sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 09, 2018

Google News

PUBLISHED ON : டிச 09, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு வாசகியை, சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. பிளஸ் 2 படித்த வாசகி, சட்டப்படியான திருமண வயதை அடையுமுன்னே வசதியான, பெரிய, சொந்தக்கார கூட்டுக் குடும்பத்தில் மணம் செய்விக்கப்பட்டவர். சந்தேக குணம் உடைய தன் கணவரால், எவ்வாறு துன்பம் அனுபவிக்கிறார் என்பதை அவர் கூற... 'இப்படியும் கணவர்களா?' என்ற பெரிய கேள்விக்குறி, என் மனதில்...

என் பெற்றோருக்கு மூத்தப் பெண் நான். அத்தை மகனுக்கு, திருமணம் முடித்தனர். பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்றே புரிந்து கொள்ளாமல், முதல் இரவன்றே நடந்து கொண்டார். அடிக்கடி சண்டைகள் ஏற்படும், அடுத்த, 10வது மாதத்தில் ஒரு குழந்தைக்கு தாய் ஆனேன்.

என்னை எங்குமே வெளியில் அழைத்துச் செல்ல மாட்டார். கடை வைத்திருக்கிறார்; நல்ல வருமானம் வருகிறது. பெண்கள் என்றால், அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர். நானும் அவருடைய கருத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லி, எவ்வளவோ எடுத்துக் கூறியும் திருந்தவில்லை.

குழந்தை பிறந்த ஓராண்டில், தனிக்குடித்தனம் போனோம். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஒரு நாள், 'பக்கத்து தெருவில் கோவில் கொடை முடியப் போகுது, சாமி கும்பிட்டு வருவோம், வா...' என்று கூப்பிட்டனர். 'நான் வரவில்லை, என் கணவர் வந்து விடுவார், ஏதும் பேசுவார்...' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நான் தம்பியிடம் சொல்லிக் கொள்கிறேன்...' என்று கூறி, அழைத்துப் போயினர்.

நான் கோவில் போய் சேரக் கூட இல்லை... சைக்கிளில், அங்கு வந்து விட்டார், என் கணவர். என்னை பார்த்து முறைக்கவும், சாமி கூட கும்பிடவில்லை. வீட்டிற்கு வந்து விட்டேன். 'அங்க எதற்கு போனே, எவனப் பார்க்க போனே...' என்று வசவு பேசி, நன்றாக குடித்து விட்டு வந்து பிறகும் திட்டினார்.

இதே மாதிரி பிறிதொரு நாள், மழை பெய்து கொண்டிருந்தது. கடையிலிருந்து என் கணவர் வர நேரமாகி விட்டது. அப்போது, இரண்டாவது குழந்தை உண்டாகி இருந்தேன். கதவை அடைத்து, படுத்து விட்டேன். மழை சத்தத்தில் கதவு தட்டப்பட்டது, கேட்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து போய் கதவை திறந்தேன்.

அதற்கு அவர், 'என்னடி... அப்படி நெனவு கெட்டத் துாக்கம். யாரை நினைத்து படுத்துக் கிடந்தே...' என்று, பேசினார். நானும் சத்தம் போட்டேன். அவர் பேசியது, என்னால் தாங்க முடியவில்லை. மண்ணெண்ணையை ஊற்றி, நெருப்பை பொருத்தப் போனேன்.

'எதற்காகத் தீயை பொருத்தப் போகிறாய்...' என்று கூறி, தானும் மண்ணெண்ணையை ஊற்றி பொருத்தப் போனார். நான் தீப்பெட்டியை பிடுங்கி, எறிந்து விட்டேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சத்தம் போட்டு, ஆறுதல் கூறினர்.

பின், எனக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சிறிது காலம் சந்தோஷமாக கழிந்தது. ஒரு நாள், சைக்கிளில் மீன் வைத்து விலை பேசிக் கொண்டிருந்தான், மீன்காரன். நான், 'என்ன மீன்?' என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கணவர் வந்து விட்டார். என்னை பார்த்து ஒரு முறை முறைத்து, 'உனக்கு அங்கு என்ன வேலை...' என்று தகாத வார்த்தைக் கூறி பேசினார்.

ஒரு நாள், வீட்டிற்கு வந்தார், என் மாமா. 'சாப்பிடுங்கள் மாமா' என்று சொன்னேன். 'குளித்து விட்டு சாப்பிடுகிறேன்...' என்று கூறி, குளித்து, சாப்பிட்டு போய் விட்டார். பின், என் கணவர் வரவும், 'மாமா வந்தார்... குளிச்சிட்டு சாப்பிட்டு போய் விட்டார்...' என்று சொன்னேன்.

உடனே, சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை விசிறி எறிந்தவர், தகாத வார்த்தைகளை கூறியும், 'நீ இருக்கிற வரை வீடு உருப்படாது. உங்க வீட்டுக்குப் போடி...' என்று, என் முடியைப் பிடித்து, தரதரவென்று வாசல்படி வரை இழுத்து வந்து விட்டார், என் கணவர். 'நான், எவள் வீட்டுக்கும் போகிறேனா, எவனும் எதுக்கு என் வீட்டுக்கு வாரான்...' என்று கூறி, என்னை உதைத்தார்.

அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம், என் வீட்டிற்கு வந்து விட்டனர். 'மச்சானுக்கு சோறு போட்டதற்காகவா பேசுவாங்க... வேறு எதற்காகவாவது இருக்கும்...' என்று பேசினர். எனக்கு பெரிய அவமானமாக இருக்கிறது.

எதற்காக இப்படி, குட்ட குட்ட குனிய வேண்டிய வாழ்க்கை வாழணும்... தப்பு செய்யாத போதும், ஏன் இப்படி அவமானப்பட வேண்டியுள்ளது. நான் யாருக்காக வாழணும்... விஷம் கூட வாங்கி வைத்து விட்டேன். பிள்ளைகளுக்கும் விஷ ஊசி போட்டு, நானும் தற்கொலை செய்யும் முடிவில் தான் உள்ளேன்.

எனக்கு, புகுந்த வீட்டிலும் ஆதரவு இல்லை; பிறந்த வீட்டிலும் ஆதரவு இல்லை. ஒரு வேலை இருந்தாலாவது, பிள்ளைகளுடன் தனியாக போய் விடுவேன். பிளஸ் 2 படித்த எனக்கு, என்ன வேலை கிடைக்கப் போகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை...

- இப்படியெல்லாம் புலம்பி, அழுது தீர்த்தார்.

மருமகளை... மகள் போல நினைத்து நடத்த வேண்டிய மாமனார், அவளையே பெண்டாள நினைத்தால்...

இப்படிப்பட்ட இக்கட்டில் சிக்கித் தவிக்கும், ஒரு வாசகி எழுதிய கடிதம் இது:

படிப்பு, மிருகத்தைக் கூட மனிதனாக்கும். இங்கு, எங்கோ‚ ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. வாசகியின் பிரச்னைக்கு தனிப்பட்ட கடிதத்தில் தீர்வு அனுப்பியுள்ளேன்.

கடிதம்:

என் கணவர், ஒரு டாக்டர். என் மாமனாரின் சூழ்ச்சியால், தகாத ஆசையால் எங்கள் திருமணம் நடந்தது. திருமணமான முதல் நாளே, என் கணவர் என்னை விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.

விருப்பமோ, ஆர்வமோ இல்லாமல், எங்கள் இல்லற வாழ்க்கை துவங்கியது. திருமணமான மூன்றாம் நாள், என் மாமனார் என்னை தனிமையில் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது தான் எனக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

என்னிடம், 'என் மகனுக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் தருகிறேன் என்று கூறினர். ஆனால், அந்த பெண்களை நான் தொட்டுப் பேச முடியாது என்பதால், அவனை கஷ்டப்பட்டு சம்மதிக்க வைத்து, இந்த திருமணத்தை நடத்தினேன்...' என்றார், அவர்.

நானும், என் கணவரும் தனிமையில் எங்கும் செல்வதை, சாமர்த்தியமாக தவிர்த்து வந்தார். அப்படி எங்கும் செல்லும்படி நேர்ந்தால், யாரையாவது துணைக்கு அனுப்பி விடுவார். இரவு, 11:00 மணிக்கு முன், என் கணவரை அனுப்ப மாட்டார். இந்நிலையில், என் மாமியாரோ, திருமணமாகாதவன் போல் நடந்து கொள்வது, தனக்கு சந்தோஷமாக இருப்பதாக, மகனிடம் கூறியிருக்கிறார்.

சும்மாவே என் மேல் விருப்பமில்லாத என் கணவர், என்னுடன் படுக்கையை மட்டுமே பகிர்ந்து கொண்டார். கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேனோ, அப்படியெல்லாம் என்னிடம் நடந்து கொண்டார், என் மாமனார்.

என் கணவரின் செயல்கள், எனக்கு வேதனை தர, மாமியாருக்கு சந்தோஷத்தை கொடுக்க, மாமனாருக்கு சாதகமாகி விட்டது. மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளான நான், மாமனாரை நேரடியாகவே கண்டித்தேன். அதற்கும் கட்டுப்படவில்லை என்றதும், கணவரிடம் கூறினேன். சில நாள் பிரச்னை ஓய்ந்திருந்தது; மீண்டும் தலை துாக்க ஆரம்பித்தது. மீண்டும் கணவரிடம் கூறினேன்; சிறிது மாற்றம் தெரிந்தது.

ஆனால், இது நிரந்தரமாக தீரவில்லை, பிரச்னை வளரும் என்று எனக்குத் தெரிகிறது. வேதனையை அனுபவித்த எனக்குத்தான், அதன் வலி புரிகிறது. இதனால், என் கணவரை, 'இவர் என் கணவர்' என்று என்னால் நினைக்க முடியவில்லை. புகுந்த வீட்டை, 'என் வீடு' என்று நினைக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட என் மனநிலையை மாற்ற வழி என்ன என்று கேட்டால், 'ஒன்று, நீ சாக வேண்டும்; இல்லை, நான் சாக வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னை முடியும்...' என்கிறார், கணவர்.

இப்போதெல்லாம், புகுந்த வீட்டில் உள்ளவர்கள் யாருடனுமே, சகஜமாகப் பழக என்னால் முடியவில்லை. இதற்கிடையில், பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கு நான் ஒரே வாரிசு; எனக்கு, ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. என் பிரச்னைக்கு தீர்வு என்ன என்று கூறுங்களேன்...

இந்த இரு வாசகியரின் சோகக் கதையைக் கேட்டு, உள்ளம் உருகி, மனம் கசிந்தது.

இருப்பினும், அவ்வுணர்ச்சிகளிலேயே ஆழ்ந்து விடாமல், விவேகமாக சிந்தித்து, அவர்கள் மனதில் எழுந்து, கொழுந்து விட்டு எரியும் தற்கொலை எண்ணம் அறவே மறையும்படி, அறிவுரைகளைக் கூறியுள்ளேன்.






      Dinamalar
      Follow us