PUBLISHED ON : ஜூலை 01, 2018

காலம் மாறி விட்டது!
சமீபத்தில், உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, இரவு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, முகூர்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரே கூச்சல்; சிலர் கோபமாக பேசிக் கொண்டிருந்தனர். என்ன என்று அருகில் சென்று பார்த்தேன்... மணமகனும் ஒருவித பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.
விசாரித்ததில், 'மணமகனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று கூறியதால் தான், திருமண ஏற்பாட்டை செய்துள்ளனர் பெண் வீட்டார். ஆனால், மணமகன், திருமண நாள் அன்றே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறான். இது, எப்படியோ பெண் வீட்டிற்கு தெரிந்து, பிரச்னையாகி விட்டது...' என்றனர். பெண் வீட்டார் கேட்ட கேள்விகளுக்கு, மாப்பிள்ளை வீட்டாரால், பதில் சொல்ல முடியாமல், திணறிக் கொண்டிருந்தனர்.
நடப்பதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த மணப்பெண், 'இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. உடனே நிறுத்தி விடுங்கள். மணநாள் அன்றே குடிக்கிறான் என்றால், இவனை நம்பி, என்னால் வாழ முடியாது; இவனை திருத்துவதிலேயே என் வாழ்க்கை முடிந்து விடும்...' என்று தடாலடியாக கூறி, மண்டபத்தை விட்டு சென்று விட்டாள்.
அவள் செய்தது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதுபோன்ற ஆண்களுக்கு, அவளின் முடிவே சரியான பதிலடி.
'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்ற அடிமை வளையத்தில் சிக்க, இன்றைய பெண்கள் தயாராக இல்லை. காலம் மாறி விட்டது!
— வி.மைதிலி, காஞ்சிபுரம்.
மரக்கன்றை கொடுத்தால்...
எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தோருக்கு, தாம்பூலப் பையுடன், மரக்கன்று ஒன்றும் வழக்கப் பட்டது.
மரக்கன்றை வீட்டில் வைப்பதற்கு இடமில்லையே... என்ன செய்வது என்ற யோசனையில் வீடு திரும்புகையில், மண்டபத்தின் அருகே சாலையோரம் ஒருவர் குழிதோண்டி, மரக்கன்று நடுவதை பார்த்தேன். அவரிடம், 'வீட்டுக்கு கொண்டு போய் நடவில்லையா...' என்றேன். அதற்கு அவர், 'நான் இருக்கிறது ஒண்டிக்குடித்தனத்துல... வீட்டு சாமான்களை வைக்கிறதுக்கே இடமில்ல... இதுல மரத்தை எங்கே வைக்கிறது... குப்பையில துாக்கிப் போட்டு வீணாக்குறதுக்கு பதிலா, நட்டு வெச்சா, அது பாட்டுக்கு வளர்ந்துடும்...' என்றார். அவரை பின்பற்றி நானும், ஒரு குழி தோண்டி, எனக்கு கொடுக்கப்பட்ட மரக்கன்றை நட்டு வைத்தேன்.
திருமணத்தின் போது நல்ல எண்ணத்தோடு மரக்கன்றை வழங்குவோர், அவற்றை எல்லாருக்கும் கொடுத்து விரயமாக்காமல், ஓர் இடத்தில் அடுக்கி வைக்கலாம். தேவைப்படுவோர், தேவையானவற்றை எடுத்துக் கொள்வர். மீதமாவதை அவர்களே சாலை ஓரத்திலோ அல்லது பொது இடங்களிலோ நட்டு வைத்தால், திருமண நாளை நினைவுகொள்ளும் விதத்தில் சிறப்பாக இருக்கும்.
- அஜித், சென்னை.
முதியோர் தோட்டம்!
சமீபத்தில், என் நண்பனின் தாத்தாவை பார்ப்பதற்காக, முதியோர் இல்லம் சென்றிருந்தேன். முதியோர் இல்லத்துக்கு அருகில் இருந்த பூங்கா ஒன்றில் 'முதியோர் தோட்டம்' என்று, பலகை ஒன்று காணப்பட்டது. அங்கு இருப்பவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் கூறிய பதில் ஆச்சரியமளித்தது....
தற்போது, முதியோர் தோட்டமாக உள்ள இடம், முதலில் குப்பைக் கிடங்காக இருந்ததாம். அதனால், துர்நாற்றமும், தொற்று நோய்களும் பரவியிருக்கின்றன. அதை சுத்தம் செய்யவோ, கண்டு கொள்ளவோ யாரும் முன் வரவில்லையாம்.
முதியோர் இல்லத்தில் உள்ள பெரியவர்கள் ஒன்று கூடி யாரையும் எதிர்பார்க்காமல், அவர்களே அந்த இடத்தில் உள்ள குப்பையை அள்ளி, சுத்தம் செய்துள்ளனர்.
மீண்டும் குப்பை கிடங்காக மாறாமல் இருக்க, தங்கள் சொந்த செலவில் பூந்தோட்டத்தை அமைத்து உள்ளனர். தற்போது, அந்த இடம் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கே கண்ணுக்கு இதமாக உள்ளது.
வயதாகி விட்டது; வியாதி வந்து விட்டது. அவர்களால் ஒரு பயனும் இல்லை என்று, சமூத்தில் இருந்து ஒதுக்கி வைத்தவர்களை, இன்று, அதே சமூகம் அவர்கள் செய்த செயலை பாராட்டி, 'முதியோர் தோட்டம்' என்று பெயரிட்டு, மரியாதை செய்துள்ளது.
அந்த முதியவர்களை சந்தித்து, பாராட்டி விட்டு வந்தேன்.
- பெ. ஸ்ரீ. நாகலட்சுமி, கோவை.
