தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 19, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாயில் நுழையாத பெயர் வேண்டாமே!

நண்பரின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பெயரை, மூன்று முறை குழந்தையின் காதில் சொல்ல கூறினர். வாயில் நுழையாத, அந்த வடமொழிப் பெயரை, சொல்ல சிரமப்பட்டனர், வயதானோர். ஒரு கட்டத்தில், சரியாக உச்சரிக்காத பெரியவர்களை கடிந்து கொண்டார், நண்பர்.

பின், நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 'ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் கூறிய, 'நியூமராலஜி'படி இப்பெயரை தேர்ந்தெடுத்ததாகவும், இப்பெயருக்கென, பெரும் தொகையை அவருக்கு கொடுத்ததாகவும், இப்பெயர் சூட்டினால், குழந்தை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் என்று அவர் கூறியதாகவும் சொன்னார்.

வடமொழி பெயரை வைப்பது பெரிதில்லை; அதை எவ்வளவு பேர் சரியான உச்சரிப்புடன் சொல்வர்... உச்சரிப்பு வரவில்லையெனில், அவர்கள் வேறு பெயர் சொல்லி அழைப்பர். பின், அப்பெயரே, குழந்தையின் அடையாளமாகி விடும். மேலும், நற்பெயர் என்பது, ஒருவரின் சுயசிந்தனை மற்றும் திறமையால் வருவதாகும். தமிழில் பெயர் வைத்தால், வாய்நிறைய சொல்லி அழைப்பர்; கேட்பதற்கும் இனிமையாய் இருக்கும்.

படித்தவர்களே... ஒருவர் உயர்வதும், தாழ்வதும் பெயரால் தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாமே!

— ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

சிறு வயதிலேயே கற்றுக்கொடுங்கள்!

கடந்த மாதம் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். விருந்து ஆரம்பிக்கும் முன், உறவினர், நண்பர்கள் எல்லாம் கூடி, குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி, வினாடி - வினா நடத்தி, பரிசு வழங்கினர். அடுத்த நிகழ்வாக, 'குழந்தைகள், ஏதேனும் ஒரு தலைப்பு பற்றி ஐந்து நிமிடம் பேசலாம்...' என்று அறிவித்தனர். ஒவ்வொரு குழந்தையாக மேடை ஏறி, அப்துல் கலாம், துாய்மை இந்தியா, கிரிக்கெட் மற்றும் தங்கள் பள்ளி பற்றி பேசி, கை தட்டல் பெற்றனர்.

ஒரு சிறுமி மட்டும், 'குட் டச்... பேட் டச்...' பற்றி பேசினாள்.

தெரிந்த நபர், தொட முற்பட்டாலோ, முத்தம் கொடுக்க நெருங்கினாலோ தவிர்க்க வேண்டும் எனவும், யாராவது அத்துமீறினால், சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைக்க வேண்டும் என்றும், 'கணீர்' குரலில், தைரியமாக பேசியதை கேட்டு, கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது.

அவள் பெற்றோரை சந்தித்து பாராட்டிய போது, 'பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு தவிர யோகா, பெயின்டிங் மற்றும் நீச்சல் கற்றுத் தருவதில் தான் குறியாக இருக்கின்றனரே தவிர, இது போன்ற தற்காப்பு விஷயங்களை சொல்லித் தருவதில்லை...' என்று ஆதங்கப்பட்டார், சிறுமியின் அப்பா.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்மம் பற்றி, தன் மகளுக்கு எடுத்துரைத்ததாகவும், அவளும், தன் பள்ளி தோழிகளுக்கு கூறி வருவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட போது பெருமையாக இருந்தது.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். பெருகி வரும் குழந்தை பாலியல் வக்கிரங்களை தகர்த்தெறியும் சக்தி, குழந்தைகள் கையில் மட்டுமே இருப்பதால், பெற்றோர் தயக்கமில்லாமல், பாலியல் வன்ம தற்காப்பு முறை பற்றி குழந்தைகளிடம் பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

— எம்.விக்னேஷ், மதுரை.

நுாலக மேலாளர் கவனத்திற்கு...

சமீபத்தில், மாவட்ட தலைமை நுாலகத்திற்கு சென்றிருந்தேன். என் அருகில் இருந்த நபர், விரலை நாக்கில் தொட்டு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பிக் கொண்டிருந்தார். அவரிடம், 'இப்படி செய்யாதீர்கள்... புத்தகத்தில் படிந்து இருக்கும் அழுக்கு, நாக்கின் வழியாக உள் சென்று நோய் தொற்றை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் அப்புத்தகத்தை படிக்கும்போது எச்சில் பட்ட இடத்தை தொடுவதால் கிருமித்தொற்று ஏற்படும்...' என்று கூறினேன். தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

நடந்த சம்பவத்தை நுாலக மேலாளரிடம் கூறினேன். உடனே, மாற்று ஏற்பாடாக, மேஜையின் மீது, சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் நனைந்த பஞ்சை வைத்து விட்டார்.

அனைத்து நுாலகங்களும் இதை பின்பற்றலாமே!

— ச.சக்திவேல், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us