PUBLISHED ON : ஆக 19, 2018

அந்த நண்பர் தெலுங்கர்; ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்ததால், தமிழில் நல்ல பரிட்சயம் உண்டு. சாப்ட்வேர் துறையில் கல்வி கற்றதால், எல்லாரையும் போல அமெரிக்காவில் வேலை செய்யச் சென்று விட்டார்.
கடந்த வாரத்தில் சென்னை வந்தவர், என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து போன் செய்தார்; சந்தித்தோம்.
அமெரிக்க வாழ்வு எப்படி இருக்கிறது என விசாரித்தேன்...
'இன்னும் ரெண்டு வருஷத்தில் சென்னையிலேயே, 'செட்டில்' ஆகிடலாம்ன்னு இருக்கிறேன்... என்ன... இன்னும் கொஞ்சம் காசு சேர்க்கணும்; அதற்காகத் தான் அமெரிக்க வாழ்க்கை. மற்றபடி அங்கே, 'சோஷியல் லைப்பே' இல்லை. நம்ம ஆட்களே நம்முடன் சகஜமாகப் பழகுறதில்லை எனும் போது, அமெரிக்கர்கள் நம்முடன் பழகுவர் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
'எனக்கு ஆட்கள் வேண்டும்; நண்பர்கள், உறவினர்கள் வேண்டும்... அங்கே யாரும் இல்லை. 'அப்கோர்ஸ்' உறவினர்கள் அமெரிக்காவில் இருக்க வாய்ப்பில்லை தான்... ஆனால், நண்பர்களாக யாருமே ஒட்ட மாட்டேங்கிறாங்க; எல்லாரும் சுயநலவாதிகளாக இருக்காங்க...
'இதுல இன்னொரு சோகம் என்னன்னா, இந்த, 'கொல்டி' பசங்க (தெலுங்கர்கள்) என்னை தமிழன்னு நெனைச்சு, என் கூட பழக மாட்டேங்கிறானுங்க... எனக்கு தெலுங்கு சுத்தமா பேச தெரியாது. அவனுகளுக்கு ஒழுங்கா இங்கிலீஷ் பேச வராது.
'கார் துடைக்கிறதுல இருந்து, ஜட்டி துவைக்கிறது வரை நாமே தான் எல்லா வேலையையும் செய்யணும். வேலைக்கு ஆள் வச்சுக்கறது எல்லாம் அந்த ஊர் பணக்காரன் அல்லது நம்ம ஊர்க்காரன் அங்கே பணக்காரனா, டாக்டரா, வக்கீலா, ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்யறவனா இருந்தா, வேலைக்காரன் -- காரி வச்சுக்க முடியும். சாப்ட்வேர் வேலை செய்யறவங்களால அதெல்லாம் நெனச்சு பார்க்கவே முடியாது.
'இங்கே சென்னையில எங்க வீட்டுல, அப்பாவுக்கு ஒரு டிரைவர், அண்ணனுக்கு ஒரு டிரைவர், மத்தவங்களுக்கு ஒரு டிரைவர்ன்னு, மூணு டிரைவர்கள்; துணி துவைக்க, பெட்டி போட தனித்தனியே ரெண்டு பேர்; பாத்திரம் கழுவ ஒரு வேலைக்காரி, வீடு கூட்டி, மெழுக ஒரு வேலைக்காரி. அசைவம் சமைக்க தெலுங்கு சமையல்காரர்... சைவத்துக்கு ஒரு தமிழ் ஐயர்; ரெண்டு பேருக்கும் ரெண்டு தனித் தனி சமயலறை.
'இது தவிர தோட்டக்காரர், கடை, கண்ணி சென்று வர ஒரு சிறுவன்... வயித்தெரிச்சலா இருக்கு, என்னோட அமெரிக்க வாழ்க்கைய நெனச்சா...
'ஆனா, ஒரு வைராக்கியம்... அப்பன் காசுல வாழுறான்ன்னு என்னை யாரும் சொல்லிடக் கூடாது. சில, பல கோடிகளோட தான் இங்கே செட்டில் ஆகணும்ன்னு நெனச்சிருக்கேன்...' என்றார்.
'போகட்டும், விடுங்க; இப்போ அமெரிக்காவுல, நம்ம ஜனங்க தவிர, சீனா, கொரியா, சிங்கப்பூர், மலேஷியா நாட்டுக்காரங்களும் எக்கச்சக்கமா குடியேறிட்டாங்களே... இவங்கள்ள இருந்து இனம் பிரிச்சு நம்மாட்களை அமெரிக்ககாரங்க எப்படி அடையாளம் காண்றாங்க?' எனக் கேட்டேன்.
'ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சுடறாங்க... நம்மூர் பொண்ணுங்க ரொம்ப ஸ்டைலா அமெரிக்க பெண்கள் மாதிரியே கவுன், கோட் எல்லாம் போட்டு இருப்பாங்க... ஆனா, ஜடையை பின்னல் போட்டு, அதனோட நுனியில் ரிப்பன் மாதிரி ஒரு ரப்பர் பேண்டை சுருட்டி தொங்க விட்டு இருப்பாங்க... அதைப் பார்த்ததுமே அவங்களுக்கு தெரிஞ்சு போகும். இன்னும் சிலதுகள், கவுன் போட்டு இருக்கும்; ஆனா, கொலுசைக் கழற்றி இருக்காது. இது போதாதா, அடையாளம் காண...
'அங்க இருக்கிற நம்மூர் பசங்க சூப்பர் மார்க்கெட் போயி, மோர் எங்கே இருக்குன்னு தேடிகிட்டு அலைவானுங்க... கடைசியில, சேல்ஸ்மேன்ட்ட கேட்கும் போது, சவுத் இந்தியன் அம்பின்னு தெரிஞ்சுக்குவாங்க!
'இதை போல, நம்மூர் லேடீஸ் அங்க உள்ள சூப்பர் மார்க்கெட்டுல இட்லி பொடி, மிளகாய் பொடி தேடுவாங்க... அப்போ தெரிஞ்சு போகும்.
'இவனுங்க கூடி பேசும்போது இந்தியாவுல வசிச்சா, என்னென்ன பிரச்னைகள்லாம் வரும்ன்னு மூச்சு விடாம பேசிகிட்டு இருப்பானுக... அப்பத் தெரிஞ்சு போகும். பேச்சினுாடே அமெரிக்க தெருக்களின் சுத்தம், இந்தியாவில், 'சுத்தம்' என்பானுங்க. இந்தியா வளர்ச்சி அடையாததற்கு அரசியல்வாதிகள் தான் காரணம்ன்னும், எந்த வேலையும் நடக்காமலிருப்பதற்கு அரசு ஊழியர் தான் காரணமுன்னும் பேசுவாங்க... அப்போ, கண்டுபிடிச்சுடுவாங்க.
'அது மட்டுமில்லாம, இந்திய விமான நிலையங்கள் கொடுக்கும் தொல்லை பற்றி பேசி, இந்தியா செல்ல எந்த விமான நிறுவனம் குறைஞ்ச கட்டணம், எந்த மாசத்துல தருதுன்னு பேசுவானுங்க.
'கார் பார்க்கிங் செய்ய எந்த ஏரியாவுல இரண்டு ரூபா குறைவுன்னு தேடிட்டு இருப்பாங்க. இவன் போக வேண்டிய இடத்தில் இருந்து ரெண்டு கிலோ மீட்டர் துாரத்தில் இரண்டு ரூபாய் குறைவு பார்க்கிங் ஏரியா இருந்தாலும் அங்கே காரை நிறுத்திட்டு நடந்தே போவான்... அப்போ கண்டுபிடிச்சிடுவாங்க!
'இதப் பத்தின ஜோக்குகள் இன்டர்நெட்டில் சீரழியுது; தேடிப் பார்த்தீங்கன்னா, இன்னும் ஏராளம் கிடைக்கும் உங்களுக்கு...' என முடித்தார்.
என்னிடம் தான், 'வாட்ச்' கிடையாதே... அவருடைய கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்; நடுநிசியைத் தொட்டிருந்தது.ஓட்டலில் இருந்து, 'கைத்தாங்கலாக' அவரை அழைத்துச் சென்று, அவரது தந்தையின் கார் டிரைவரிடம் ஒப்படைத்துக் கிளம்பினேன்!
குப்பண்ணா சொன்னது:
குடும்பக் கோர்ட்டில் ஒரு வழக்கு...
ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர், சற்று வயதானவர். அவர் மனைவிக்கும், அவருக்கும் தகராறு. மனைவியை விவாகரத்து செய்வற்காக அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். விவாகரத்து செய்தால், அந்த வயதான அம்மணிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமே... கிழவியின் மீது இருந்த கோபத்தில் - அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கக் கூடாது என்ற திட்டத்தோடு,- தன் இலாக்காவில் பல்வேறு, 'லோன்' போட்டு, கடன் வாங்கி எங்கோ செட்டில் பண்ணி விட்டார், கிழவர். இப்போ கடன் பிடித்தம் போக அவர், கையில் வாங்கும் சம்பளம், 500 ரூபாய் தானாம்.
எனவே, இந்தப் பணம் தன் வாழ்க்கைச் செலவுகளுக்கே போதாது என்றும், அதனால், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர இயலாது என்றும் கோர்ட்டில் சொன்னார்.
'ஜீவனாம்சம் தர மறுத்தால், உங்கள சிறை வைக்க நேரிடும்...' என்றார் நீதிபதி. பின், வாதியின் மனைவியை நோக்கி, 'உன் கணவர் ஜீவனாம்சம் தர மறுக்கிறார்; அவரை ஜெயிலில் தள்ளட்டுமா?' என்று கேட்டார்.
கிழவி கோபத்துடன், 'எனக்கு காசு கொடுக்கலன்னா, நான் எப்படி சாப்பிடறது... அந்த ஆளை ஜெயில்லே போடுங்க...' என்றாள்.
'அவரை ஜெயிலில் போட்டால், அவர் சாப்பாட்டு செலவுக்கு நீ படிப்பணம் தரணும். தருவாயா?' என்று கிழவியிடம் கேட்டார் நீதிபதி.
'என்ன, நான் பணம் தரணுமா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் கிழவி.
'ஆமாம்; இது கடன் கேசு. கடனாளியை ஜெயிலில் போட்டால், கடன் கொடுத்தவர் தான் கைதியின் சாப்பாட்டுக்கு பணம் தரணும். அதுதான் சட்டம்...' என்றார் நீதிபதி.
கிழவி, கோபத்துடன் நீதிபதியைப் பார்த்து, 'அட, மூள கெட்டவனே... நான் சாப்பிட வழி இல்லாம, அந்த ஆளுகிட்டே பணம் வாங்கிக் குடுடான்னு சொன்னா, அவனுக்கு சாப்பாடு போட என்கிட்டே பணம் கேட்கிறியே... புத்தி இருக்கா ஒனக்கு...' என்றாள் ஆவேசமாக!
'நீதிபதி அதிர்ந்து போனார்; நானும் தான்!' என்றார், குப்பண்ணா.
'நானும் தான்... சேதி புதுசா இருக்கே...' என்றேன்!
