PUBLISHED ON : ஜூலை 01, 2018

தொடர்ந்து தவறு செய்பவர்களைப் பார்த்து, 'நீ இப்படியே பண்ணிகிட்டே இரு... உனக்கும் ஆப்பு அடிக்க ஒருவன் வருவான்...' என்று எச்சரிப்பது வழக்கம். இந்த சொல் வழக்கு ஏன் வந்தது தெரியுமா?
பிரம்மனின் குடும்பத்தில் வந்த புண்ணியசேனன் என்ற சிவ பக்தன், தன்னை உலகப் பணக்காரர்களில் முதல்வனாக்க வேண்டும் என, சிவனிடம் வேண்டினான். செல்வ பூமியான மதுரைக்கு வந்து தவமிருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த சிவன், பார்வதியுடன் அவன் முன் தோன்றி, உலகிலுள்ள ஒட்டுமொத்த சொத்தையும் கொடுத்தார்.
பணம் இருந்து விட்டால், ஆட்டம் போட தோன்றி விடுமே! புண்ணியசேனன், சிவனின் அருகில் இருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். விடுவாளா அம்பாள்... அவனுக்கு ஆப்பு வைத்து விட்டாள். ஆம்... சேனனின் உயிரை அவள் பறித்து விட்டாள்.
அவனது தவப் பெருமையை அறிந்ததால், அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார், சிவன். உயிர்பெற்ற அவன், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான். மன்னித்த சிவன் அவனுக்கு, 'குபேரன்' என்று பெயரிட்டு வாழ்வு தந்தார். அவன் மதுரையில் தங்கி, சிவ பூஜை செய்து வந்தான்.
தவறு செய்பவர்களுக்கு, 'ஆப்பு' வைக்க எண்ணம் கொண்ட சிவன், ஆப்பின் வடிவிலேயே அருள்பாலிக்க எண்ணம் கொண்டார். இதற்காக, சோழாந்தக மன்னன் ஆட்சிக் காலத்தில் ஒரு லீலை செய்தார். மன்னன், சிவ பூஜை செய்த பின் தான் சாப்பிடுவான். ஒருமுறை, வேட்டைக்கு சென்ற போது, மானை விரட்டினான். நீண்ட துாரம் விரட்டியும் மான் சிக்கவில்லை. மன்னன் களைத்து போனான்; மன்னனின் களைப்பு தீர, சாப்பிடக் கூறினார், அமைச்சர்.
'சிவ பூஜை செய்யாமல் சாப்பிட மாட்டேன்...' என்று அவன் உறுதியாக தெரிவித்தான். புத்திசாலியான அந்த அமைச்சர், உருளை வடிவில் இருந்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு போல அடித்தார். அதைக் காட்டி, 'மன்னா... இங்கே ஒரு சுயம்புலிங்கம் (தானாக தோன்றியது) உள்ளது. நீங்கள் அதற்கு பூஜை செய்த பின் சாப்பிடலாமே...' என்று யோசனை கூறினார்.
பசி மயக்கத்தில் இருந்த மன்னனும், அந்த ஆப்பை, லிங்கம் என நினைத்து வணங்கி, பின், உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பின் தான், வணங்கியது லிங்கம் அல்ல, அது, ஆப்பு என தெரிந்து, வருந்தினான்.
'சிவனே! நான் இது நாள் வரை உன்னை பூஜித்தது உண்மையானால், நீ இந்த ஆப்பில் வந்து அருள்பாலிக்க வேண்டும்...' என கெஞ்சினான். அவனது பக்திக்கு மகிழ்ந்த சிவன், அந்த ஆப்பில் தோன்றி அருள்பாலித்தார். ஆப்பில் எழுந்தவர் என்பதால், 'ஆப்புடையார்' ஆனார். அந்த ஊர் ஆப்பனுார் ஆனது.
மதுரை வைகையின் வடக்கு கரையிலுள்ள இந்த ஊர் பிற்காலத்தில், 'செல்லுார்' ஆயிற்று. குபேரனுக்கு வாழ்வளித்ததால், செல்வ ஊராக இருந்து, செல்லுாராக இது திரிந்திருக்க வேண்டும்.
ஆப்புடையார் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கியும், அம்மன் சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
மூலவர் சிறிய லிங்கம் என்றாலும், இவரது பெருமை உயர்ந்தது. மலைகளில் இமயம் போலவும், பசுக்களுள் காமதேனு போலவும், கிரகங்களில் பவுர்ணமி சந்திரனைப் போலவும், பிரகாசமான பொருட்களுள் சூரியன் போலவும், வள்ளல்களில் மேகம் போலவும்... இம்மாதிரி எது எது மகிமை மிக்கதோ, அதேபோல் இங்குள்ள ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விட மகிமை மிக்கவர்.
இவரை வணங்கினால், எல்லா தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மதுரையிலுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில், இது அப்பு (நீர்) ஸ்தலமாகும். விநாயகர், முருகன், நடராஜர், காசி விஸ்வநாதர், மீனாட்சியம்மனுக்கு சன்னிதிகள் உண்டு.
சோழாந்தகனின் வழி வந்த சுகுணபாண்டியனின் ஆட்சியில் பஞ்சம் நிலவியது. இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலை சமைத்தார்; மணல் அன்னமாக மாறியது. இதனால், இத்தல இறைவனுக்கு, 'அன்னவிநோதன்' என்ற பெயரும் உண்டு.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கோரிப்பாளையம் வழியாக, செல்லுார் செல்லலாம்.
தி.செல்லப்பா
