PUBLISHED ON : ஆக 19, 2018

தமிழக அரசின் சார்பில், சென்னையில் மிகப்பெரிய அளவில், மனோரமாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, 'நான், திரைப்பட கல்லுாரியில் பயின்றபோது, ஒரு நடிகர், எவ்வாறு சகஜமாகவும், திறமையாகவும் நடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தனர். அதை, எங்கள் மனதில் நன்றாக பதிய வைப்பதற்காக, மார்லன் பிராண்டோ, சார்லி சாப்ளின், திலீப்குமார், சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா போன்ற பல நடிகர்கள் நடித்த திரைப்படங்களை திரையிட்டு காண்பித்தனர்.
'ஆனால், நடிகைகளில் இருவரின் படங்களை மட்டும் தான் காண்பித்தனர். ஒன்று, சாவித்ரி; மற்றொன்று, மனோரமா. 'இவர்கள் இருவரின் நடிப்பை மட்டும் நீங்கள் கவனித்தாலே போதும்...' என்றனர்.
'குப்பத்து ராஜா என்ற படத்தில் தான் முதன் முதலாக மனோரமாவோடு நடித்தேன்; ஷூட்டிங்கில் அவர் நடிப்பதையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். வேகமாக நான் நடிப்பதையும், பேசுவதையும் ரொம்பவே ரசிப்பார், மனோரமா.
'விடுதலை படத்திலும், என்னோடு நடித்தார், மனோரமா, அப்படத்தில், 'நாட்டுக்குள்ளே என்னை பற்றி கேட்டுப் பாருங்க...' என்றொரு பாடல் வரும். அந்த சீன், படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
'அப்போது, அந்த பாடலுக்கு ஏற்றார் போல் நடனம் ஆடிக் கொண்டிருந்தேன். அதை பார்த்த கூட்டத்தில் இருந்த ஒருவர், 'பரவாயில்லையே... பைத்தியம் கூட நல்லா டான்ஸ் ஆடுதே...' என்று கிண்டலடித்தார்.
'இதனால் கோபமடைந்த மனோரமா, அந்த ஆளின் சட்டையை பிடித்து, 'யாருடா பைத்தியம்...' என கேட்டு, சண்டைக்கு போய் விட்டார். அப்புறம் அந்த ஆளை இங்கிருந்து அனுப்பினால் தான் ஷூட்டிங் தொடர்ந்து நடக்கும்...' என்று கூறி விட்டார்.
'இதன்பின், வேறு வழியின்றி, அந்த ஆள் அங்கிருந்து கிளம்பினார். அவர் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர், அப்புறம் தான் படப்பிடிப்பை தொடர அனுமதித்தார்...' என்று மனோரமாவை பற்றிய ஒரு புதிய தகவலை கூறினார்.
கமல்ஹாசன் பேசும்போது, 'நான், இன்றைய உயர்ந்த நிலையை அடைய, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி போன்ற மிகப்பெரிய நடிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்; அந்த வரிசையில், மறக்காமல் நன்றி சொல்ல வேண்டியவர், மனோரமா.
'சிறுவனாக இருந்தபோது, ஷூட்டிங் நேரத்தில், 'இங்க வாடா...' என்று பாசத்தோடு அழைத்து, என்னை தன் மடியில் வைத்துக் கொள்வார். இவர்கள் மடியில் அமர்ந்த பலன் தான், என்னை, இன்று இந்த இடத்தில் அமர வைத்திருக்கிறது.
'படப்பிடிப்பின் போது, யாருக்காவது அடிபட்டு விட்டால், அது, லைட்மேனாக இருந்தாலும், ஓடிப்போய் துாக்குவார்.
'நான் மதிக்கிற மற்றொரு நடிகர், நாகேஷ்; அவர் நடிக்கிறபோது, யாருக்காகவும் இம்மியளவும் விட்டுக் கொடுக்க மாட்டார். ஆனால், அவரே, மனோரமா நடிப்பதை பார்த்து, தன்னை மறந்ததும் உண்டு. இதை விட, மனோரமாவிற்கு வேறென்ன பாராட்டு வேண்டும்...' என்று, மனோரமாவை புகழ்ந்தார்.
அதன்பின், அவரது வாழ்வில் பல பாராட்டு விழாக்கள் நடைபெற்றன. பெரியார் படத்தில், ஈ.வெ.ராமசாமியின் தாயாராக நடித்திருந்த மனோரமாவிற்கு, சென்னை, பெரியார் திடலில், பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மனோரமாவிற்கு, 'மக்கள் கலையரசி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
அவ்விழாவில் நடந்த ஒரு முக்கிய சம்பவம் அவரை கதிகலங்கடித்து விட்டது.
திராவிடர் கழகத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் மேடைக்கு வந்தனர்; அப்போது, அப்பெண் அணிந்திருந்த தாலியை, அவரது கணவரே கத்தரித்து, அதிலிருந்த தங்கத்தை, திராவிடர் கழக தலைவர், கி.வீரமணியிடம், குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடையாக கொடுத்தார்.
இக்காட்சியை பார்த்து திடுக்கிட்ட மனோரமா, 'இந்த கயிறு இருந்தால் எங்களை போன்ற பெண்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறு...' என்றார்.
நம் தமிழர் பண்பாடு, கலாசாரத்திற்குள் மூழ்கிக் கிடந்தவர், மனோரமா. கட்டுப்பாடுகளை உதறித்தள்ளும் மனப்போக்கை சற்றும் கொண்டிராதவர்.
கருணாநிதியின் குடும்பத்தோடு மனோரமாவிற்கு நெருங்கிய பழக்கம் உண்டு. தன் அன்னையோடு கருணாநிதி வீட்டிற்கு அடிக்கடி மனோரமா செல்வது வழக்கம். இவர்களை அன்போடு வரவேற்று, ருசியான உணவு சமைத்து வழங்குவார், கருணாநிதியின் தாயார், அஞ்சுகம்.
இந்நிலையில் ஒருநாள், கருணாநிதியின் தாயார் திடீரென்று இறந்து விட்டதாக தகவல் வந்தது. பதறிப் போன மனோரமா, உடனே, கருணாநிதி வீட்டிற்கு சென்றார்.
இவர்களிடம் பாசத்தை பொழிந்த அந்த தாய், அங்கே அசைவற்று கிடந்ததை கண்டு, கதறி அழுதார்.
கருணாநிதி, தரையில் விழுந்து புரண்டு அழுக, அவரின் மருமகன் முரசொலி மாறனும் மற்றும் பலரும் கருணாநிதியை சமாதானப்படுத்த முயன்றும், அவர் அழுகையை நிறுத்தவில்லை. இப்படி ஆண்கள் பலரும் அழுத நிலையில், பெண்களின் அழுகையை பற்றி விவரிக்க தேவையில்லை.
இவ்வாறு பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுததற்கு காரணம், அஞ்சுகம் அம்மையாரின் நல்ல மனது தான். வீட்டுக்கு வரும் மனிதர்கள் அனைவரையுமே, தன் குழந்தைகளாகவும், உறவினர்களாகவும், நெருக்கமான நண்பர்களாகவும் நினைத்து அன்பை பொழிவார், அந்த தாய்.
அஞ்சுகம் அம்மையார் இறந்தபோது, டில்லியில் இருந்தார், அண்ணாதுரை. இந்த தகவலை அவருக்கு சொல்வதற்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.
அதற்குள், சென்னை கிளம்பும் ரயிலில் ஏறி விட்டார், அண்ணாதுரை. ரயிலும் கிளம்பி விட்டது; எனவே, அண்ணாதுரையிடம் இந்த தகவலை தெரிவிக்க முடியாமல் போயிற்று.
ஆனால், அண்ணாதுரை வந்த பிறகே தாயின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், கருணாநிதி. எனவே, அவர் வரும் வரை வீட்டில்தான் உடல் இருக்கும் என்று முடிவாகி விட்டது.
மனோரமாவும், அவரது அம்மாவும் இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே இருப்பது என்ற முடிவோடு அங்கேயே தங்கி விட்டனர். அவர்களோடு நடிகை பண்டரிபாய், டி.ஏ.மதுரம் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து உள்ளிட்டோரும் தங்கினர்.
இரவு நேரத்தில், அம்மையாரின் உடல் கிடந்த அந்த இல்லத்தில், படுத்து உறங்க மனமில்லாமல், எல்லாரும் அந்த அறையிலேயே உடலை சுற்றி கூட்டமாக அமர்ந்திருந்தனர்.
அந்த உடலுக்கு இன்னொரு புறத்தில் கருணாநிதியின் சகோதரிகள் உட்பட, அவர்கள் குடும்பத்தினர் சிலர் உட்கார்ந்திருந்தனர்.
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. இரவு, 10:00 மணி ஆனது.
ஆண்கள் பலரும் அதற்கு மேலும் விழித்திருக்க முடியாமல், மூலைக்கு மூலை ஒதுங்கி, துாங்க ஆரம்பித்தனர்.
இதனால், எங்கும் ஒரே நிசப்தம்; மயான அமைதி என்றே சொல்ல வேண்டும்.
வெளியே சென்று வெற்றிலையை குதப்பியபடி உள்ளே வந்தார் டி.ஏ.மதுரம்...
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
குன்றில்குமார்
