தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயிலில், டில்லிக்கு போய் பல ஆண்டுகளாகி விட்டன. ஆங்காங்கே, ஸ்டேஷன், 'பிளாட்பாரங்களில்' விற்கும் மாங்காய், சக்கரைவள்ளிக் கிழங்கு, சுண்டல், பூரி -மற்றும் லென்ஸ் மாமாவுக்கு, 'அண்டா' - அவித்த முட்டை என, இவற்றை எல்லாம் சாப்பிடும் ஆவல் கொஞ்ச நாட்களாகவே என்னுள் மேலோங்க, விஷயத்தை லென்ஸ் மாமா காதில் போட்டு வைத்தேன்.

எதிர்பாராத விதமாக, பொ.ஆ., டில்லியில் நடக்க வேண்டிய வேலை ஒன்றை கொடுத்து, 'போய் வா' என சொல்ல, 'ஆஹா... ஆபீஸ் செலவிலேயே ஆசை நிறைவேறப் போகிறது...' என, எண்ணித் தயாரானேன்.

லென்ஸ் மாமா, நான், இன்னும் இரு நண்பர்களை பேச்சுத் துணைக்கு தயார் செய்தேன். ஊருக்கு கிளம்பும் நாள் மாலையில், ஒரு நண்பர் ஏதோ சாக்குச் சொல்லி கழண்டு கொண்டார்!

முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் ஒட்டப்பட்டு இருந்த சார்ட்டைப் படித்தேன். எங்களது கேபினில், எங்கள் மூவர் பெயர் தவிர, குப்புசாமி எக்ஸ் எம்.பி., என்ற பெயரும் இருந்தது. லென்ஸ் மாமா காதைக் கடித்தேன். அவர் வந்து பெயர் பட்டியலைப் பார்த்தார். அப்போது தான் கவனித்தேன்... எங்கள் கேபினுக்கு அடுத்துள்ள, 'கூபே'யில் 'மது தண்டவதே - எக்ஸ் ரயில்வே மினிஸ்டர்' என, எழுதப்பட்டு இருந்தது.

'போச்சுடா... ஜாலியா ரெண்டு நைட் ரயிலில் கொண்டாடலாமுன்னு நெனச்சு இருந்தேனே...' எனச் சொல்லி மிகவும் மனம் ஒடிந்து போனார், லென்ஸ் மாமா!

அப்போது அருகே வந்த அட்டெண்டர் மிக பவ்யமாக (இப்படி ஒரு பணிவை எந்த அட்டெண்டரிடமும் கண்டதில்லை; ஒருவேளை ரயில்வே உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மட்டுமே இந்த வகுப்பில் பயணம் செய்வதால் ஏற்பட்ட பணிவோ?)

'சார்... பொதுவாகவே இவர்கள் எல்லாம் ரயிலில் பயணம் செய்ய மாட்டார்கள்; விமானத்தில் சென்று விடுவர்... சும்மா ஒரு சேப்டிக்காக, ரயிலிலும் ரிசர்வ் செய்து வைப்பர்... இலவசம் தானே...' என்றார்.

'அப்பாடா...' என பெருமூச்சு விட்டார் லென்ஸ் மாமா!

சொன்னபடியே முன்னாள் எம்.பி.,யும் வரவில்லை; முன்னாள் ரயில்வே அமைச்சரும் வரவில்லை,- ரயில் கிளம்பியது.

அழுக்கே இல்லாத மிக சுத்தமான பெட்டி;- அதே போல், 'டாய்லெட்!'

இந்தியாவில் வசதி படைத்தவர்கள் வாழ்க்கை முறையே தனி என்பதை அங்கே உணர முடிந்தது.

அதே நேரம், எங்கள் பெட்டியை ஒட்டிய அடுத்த பெட்டியில், ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து மூச்சு முட்டிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் காலை பத்து மணி வரை எந்த ஸ்டேஷனிலும் காலை டிபனுக்காக வண்டி நிற்கவில்லை. ரயிலில் உள்ள கேன்டினையும் அந்தப் பெட்டியில் உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது; காரணம்: அவர்கள் பெட்டியிலிருந்து மற்ற பெட்டிகளுக்கு செல்லும் நடைபாதை கிடையாது.

பத்து மணிக்கு ஏதோ ஸ்டேஷனில் வண்டி நிற்கவும், தப தபவென பயணிகள் இறங்கி, அருகே இருந்த குழாயில் குடிநீர் பிடித்தனர்; சூடாகப் போட்டுக் கொண்டிருந்த பூரியை முண்டியடித்து வாங்கினர். இந்த நேரத்தில் இதற்கு முந்திய பாராக்கள் இரண்டை விட்டு விட்டு, 'இந்தியாவில்...' என ஆரம்பிக்கும் பாராவை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்!

பகல் பொழுதில் லென்ஸ் மாமாவும், மற்ற நண்பரும், ராஜா-ராணி, இஸ்பேடு, கிளாவர் என, எனக்குப் புரியாத - பிடிக்காத சமாசாரத்தில் ஈடுபட, நேரமின்மையால் படிக்காமல் வைத்திருந்த புத்தகங்களை படித்துக்கொண்டே சென்றேன்.

டில்லி -

வழக்கம் போலவே இருந்தது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலங்களை தவிர்த்து! இந்தி படிக்காமல் போன குறையை மீண்டும் உணர முடிந்தது.

முடிக்க வேண்டிய வேலை, எதிர்பாராத விதமாக அன்று மாலையே முடிந்தது!

'வாப்பா... 'ரிலாக்ஸ்' பண்ணலாம்...' என கன்னாட் பிளேசுக்கு அழைத்துச் சென்றார் மாமா!

'வோல்கா' என்ற ரஷ்ய நதியின் பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் கண்ணில் பட்டது! ரெஸ்டாரன்ட் - கம் - பார் லைசன்ஸ் வாங்கி இருப்பார் போலும் அந்த விடுதியின் அதிபர். ஆனால், முழு வீச்சாக அங்கே, உ.பா., சமாசாரங்கள் தான் நடந்து கொண்டிருந்தன.

'ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் நாங்கள் சமம்...' எனும் விதத்தில் யுவதிகளும், 'கிக்' ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் என்ன செய்வது என திட்டமிட்டோம்.

மாசு படாமல் ஓடி வரும் கங்கை நதியைக் காண வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். கங்கையை அப்படிக் காண வேண்டுமென்றால், உ.பி., மாநிலத்தில் உள்ள ரிஷிகேசம் சென்றால் தான் முடியும் என அங்குள்ள சிலர் கூற, அடுத்த நாள் அதிகாலை ஒரு வண்டி பிடித்து விரைந்தோம்!

ஐந்து மணி நேரப் பயணம்! அங்கு, எங்கள் விடுதியின் பின்புறமே வளைந்து, நெளிந்து வெள்ளை வெளேர் என, கங்கை ஓடியது!

மறுநாள் அதிகாலை, கங்கையில் மூழ்கிக் குளித்த போது அடைந்த மன நிறைவை ஒவ்வொருவரும் அனுபவித்தால் தான் உணர முடியும்!

மீண்டும் டில்லி!

அடுத்த நாள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்!

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தைக் கண்டபோது கண்ணீர் பெருகியது!

அன்று மாலை இந்திய - பாகிஸ்தான் எல்லை, 'வாஹா' சென்றோம்! மிக நீண்ட வேலி இரு நாட்டையும் பிரிக்கிறது! வேலியின் இருபுறமும் விவசாயம் நடக்கிறது. நம் பகுதியில் ஒரு கேட்; பாக்., பகுதியில் ஒரு கேட் இருக்கிறது. இரண்டு நாடுகளின் தேசியக் கொடிகளும் எதிர் எதிரே பறக்கின்றன.

மிகச் சரியாக மாலை, 5:58 மணிக்கு, ராணுவ மரியாதையுடன் கொடி இறக்கப்பட்டு, லாவகமாக மடிக்கப்பட்டு, பத்திரப்படுத்தப்படுகிறது.

இந்த நேரத்தில் வேலிக்கு அந்தப் பக்கம் இருந்த பாகிஸ்தானியர் சிலர், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' எனக் குரல் எழுப்ப, நம்மவர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, 'பாரத் மாதா கி ஜே...' எனக் குரல் கொடுக்க, கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட, உயரமான ராணுவ வீரர் ஒருவர், மடை திறந்தது போல இந்தியில் ஏதோ பொழிய, நம் மக்கள், 'கப்-சிப்' ஆயினர்.

நண்பருக்கு இந்தி தெரியும்; அவரிடம் விபரம் கேட்டேன்...

அவர்கள் கோஷம் போட்டால் போடட்டும், இந்த நேரத்தில் நாம் உணர்ச்சி வசப்பட்டால் விபரீதம் ஏதேனும் நேர்ந்து விடும் எனக் கூறினார், என்றார்.

பின், டில்லியில் செய்ய வேண்டிய வேலையை முடித்து, சென்னை திரும்பினோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us