் பென்னிங்டன் படம் இருந்தால் கொடுங்கள்...' என்று நுாலக செயலர், முத்து பட்டரிடம் கேட்டபோது, 'கலெக்டர் பென்னிங்டன் விளம்பரம் விரும்பாதவராக இருந்துள்ளார். நாங்கள் எவ்வளவோ தேடியும் அவர் படம் எங்குமே கிடைக்கவில்லை. அவர் மீதான அபிமானம் காரணமாக, மக்கள்தான் அவர் பெயரை நுாலகத்திற்கு வைத்து விட்டனர்...' என்றார்.
நுாலகத்திற்கு, அப்துல் கலாம் உள்ளிட்டோர் வருகை தந்து, தங்களது வாழ்த்துகளை, குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர். நீங்களும் உங்கள் வாழ்த்தை தெரிவிக்க, தொடர்பு கொள்ள வேண்டிய, செயலர் முத்து பட்டரின் மொபைல் எண்: 99445 35101; நுாலகத்தின் தொலைபேசி எண்: 04563 - 260967.
எல்.எம்.ராஜ்
